Published : 14 Apr 2016 08:27 AM
Last Updated : 14 Apr 2016 08:27 AM

இறைநேசர்களின் நினைவிடங்கள்: அரவிந்த தாள்மலரும் அதிகப் பிரகாசர் - தொண்டி அபூபக்கர் அப்பா

தொண்டி அப்பா, அல்ஆரிபு பில்லாஹி, குதுபுஸ் ஸமான் என்று பல பெயர்களைப் பெற்ற பெருமைக்குரிய இறைநேசர் அபூபக்கர் வலியுல்லா. அவருடைய தர்கா ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த மணல்மேடு பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.

வரமுந்து பெரியோர்கள் வாழ்த்தும் இறைநேசர்

மகாராஜ தவமாரும் மணல்மேடு வாசர்

அரவிந்தத் தாள்மலரும் அதிகப் பிரகாசர்

அபூபக்கர் ஷெய்கான குதுபுஸ்ஸமான்

என்று புலவர் போற்றும் தொண்டி அப்பா, கீழக்கரை இறைநேசர்களின் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். இவருடைய தந்தையார் முகியித்தீன் எனும் இயற்பெயரைக் கொண்ட ஷெய்கு முதலியார் சாகிபு, பாட்டனார் நெய்னா முகம்மது இருவரும் கீழக்கரையில் வாழ்ந்து மறைந்த ஞானிகள்.

ஷெய்கு அபூபக்கர், ஹிஜ்ரி 1130-ம் ஆண்டில் முதலியார் சாகிபு, முகம்மது உம்மா தம்பதியரின் புதல்வராகக் கீழக்கரையில் பிறந்தார். இளமைப் பருவத்திலேயே முறையாகக் கல்வி கற்று நிறைவான திறமையைப் பெற்றார். வாலிப வயதில் தொண்டியைச் சேர்ந்த மாமுனா லெப்பை என்பவரின் குடும்பத்தில் திருமணம் புரிந்து கொண்டார்.

ஞான மேதையாகவும், குருவாகவும் விளங்கிய அபூபக்கர் சிலமுறை நாகூருக்குச் சென்று ஷாஹுல் ஹமீது நாயகரைத் தரிசித்திருக்கிறார். அப்போது அங்கு நிகழ்ந்த சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தர்காவில் ஒரு சங்கிலி தொங்கிக் கொண்டிருந்தது. அதை யாராலும் தொட்டுப் பிடிக்க முடியவில்லை; ஞானகுருவாக பிற்காலத்தில் தர்காவைத் தரிசிக்க வருபவர்களால் தான் அதைத் தொடமுடியும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அவ்வப்போது வந்த சில இறைநேசர்களால் கூட அந்தச் சங்கிலியை எட்டிப்பிடிக்க முடியவில்லை. ஷெய்கு அபூபக்கர் தர்காவுக்கு வந்தபோது அந்தச் சங்கிலியின் பக்கம் கையை நீட்டியதுமே அது கைக்கு வந்து விட்டதாம்.

இந்த நிகழ்ச்சியை கீழக்கரை கல்வத்து நாயகம் எழுதிவைத்துள்ளார் அவரால் எழுதப்பlட்ட சதக்கத்துல்லா அப்பா சரித்திரத்தில் இது இடம்பெற்றுள்ளது. திருவை அமுதகவியின் ‘குதுபுஸ் ஸமான்’ கவிதைத் தொகுப்பிலும் இந்த நிகழ்ச்சி இடம் பெற்றிருக்கிறது:

எங்கும் இலங்கிய சங்கிலி தான்

நீர் ஏந்திக்கை நீட்டிடத் தாழ்ந்ததுவே ஊர்

அங்கும் புகழ்தங்கப் பொங்கும் பெரியோர்

அபூபக்கர் ஷெய்கான குதுபுஸ் ஸமான்

நாகூர் நாயகரின் நல்லாசியைப் பெற்ற தொண்டி அப்பா நிகழ்த்திய மற்றொரு நிகழ்ச்சி மறக்க முடியாதது. அக்காலத்துப் புதுச்சேரி ஆளுநர் நோயுற்றிருந்ததால் நிவாரணம் தேடி தர்காவுக்கு வந்தார். நாகூர் ஆண்டகை பயன்படுத்திய மிதியடி அவர் மீது பட்டதும் உடனடியாக குணமடைந்துவிட்டார்.

ஆளுநர் அந்த மிதியடிக் கட்டையை புதுச்சேரிக்கு எடுத்துச் சென்று விட்டார். தர்கா பொறுப்பாளர்கள் அதற்காக வருந்தினார்கள். அதைத் திரும்பப் பெற்று நினைவுப்பொருளாக தர்காவில் வைக்க வேண்டுமே என்ற கவலை அவர்களுக்கு. ஆளுநரிடமிருந்து அதைப்பெற வழியறியாமல் தவித்தார்கள்.

இந்தச் சூழ்நிலையில், நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகர் தர்கா தொண்டர் ஒருவரின் கனவில் தரிசனம் தந்து, ஆளுநரிடமிருந்து மிதியடிகள் திரும்பக் கிடைத்துவிடும் என்று சொன்னார்கள். அவற்றைப் பெற்றுத் தருவதற்காக ஒரு பெருமகன் வருவார் என்றும் கூறிவிட்டு மறைந்தார்கள்.

