

திருமலை: கரோனா நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதால், திருப்பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் திருமலையில் குவிகின்றனர். இதனால் சர்வ தரிசனத்திற்கு தினமும் 35,000 பக்தர்களும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துகொண்டு ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன் பெற்ற 25,000 பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இவர்கள் மட்டுமின்றி, விஐபி பக்தர்கள், விஐபி சிபாரிசு கடிதம் மூலம் செல்லும் பக்தர்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஆர்ஜித சேவையில் பங்கேற்கும் பக்தர்கள் என தினமும் தற்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் நேற்று காலை நிலவரப்படி, திருமலையில் உள்ள வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் 15 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு, 6 மணி நேரத்திற்கு பின்னர் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். திங்கட்கிழமை மட்டும் சுவாமியை 65,763 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில், 33,758 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் மூலம் ரூ.4.29 கோடி காணிக்கை செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.