மகாவீரர் மொழி: உன்னை நம்பி வாழ்

மகாவீரர் மொழி: உன்னை நம்பி வாழ்
Updated on
1 min read

சித்திலபுத்திரன் என்ற மண்பாண்டத் தொழிலாளி, விதியை நம்புபவனாக இருந்தான். அவனுடைய மனநிலையை மகாவீரர் நன்றாக அறிந்திருந்தார். ஒருநாள் அவன் வீட்டு வழியே செல்லும் போது, வெயிலில் மண் ஜாடிகளைக் காய வைப்பதைக் கண்டார்.

“எப்படி வெயிலில் கிடந்து கஷ்டப்படுகிறேன் பாருங்கள் சுவாமி! எல்லாம் என் விதி'' என்றான் சித்திலபுத்திரன்.

புன்னகைத்த மகாவீரர், “மகனே! இந்த ஜாடிகள் பார்க்க அழகாக இருக்கின்றனவே! இவற்றை யாராவது உடைத்து விட்டால், அதை விதியென்று எண்ணி, உடைத்தவனை சும்மா விட்டுவிடுவாய் அல்லவா?'' என்றார்.

“அதெப்படி முடியும்? பட்ட பாடு வீணாகும்போது, கோபம் வரத்தானே செய்யும். தண்டித்து அனுப்புவேன். தேவைப்பட்டால் கொல்லவும் தயங்க மாட்டேன்'' என்றான் ஆக்ரோஷமாக சித்திலபுத்திரன்.

“எல்லாம் விதிப்பயன் என்கிறாய். ஆனால், இப்போது அதை ஏற்க மறுக்கிறாய். ஒன்றைப் புரிந்துகொள். வாழ்வு என்பது அவரவர் கையில் தான் இருக்கிறது. அதை அவரவரே ஆக்கவும் அழிக்கவும் முடியும்'' என்றார் மகாவீரர்.

மனம் திருந்திய சித்திலபுத்திரன்,“சுவாமி! என் அறிவுக் கண்ணைத் திறந்து விட்டீர்கள். இனி விதியை நம்புவதில்லை. என்னை நம்பி வாழ்வேன்'' என்றான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in