Published : 07 Apr 2016 11:22 AM
Last Updated : 07 Apr 2016 11:22 AM

கோலாகல கும்பாபிஷேகம்: அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயில்

விடிந்தும் விடியாத காலைப்பொழுது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாரி சாரியாக மயிலை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயில் நோக்கி வந்துகொண்டிருந்தனர். மூலவர் கபாலீஸ்வரருக்கும் கற்பகாம்பாளுக்கும் அஷ்டபந்தனம், ஸ்வர்ணபந்தனம் பூசப்பட்டு, தயார் நிலையில் இருக்க, மற்ற பதினேழு சன்னிதிகளுக்கும் அஷ்ட பந்தனம் செய்யப்பட்டு, அவையும் தயார் நிலையில் இருந்தன.

காலை சரியாக 5 மணிக்கு பாவனா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன. 96 வகையான திரவியங்கள் பூர்ண ஆகுதியாக யாகங்களில் ஈசனுக்காக அர்ப்பணிக்கப்பட்டன. தானியங்கள், பழங்கள் ஆகியவை உட்பட 96 அஃறிணைப் பொருட்கள் கொண்ட இதனை திரவியாஹுதி என்கின்றனர்.

பரிகார பூரணாஹுதி என்பது பரிவார தெய்வங்களுக்குச் செய்யப்பட்ட யாகத்தில் சேர்க்கப்பட்டது. மேள, தாளங்கள் முழங்க, செண்டை வாத்தியங்கள் அதிர, கங்கை, யமுனை காவேரி உட்பட பல புனித தீர்த்தங்கள் சேர்த்து மந்திர உச்சாடனமும் செய்யப்பட்ட கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி அந்தந்த தெய்வங்களுக்குரிய கோபுரங்களுக்குச் சென்றனர்.

பிரதான மஹாபூர்ணாஹுதிக்குப் பின்னர் பிரதான தெய்வங்களான கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், நர்த்தன விநாயகர், சிங்காரவேலர் ஆகியோர்களுக்கான கலசங்கள் யாக சாலையில் இருந்து புறப்பட்டன. பத்தொன்பது கோபுரங்களிலும் அழகிய குடைகள் அலங்காரமாக அமைக்கப்பட்டிருந்தது கண் கொள்ளாக் காட்சி.

சரியாகக் காலை 8.45 மணிக்கு சமகாலத்தில் அனைத்து விமானங்கள், ராஜ கோபுரங்களுக்கும் மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக தர்ப்பைக் கூர்ச்சங்கள் கலசங்களைத் தொட்டவண்ணம் நிறுத்தி வைக்கப்பட்டன. இன்றைய காலத்தில் வானொலி, தொலைக்காட்சிக்கான அலைவரிசைகளை ஈர்க்கும் `ஆண்டனா` போல், அக்காலத்தில் ஆகாயத்தில் உள்ள சக்திகளை சாஸ்திரபூர்வமாக ஈர்த்துக் கலசத்தில் சேர்க்கும் என்பது நம்பிக்கை.

காலை 9 மணிக்கு நர்த்தன விநாயகர், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சிங்கார வேலர் உட்பட பரிவார மூர்த்தங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த நேரத்தில், நான்கு வேதங்களைக் குறிப்பது போலச் சரியாக நான்கு கருடன்கள் வட்டமிட்டன. கருடனை வேத சொரூபம் என்பார்கள். அதே நேரம் நீர் கொண்ட ஒற்றை மேகம், ராஜ கோபுரத்தின் மேல் பூந்தூறல் தெளித்தது. பின்னர் ஆசார்ய உற்சவம், தீர்த்த பிரசாத விநியோகம் நடைபெற்றன. யஜமான உற்சவத்திற்குப் பின்னர் 11 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இரவில் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா வந்தனர். தொடர்ந்து நாற்பத்தெட்டு நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும். இதில் கலந்துகொண்டாலும் மகா கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டதற்கு இணையான புண்ணிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இசை நாட்டிய விழா

கபாலீஸ்வரர் திருக்கோயிலில் அஷட்பந்தன, ஸ்வர்ண பந்தன கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை ஒட்டி, கலை விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 4 ம் தேதி தொடங்கிய இவ்விழாவில் முதல் நாள் நிகழ்ச்சியில் பாம்பே ஜெயஸ்ரீ பாடினார். பக்தர்கள் அமர நாற்காலிகள் போடப்பட்டு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏப்ரல் 13 ம் தேதி வரை தொடர்ந்து இசை நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 7 விஜய் சிவா, 8- ஜெயஸ்ரீ வைத்தியநாதன், 9- திருச்சூர் சகோதரர்கள் ஆகியோர் பாட உள்ளனர்.

நாட்டிய நிகழ்ச்சிகளாக கோளறு பதிகம், ஜெகதா பிதரா வந்தே, ஸ்ரீகிருஷ்ணரின் ஐந்து பரிமாணங்கள், நந்திகேஸ்வரர் ஆகிய நாட்டிய நாடகங்கள் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x