

அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் செய்து அதனடியே விநாயகரையும், நாகராஜனையும் பிரதிஷ்டை செய்வது தொன்றுதொட்ட வழக்கு.
பனிக் காலத்துக்குப் பின் இலை உதிரும்போது இந்த மரங்களைப் பார்த்தால் இலையே இருக்காது. பிள்ளையாரும் நாகராஜனும் மரத்தின் நிழற்குடையில்லாமல் வெளிச்சம் தங்கள்மேல் படுகிற மாதிரி இருப்பார்கள்.
இது, இம்மாதிரி ஆகாசம் பார்க்க சுக உஷ்ணமான சூர்ய வெளிச்சத்தை ஆனந்தமாக அனுபவிக்கிற பருவ காலமாகவே இருக்கிறது. மழையிலே குடை வேண்டும்.
கொளுத்துகிற வெயிலில் குடை வேண்டும். கடும்பனிக் காலத்திலும் இராவேளையில் சூரியன் இல்லாதபோது ஆகாசம் பார்க்க உட்கார்ந்திருக்க முடியாது.
இப்போது சுகோஷ்ணமாக, மித வெப்பமாக இருந்தால் இவர்களை இப்படிச் சூரிய ஒளியில் உட்கார்த்தி வைத்திருந்தாலும், வசந்த காலம் வந்தவுடன், சூரியன் கொஞ்சம் உக்ரமானவுடன், அது அவர்களை உபத்திரவப்படுத்தக் கூடாது என்கிற கரிசனம் இயற்கை அன்னைக்கு வந்துவிடுகிறது.
சூரியன் கடுமையாகும் காலத்தில் துளிர்கள் தழைத்துப் பசுங்குடை பிடிக்கிறாள். இலையுதிர்ப்பது, துளிப்பது எல்லாம் இயற்கை; லோக நியதி; அவை யுகாந்தரங்களாக மாறாமல் நடப்பவை.
பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுக்கும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நியதி இருக்கிறது. அப்படி அவை நியதிப்படி நடப்பதால்தான் உலக வாழ்க்கை நடக்க முடிகிறது. இல்லாவிட்டால் எல்லாம் நெறிகெட்டுப் போய்விடும்.
அதாவது லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் சௌக்கியமாக வாழவேண்டும் என்கிற அன்பான எண்ணத்திலேயே அவை ஒன்றோடொன்று ஒத்துப் போவதற்காக இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு தர்மம், நியதி (law) ஈச்வரனால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
தன் குழந்தைகளை வெயில் படாமல், மழை படாமல் காப்பாற்ற வேண்டும்; அவர்களுக்கு இள வெயிலின் வெப்பம் தேவையாக இருக்கிறபோது அதைத் தந்து அரவணைக்க வேண்டும் என்கிற அன்பு ஈசுவரனுக்கு இருப்பதால் அதற்கு, அநுசரணையாக இயற்கையை நடத்தி வைத்து மரங்களுக்கு ஒரு நியதியை, தர்மத்தைத் தந்திருக்கிறார்.
இந்த அன்பைப் பெற நமக்கு யோக்யதாம்ஸம் வேண்டாமா? வேண்டும். மரத்துக்கும் மட்டைக்கும் இருக்கிற நியதி நமக்கும் உண்டு.
லோக க்ஷேமத்துக்காக அதை நாம் நடத்திக் காட்டுகிறபோதுதான் ஈசுவரனின் அன்பைப் பெற பாத்தியதையைக் கேட்கலாம். மனிதனுக்காக உள்ள இந்த நியதிக்கே தர்மம் என்று பெயர். இந்த நியதியை மீறவும் மனிதனுக்கு மூளையைத் தந்து சுவாமி விளையாட்டுப் பார்க்கிறார்.
அந்த மூளையை வைத்துக்கொண்டு இவனும் எதை எதையோ சௌக்கியமாக நினைத்துக்கொண்டு, அவற்றுக்காக அலைகிறான். இதில் தனக்கான தர்மத்தையும் மீறுகிறான். ஆனால் இறுதியில் சௌக்கியத்தைத் தருவது தர்மமே.
