

உண்மையுடன் நடந்தும் அவப்பெயர் எடுப்போர் இப்பூவுலகில் பலருண்டு. அப்படிப்பட்ட அவப்பெயர் நீங்கவும், ஆயுள் விருத்தி பெறவும் அருள்பாலிக்கிறார் புதுவை அருகேயுள்ள மாஹாளீஸ்வரர்.
புதுவை அருகே ஆரோவில்லையொட்டி வானூர் வட்டத்திலுள்ள இரும்பையில் அருள்மிகு மாஹாளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் முக்கியத் தலம் இது. மேலும் இக்கோயிலில் இறைவன் மூன்று முகலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
கடுவெளிச் சித்தர், இத்தலத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் சிவனை எண்ணித் தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது நாட்டில் சரியாக மழையில்லை. சித்தரின் தவத்தால்தான் நாட்டில் மழை பெய்யவில்லை என்று எண்ணிய மன்னன் ஒரு தேவதாசியின் மூலம் அவரது தவத்தைக் கலைத்தான். சித்தரிடம் சென்ற மன்னன் அவரிடம், நாட்டின் பஞ்ச நிலையைக்கூறி அதற்குக் காரணமாகச் சித்தரின் தவம் இருந்ததோ எனச் சந்தேகம் கொண்டு அவரை எழுப்பியதாகக் கூறினான்.
மன்னனின் பேச்சைக் கேட்ட சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் அங்கேயே தங்கி சிவப் பணி செய்து வந்தார். அதன் பின் நாட்டில் மழை பெய்தது. பஞ்சம் நீங்கியதால், சிவனுக்குத் திருவிழா எடுத்தனர். விழாவில் சுவாமி ஊர்வலமாகச் சென்றபோது, அவருக்கு முன்பாக சித்தரின் தவத்தைக் கலைத்த தேவதாசி நடனமாடிச் சென்றார். அப்போது, அவரது காலில் அணிந்திருந்த சிலம்பு கீழே கழன்று விழுந்தது. இதைச் சித்தர் பார்த்துவிட்டார்.
பழிச்சொல் சுமந்த சித்தர்
தேவதாசியின் நடனம் நிற்பதால், விழாவுக்குத் தடங்கல் வரக் கூடாதே என்று நினைத்த சித்தர், சிலம்பை எடுத்து தேவதாசி காலில் அணிவித்தார். இதைக் கண்ட மக்கள், சித்தரின் செயலைத் தவறாகப் பேசினர். கோபமடைந்த சித்தர் சிவனை நோக்கி, தன்னை தவறாக மக்கள் எண்ணிவிட்டனரே என்று வருந்தி சிவன் மீது பதிகம் பாடினார்.
தன் பக்தனான சித்தருக்கு சோதனை வந்ததால், கோயிலில் இருந்த சிவலிங்கம், மூன்று பாகங்களாக வெடித்தது. உண்மையை உணர்ந்த மன்னன், சித்தரிடம் மன்னிப்பு கேட்டான். சித்தரும் அவனை மன்னித்து சிவனை வேண்டி மற்றொரு பாடல் பாடினார். சிதறிய லிங்கத்தின் பாகங்கள் ஒன்று சேர்ந்தன. பின் சிவன், சித்தருக்குக் காட்சி தந்து முக்தி கொடுத்தார்.
இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் லிங்கம் மூன்று பாகங்களாகப் பிளந்து, மூன்று முகங்களுடன் இருக்கிறது. இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்புப் பட்டயத்தில் கட்டி வைத்துப் பூஜைகள் செய்கின்றனர். இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளைக் குறிக்கின்றன. மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது.
பேச்சு சரியாக வராதவர்கள், இசை கற்பவர்கள், இசைக் கலைஞர்கள் திருக்கோயிலுள்ள அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு, அதனை நாக்கில் தடவிக்கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் குரல் வளம் சிறக்கும், கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நெடுங்கால நம்பிக்கை.
கலா சந்திரன்
இக்கோயில் பிராகாரத்தில் சந்திரன், மேற்கு பார்த்தபடி தனிச் சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கையில் ஏடு ஒன்றை வைத்துக்கொண்டு ‘கலா சந்திரனாக' காட்சி தருகிறார். பக்தர்கள் இவருக்கு பால் சாதம் நைவேத்யமாகப் படைத்து வணங்குகின்றனர். இதனால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
நவக்கிரக சன்னதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் மனைவியுடன் இணைந்து இருக்கின்றன. இந்த தரிசனம் விசேஷமானது.
திருக்கோயில் கருவறையின் வெளியே கடுவெளிச் சித்தரின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. திருக்கோயின் முன்பு மாகாள தீர்த்தக் குளமும் உள்ளது. பழமையான இத்திருக்கோயிலுக்குச் சென்று வாழ்வில் வளம் பெறலாம்.