அதன்படியே நிகழ்ந்தது, புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநரிடமிருந்து நாகூர் ஆண்டகையின் மிதியடிகளைப் பெற்றுத் தந்தவர் தொண்டி அப்பா ஷெய்கு அபூபக்கர்.

தொண்டி அப்பா ஷெய்கு அபூபக்கர் அவ்வப்போது அற்புதங்களை நிகழ்த்திவந்தார். அவருடைய ஆன்மிக அரும்பணிகளும், அற்புதச் செயல்களும் பல மாநிலங்களிலும் பரவின. கர்நாடக நவாபு முகம்மது அலி வாலாஜாவுக்கும் எட்டியது. என்றாலும் நேரில் வந்து பார்த்தால் தான் அவருடைய மாண்பையும் மகிமையையும் ஒப்புக்கொள்ள முடியும் என்று கருதினார். அதனால் தொண்டிக்கு நேரடியாக அவர் வந்தார்.

நவாபுக்கும் சேதுபதிக்கும் நல்லிணக்கம்

அப்பாவின் வீட்டைச் சுற்றிலும் தென்னை மரங்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த நவாபு, ஒருபக்கத்தில் இருந்த மரத்திலிருந்து இளநீரை வெட்டிப் பருகக் கொடுப்பாரானால் அவரை இறைநேசர் வலியுல்லாவாகப் போற்றலாம் என மனதில் நினைத்தார். அவ்வளவு தான்! நவாபு வாய் திறக்கவில்லை. தொண்டி அப்பா நவாபின் எண்ணத்தை தமது உள்ளுணர்வின் மூலம் அறிந்து இளநீரை வெட்டிக் கொடுத்தார். நவாபு பேராச்சரியம் அடைந்தார். மெய்யான ஆசான் இவர் தான் என்று போற்றி தீட்சையும் பெற்றுக் கொண்டார்.

கர்நாடக நவாபு இன்னொரு வேண்டுகோளையும் அப்பாவிடம் முன்வைத்தார். ராமநாதபுர சேதுபதிக்கும் தனக்கும் இடையே நல்லுறவு இல்லை அதற்குப் பரிகாரம் செய்து வையுங்கள் என்று முறையிட்டார் ஒரு நாளைக் குறிப்பிட்டு இருவருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்பட்டுவிடும் என்று அப்பா முன்னுரைத்தார்

அதன்படி ஒருநாள் கோட்டைப்பட்டினத்தில் சேதுபதியும் நவாபும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இருவரும் நல்லுறவு ஒப்பந்தம் செய்து கொண்டனர். இந்த உடன்பாட்டினால் நவாபு மனம் மலர்ந்துபோனார். அப்பாவுக்கு நிதியை வாரிவழங்க முன்வந்தபோது காணிக்கை எதையும் பெற்றுக்கொள்ள இயலாது என்று கூறிவிட்டார். அபூபக்கர் அப்பாவின் புதல்வர்கள் முகம்மது அப்துல் காதிரும், அகமது ஜலாலுத்தீனும் காணிக்கை பெற முன்வரவில்லை. அதனால் நவாபு சில சுற்றுப்புற கிராமங்களுக்கு மானியமாக அந்த நிதியை வினியோகித்தார்.

இருவரும் சம்பந்தப்பட்ட மற்றொரு நிகழ்ச்சியும் தொண்டியில் வழங்கிவருகிறது. நவாபு முகம்மது அலி வாலாஜா,ஷெய்கு அபூபக்கர் வலியுல்லாவுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.” நான்கு குத்புமார்கள் (குருமார்கள்) ஒரு சமயத்தில் வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறதே, அவர்கள் யார் என்று தாங்கள் சொல்லவேண்டும்!” என்று கேட்டார்.

“ அந்த நால்வரில் ஒருவர் வண்டியோட்டியாக இருந்து வருகிறார். மற்றொருவர் மாட்டுக்கு லாடம் கட்டும் தொழில்புரிகிறார். இன்னொருவர் இப்பொழுது உமக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார். நான்காவது குத்புதான் இதோ உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்!” என்று தம்மைச் சுட்டிக்காட்டினார். முதலில் தெரிவித்த இருவரும் எந்தெந்த ஊரில் இருக்கிறார்கள் என்பதையும் சொன்னார். நவாபு பெரிதும் வியப்படைந்தார்..

ஷெய்கு அபூபக்கர் அவர்களின் ஆசியினால் தமக்குக் கிடைத்த வெற்றியையும் மனநிறைவையும் கருதி, தொண்டி மக்களுக்கு நவாபு மறைமுகமாக ஓர் அனுகூலத்தைச் செய்தார் தமது பரிவாரங்களுக்குத் தேவையான பொருள்களை ஊர் மக்களிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்வதற்கு ஏற்பாடு செய்தார். அதனால் பலர் பணவசதி பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

இறைநேசர் ஷெய்கு அபூபக்கர் ஹிஜ்ரி 1208-ஆம் ஆண்டு ரபியுல் ஆகிர் மாதம் பிறை 11 அன்று மறைந்தார். அப்போது அவருக்கு வயது 78. அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நவாபு ஒரு கட்டிடத்தை எழுப்பினார். பிறகு கீழக்கரை வள்ளல் ஹபீபு முகம்மது மரைக்காயர் தர்காவின் வெளிப்புறத்தை விரிவுபடுத்திக் கட்டினார்.

வாடாத மதிபோல வடிவா யெழுந்தீர் என்று போற்றப்படுகிறார் தொண்டி அப்பா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x