'லோகம் முழுவதையும் பகவானுடையதாகப் பார்த்து, அதற்கேற்ப எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடப்பதே மனுஷ்யர்களின் தர்மம். தனக்கென்று மட்டும் இவன் செய்துகொள்கிற காரியங்கள் இவனை அதர்மத்தில்தான் தள்ளும்.
எனவே, இப்போது இவனுக்கு இருக்கிற சுயநலத்தைக் குறைக்க வேண்டும். இவனுக்கு ஈசுவரனின் நினைப்பை உண்டாக்கி, அவனுடைய உடைமையே உலகமெல்லாம் என்ற அறிவை ஏற்படுத்த வேண்டும்' என்ற அடிப்படையில்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன.
‘உன் ஆசைப்படி நடந்துகொண்டு உனக்கேற்ற சொத்து சேர்த்துக் கொள்' என்று சொல்கிற மதம் எதுவுமே இல்லை.
‘எல்லோரிடமும் அன்பாக இரு; தியாகம் பண்ணு; சேவை பண்ணு' என்று இப்படி எல்லாம் இத்தனை மதங்களும் சொல்கின்றன. இப்படி இவன் வாழ்க்கை நடத்திவிட்டால் அப்புறம் உடம்பு போன பின் உயிரானது அந்தக் கடவுளிடமே போய்ச் சேர்ந்துவிடும்.
எந்த தர்மத்தை நாம் அநுஷ்டிப்பது என்ற குழப்பமே வேண்டாம். பல காலமாகப் பெரியவர்கள் பரம்பரையாக அநுஷ்டித்துவந்த தர்மத்தில் நாம் ஊறியிருக்கிறோம். அநுபவத்தில் அவர்கள் நித்திய ஸெளக்கியத்தை அடைந்திருக்கிறார்கள்.
ஸ்ரீராமனுக்கு வனவாசத்தில் ஏற்பட்ட கஷ்டம், ஆபத்து எல்லாம் பெரியவை. ஊருக்குப் போகும் குழந்தைக்குத் தாயார் கட்டுச் சாதம் கொடுப்பதுபோல், ராமன் வனவாஸம் செல்லும்போது கௌஸல்யையும் செய்தாள்.
‘பதினான்கு வருஷம் கெடாமலிருக்கும் பக்ஷணம் எது? குழந்தைக்கு எதைத் தரலாம்?' என்று நிரம்ப ஆலோசித்தாள் கௌஸல்யை. பிறகு நிரந்தர பக்ஷணமான தர்மத்தைத்தான் கட்டிக் கொடுத்தாள்.
“ராகவா! தைரியத்துடனும் நியமத்துடனும் நீ பாதுகாக்கும் தர்மமே உன்னைப் பாதுகாக்கும்” என்று சொல்லித் தர்மத்தை ராகவனுக்குத் துணை அனுப்பினாள்.
தர்மமே இறுதியில் ராமனுக்கு ஜயத்தைப் பெற்றுத் தந்தது. தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள்கூட அவனை ஆதரிக்கும்; அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகிவிடுவான் என்பதை ராமாயணம் நிரூபிக்கிறது. ஸ்ரீ ராமனை வானரங்களும் ஆதரித்தன. ராவணனையோ சகோதரன் விபீஷணனும் விட்டு விலகினான்.
தர்மமே தலை காக்கும். பத்துத் தலை ராவணன் விழுந்து நாசமாக, ஸ்ரீராமசந்திரமூர்த்தி விஜயராகவனாகத் தலை நிமிர்ந்து நின்றதற்குக் காரணம் தர்மம் தலை காத்ததுதான். அவரவருக்கும் முன்னோர்களால் அனுஷ்டிக்கப்பட்ட தர்மமே ஒவ்வொரு மதமாயிருக்கிறது. இந்த தர்மத்தை அவரவரும் தைரியமாக—நியாயமாக பின்பற்றிச் சாசுவத சௌக்கியத்தைப் பெறுவீர்களாக!
தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)