

மனிதனால் உருவாக்கப் படாதது மதிப்புமிக்கது என்று தாவோயிச ஞானிகள் கூறுவார்கள். மனிதனால் படைக்கப்பட்டதற்கு ஒப்பீட்டு மதிப்பு உண்டு; அதுதான் சந்தை மதிப்பு. ஆனால் அது மதிப்பற்றது. மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் எல்லாம் சரக்குதான். ஆம்! ஒரு சந்தைக்குச் சென்ற வெறுமையை விற்றால் யாரும் வாங்கமாட்டார்கள். அதற்கு மதிப்பு கிடையாது. மக்கள் சிரிப்பார்கள்.
லாவோட்சு ஒரு வனத்தின் வழியாகச் சென்றார். அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கான தச்சர்கள் அங்கே வெட்டப்பட்ட மரங்களை அறுத்துக் கொண்டிருந்தனர். அந்த வனத்தில் வெட்டப்படாமல் பிரம்மாண்டமான மரம் ஒன்று நின்றது. நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் அதன் கீழே நிழலுக்காக நிற்க முடியும். அந்த மரம் பசுமையாகவும் அழகாகவும் இருந்தது. லாவோட்சு தனது சீடர்களை அழைத்து, ‘ஏன் அந்த மரம் மட்டும் வெட்டப்படாமல் விடப்பட்டது’ என்று கேட்டுவரச் சொன்னார்.
‘அந்த மரத்தால் எந்தப் பயனும் கிடையாது’ என்று தச்சர்கள் பதிலளித்தனர். அந்த மரத்தை வைத்து அறைகலன்கள் செய்யமுடியாது; அது விறகாகவும் பயன்படாது; அடுப்பெரித்தால் புகை அதிகம் வரும் என்று பதிலளித்தனர்.
‘அந்த மரத்திடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். யாரும் உன்னை வெட்டமுடியாதவாறு அந்த மரத்தைப் போல பயனற்றிருங்கள்’ என்று தனது சீடர்களிடம் சொன்னார் லாவோட்சு.
பயனின்மை என்பதில் பெரும் மதிப்பிருக்கிறது.
லாவோட்சு மேலும் கூறினார்: பாருங்கள், அந்த மரத்தை நோக்குங்கள். அந்த மரத்திடமிருந்து கொஞ்சம் கற்றுக்கொள்ளுங்கள். அந்த மரம் எத்தனை பிரம்மாண்டமானதாக உள்ளது. நெடிதுயர்ந்து கம்பீரமாக அகந்தையை நினைவூட்டிக் கொண்டிருந்த அத்தனை மரங்களும் போய்விட்டன. இந்தப் பெரிய மரம் நேரானதில்லை. அதன் ஒரு கிளைகூட நேரானதில்லை. அதற்குப் பெருமிதமும் இல்லை. அதனால் அது இருக்கிறது.
நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமென்றால் பயனில்லாதவராக இருங்கள். ஒரு சரக்காகவோ ஒரு பொருளாகவோ நீங்கள் மாறிவிடாதீர்கள் என்பதைத்தான் லாவோட்சு சொல்கிறார். ஒரு பொருளாக நீங்கள் மாறினால், நீங்கள் சந்தையில் விற்கப்படுவீர்கள்; வாங்கவும்படுவீர்கள். நீங்கள் அடிமையாவீர்கள். நீங்கள் ஒரு பொருளாக மாறாவிட்டால் உங்களை யார் வாங்கமுடியும்? உங்களை யார் விற்க முடியும்.
கடவுளின் படைப்பாக இருங்கள். ஒரு மனிதச் சரக்காக எப்போதும் ஆகாதீர்கள். அப்படியானால் உங்களை ஒருவராலும் பயன்படுத்தவே முடியாது. ஒருவராலும் உங்களைப் பயன்படுத்த இயலாவிட்டால், உங்களுக்கென்று அழகான, சுயேச்சையான, சுதந்திரமான, மகிழ்ச்சிகரமான வாழ்க்கை இருக்கும். உங்களை ஒருவர் ஒரு பொருளாகக் குறைவுபடுத்திக் கையாள முடியாது. ஒருபோதும் உங்களை யாராலும் காயப்படுத்த முடியாது.
நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமென்றால் பயனில்லாதவராக இருங்கள். ஒரு சரக்காகவோ ஒரு பொருளாகவோ நீங்கள் மாறிவிடாதீர்கள். ஒரு பொருளாக நீங்கள் மாறினால், நீங்கள் சந்தையில் விற்கப்படுவீர்கள்; வாங்கவும்படுவீர்கள்.