Published : 14 Apr 2016 08:51 AM
Last Updated : 14 Apr 2016 08:51 AM

வார ராசி பலன் 14-4-2016 முதல் 20-4-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 11-ல் கேது, 12-ல் சுக்கிரன் உலவுவதால் நல்ல தகவல் வந்து சேரும். முயற்சி வீண்போகாது. நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும். பிள்ளைகள் நலம் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். ஆன்மிக, அறநிலையப்பணிகளில் ஈடுபாடு கூடும். கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். சூரியனும் புதனும் ஜன்ம ராசியில் இருப்பதால் தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும்.

தொழில் நுட்பத்திறமை வெளிப்படும். 8-ல் செவ்வாயும் சனியும் இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டிவரும். அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் இருக்கவும். உடலில் சிறு காயம்படும். எக்காரியத்திலும் அவசரம் வேண்டாம். நிதானமாக செயல்படவும். வீண்வம்பு வேண்டாம். உடன்பிறந்தவர்களுக்கும் உங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்; பக்குவமாகச் சமாளிக்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 18, 19.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு.

‎நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 6, 7. ‎

பரிகாரம்: ராகு கால துர்கா பூஜை செய்வது நல்லது.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் கேது, 11-ல் சுக்கிரன் உலவுவது நல்லது. இதர கிரகங்கள் கோசாரப்படி அனுகூலமாக இல்லை. ராசிநாதனின் பலத்தால் உடல் நலம் சீராகவே இருந்துவரும். அந்தஸ்தும் மதிப்பும் உயரும். கலைத்துறை ஊக்கம் தரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களால் ஆதாயம் கிடைக்கும். பெண்களது முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும்.

ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். நிலபுலங்கள் லாபம் தரும். பிள்ளைகளால் செலவுகள் கூடும். அரசுப்பணிகளில் விழிப்புத் தேவை. நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் முளைக்கும். பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. வியாபாரிகளுக்கு நஷ்டம் உண்டாகும். விழிப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 18, 19.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.

எண்கள்: 6, 7.

பரிகாரம்: திருமாலை வழிபடவும்.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் செவ்வாயும் சனியும், 11-ல் சூரியனும் புதனும் உலவுவது சிறப்பு. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியமான எண்ணங்கள் சில நிறைவேறும். பணப் புழக்கம் அதிகமாகும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பயணத்தால் குறிப்பிட்ட காரியம் நிறைவேறும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அரசியல் ஈடுபாடு பயன்படும்.

நிர்வாகத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழிலால் ஆதாயம் கிடைக்கும். ஆராய்ச்சியாளர்கள் புகழோடு பொருளும் பெறுவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். தந்தையால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். வாரக்கடைசியில் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். நண்பர்கள், உறவினர்களால் அதிக நலம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள் : ஏப்ரல் 18, 19.

திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், கறுப்பு, பச்சை, வெண்மை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 5.

பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது.



கடக ராசி வாசகர்களே

சூரியன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். செவ்வாய் 5-ல் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் உண்டாகும். புதிய பதவிகளும் பட்டங்களும் வந்து சேரும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். அரசியல், நிர்வாகம், எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழில் லாபம் தரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, விழாக்களில் கலந்து கொள்வீர்கள். நிலபுலங்கள் லாபம் தரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். நல்ல தகவல் வந்து சேரும். மனத்துணிவு கூடும்.

போட்டிகளில் வெற்றி கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். பிற மொழி, மத, இனக்காரர்களால் தொல்லைகள் சூழும். பிள்ளைகளால் சில இடர்பாடுகள் ஏற்பட்டு விலகும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. கலைத்துறையினருக்குச் செழிப்புக் கூடும். தந்தை வழி சொத்துகள் கிடைக்கும். அரசு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இப்போது கூடிவரும். அரசுப்பணியாளர்களது நிலை உயரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 18, 19.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: பொன் நிறம், ஆரஞ்சு, சிவப்பு.

எண்கள்: 1, 3, 5, 6, 9.

பரிகாரம்: நாகத்துடன் கூடிய பராசக்தியை வழிபடுவது நல்லது.



சிம்ம ராசி வாசகர்களே

சுக்கிரன் ஒருவரே கோசாரப்படி அனுகூலமாக உலவுகிறார். செவ்வாய் 4-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். சூரியன் 9-ல் இருந்தாலும் தன் உச்ச ராசியில் இருப்பதால் நலம் உண்டாகும். முக்கியமான எண்ணங்கள் சில வார முன்பகுதியில் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.

நல்ல இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். உயர் பொறுப்புக்கள் தேடிவரும். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். சொத்துகள் சேரும். சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். அலைச்சலும் உழைப்பும் கூடும். என்றாலும் அதற்கான பயன் கிடைக்கும். பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகினால் அதிக நலம் பெறலாம். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்களுக்குத் திறமை வீண்போகாது. வாரப்பின்பகுதியில் எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 14 (முற்பகல்), 18, 19.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, இளநீலம், வெண்மை.

எண்கள்: 1, 6, 9.

பரிகாரம்: துர்கையம்மன், தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல் கேதுவும், 8-ல் புதனும் உலவுவது நல்லது. எடுத்த காரியத்தில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். புதிய சொத்துகள் சேரும். எதிரிகளின் கரம் வலுக்குறையும். திரவப்பொருட்கள் லாபம் தரும். இயந்திரப் பணியாளர்களுக்கு வருவாய் அதிகமாகும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். ஜாதகபலம் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

வாரப்பின்பகுதியில் செலவுகள் அதிகமாகும். சிக்கன நடவடிக்கை தேவை. பயணத்தால் சிறு சங்கடம் உண்டாகும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைப்பது நல்லது. அரசியல், நிர்வாகம், கலை, கூட்டுறவு துறையைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. வியாபாரிகள், மாணவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 14, 19.

திசைகள்: மேற்கு, வடக்கு, வடமேற்கு, தெற்கு.

நிறங்கள்: பச்சை, மெரூன், கருநீலம்.

எண்கள்: 5, 7, 8, 9.

பரிகாரம்: துர்கைக்கோ, காளிக்கோ செந்நிறப் பூமாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி, வழிபடவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x