

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ரங்கநாச்சியார் (தாயார்) கோடைத் திருநாள் என்று அழைக்கப்படும் பூச்சாற்று உற்சவம் இன்று (மே 4) தொடங்குகிறது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் (தாயார்) சந்நிதியில் கோடைத் திருநாள் என்று அழைக்கப்படும் பூச்சாற்று உற்சவம் ஆண்டுதோறும் நடத்தப்படும்.
இந்த ஆண்டு இவ்விழா இன்று தொடங்கி, மே 13-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் இன்று முதல் 8-ம் தேதி வரை வெளிக்கோடை திருநாளும், மே 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை உள்கோடை திருநாளும் நடைபெறவுள்ளது. உள்கோடை நாட்களில் வீணை ஏகாந்த சேவை நடை பெறும்.
வெளிக்கோடை உற்சவத்தின் முதல் நாளான இன்று ஸ்ரீரங்க நாச்சியார் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வெளிக்கோடை மண்டபத்தை சென்றடைவார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின்னர் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மூல ஸ்தானத்தை சென்றடைவார்.