ராமனின் பெருமை பேசும் திருப்புகழ்

ராமனின் பெருமை பேசும் திருப்புகழ்

Published on

இறைவனால் `முத்து’ என்னும் வார்த்தை எடுத்துக் கொடுக்கப்பட்டு, அதையே முதல் வார்த்தையாக வைத்து திருப்புகழ் பாடல்களைப் பாடியவர் அருணகிரிநாதர். முருகப் பெருமானின் பெருமையை விளக்கும் போதே, அவரின் குடும்பத்தினர், உறவினர் என அனைவரின் பெருமையையும் சேர்ந்தே புகழும் இயல்புடையது திருப்புகழ்.

ராமாயணத்தின் பல காட்சிகளையும் திருப்புகழில் நம் மனக் கண் முன் தரிசனப்படுத்துகிறார் அருணகிரிநாதர். ராமனின் பாலப் பருவம் தொடங்கி, வாலிபப் பருவம், சிவதனுசை முறித்து, சீதையைக் கைபிடித்தல், தந்தையின் கட்டளைப்படி லட்சுமணன் மற்றும் சீதையுடன் காட்டுக்குச் செல்லுதல், இலங்கைக்கு சென்று ராவணனை அழித்து சீதையை மீட்டுவருதல் எனப் பல சம்பவங்களை, திருப்புகழில் தகுந்த இடங்களில் பாடியிருக்கிறார் அருணகிரிநாதர்.

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் ஆகியவை பெண்ணுக்கான ஏழு பருவங்கள். ஆணுக்கு, காப்பு, தாலம், செங்கீரை, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகிய பத்து பருவங்கள் இருக்கின்றன. பாலகன் ராமனுக்கு உணவூட்டும் கோசலைக்கு போக்குகாட்டி விளையாடுகிறான் ராமன். அவனுக்கு அமுதூட்ட, 10 முறை கோசலை அழைக்கிறாள்.

எந்தை வருக, ரகுநாயக வருக

மைந்த வருக, மகனே இனி வருக

எண்கண் வருக, எனதாருயிர் வருக அபிராம

இங்கு வருக அரசே வருக முலை

உண்க வருக மலர் சூடிட வருக

என்று பரிவினொடு கோசலைபுகல வருமாயன்

- என்று ராமனை வர்ணிக்கிறார் அருணகிரிநாதர்.

சீதையை லஷ்மியின் திருவுருவாகவே அவரின் பாடல்களில் கொண்டாடும் அருணகிரியார், ஜனகனின் மகள் என்னும் பொருள்பட, ஜனகமன் அருள்திரு என்றும் மின்மாது என்றும் அழைக்கிறார்.

பத்துத்தலை தத்தக் கணைதொடு என ராமபாணத்தால் ராவணனின் பத்துத் தலைகள் மட்டும் விழவில்லை, மறையவில்லை. ராவணனின் பத்துத் தலைகள் என்பது ஒரு குறியீடு. ராவணனின் பத்துத் தலைகளும், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கன்மேந்திரியங்களைக் குறிப்பன. இந்திரியங்களால் ஆட்டிப்படைக்கப்படும் ஒவ்வொரு மனதும் ஒரு ராவணன்தான். இதிலிருந்து நாம் மீள்வதற்கான வழியே ராமநாமப் பாராயணம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in