Published : 21 Apr 2016 11:34 am

Updated : 21 Apr 2016 11:34 am

 

Published : 21 Apr 2016 11:34 AM
Last Updated : 21 Apr 2016 11:34 AM

பைபிள் கதைகள் 3: பெருவெள்ளமும் நோவா கப்பலும்

3

பூமியை உருவாக்கிய கடவுள், அதை மேலும் அர்த்தமுள்ளதாக்க விரும்பினார். எனவே ஆதாம் ஏவாள் வழியாக மனித இனத்தைப் படைத்தார். ஆனால் சாத்தான் காட்டிய பேராசைக்கு அடிமையானதால் அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். இதனால் கடவுள் பூமியில் வழங்கிய சொர்க்கமாகிய ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். கடும் உழைப்பைக் கொடுத்து உணவைத் தேடித் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆதாம் ஏவாளின் மகன்களில் இளையவனான ஆபேலை அவனது அண்ணன் காயீன் பொறாமையால் கொலைசெய்துபோட்டான். பூமியில் வன்முறைக்கு வித்திட்ட காயீனை அவன் வாழ்ந்த இடத்திலிருந்து கடவுள் வெளியேறச் செய்தார்.

மனித இனத்தில் கலப்படம்

ஆதாமின் பிள்ளைகள் மூலமும் அவர்களது வழித்தோன்றல்கள் வழியாகவும் மனித இனம் பெருகி நின்றது. இதைச் சாத்தானால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே மனித இனத்தைக் குறுக்கு வழியில் வீழ்த்த நினைத்தான். எல்லோரையும் கெட்டவர்களாக்க அவன் முயற்சி செய்தான். வானுலகில் கடவுளின் ஊழியர்களாக இருந்த தேவதூதர்களிடம் ‘பூமியில் கடவுள் படைத்த மனித இனத்தில் அழகிய பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை மணந்துகொள்ளுங்கள்’ என்று ஆசை வார்த்தைகள் காட்டினான்.

பல தூதர்கள் அவனது தூண்டிலில் சிக்கி பூமிக்கு வந்தார்கள். பெண்களைக் கட்டாயப்படுத்தி மணந்து கொண்டார்கள். இதனால் மனித இனத்தில் கலப்படம் நிகழ்ந்தது. சாத்தானுக்கு அடிமையான தேவதூதர்களுக்கும் மனிதப் பெண்களுக்கும் பிறந்த பிள்ளைகள் முரட்டு மனிதர்களாகவும் அதிக உடல்பலம் கொண்டவர்களாகவும் சாகசங்கள் செய்பவர்களாகவும் இருந்தார்கள். இதனால் மற்றவர்களைப் பயமுறுத்தி அடக்கி ஒடுக்கினார்கள். மற்றவர்களைப் பயமுறுத்தி கெட்ட காரியங்களைச் செய்யும்படி வற்புறுத்தினார்கள். எதிர்த்தவர்களைக் கொன்று போட்டார்கள். இதனால் பூமி பாவப்பட மனிதர்களின் இருப்பிடமாய் மாறியது. இப்படிப்பட்ட நிலையிலும் மனித இனத்தில் பரலோகத் தந்தைக்கு கீழ்ப்படிந்து தெய்வபயத்துடன் ஒரேயொரு குடும்பம் மட்டும் வாழ்ந்து வந்தது. அது நோவாவின் குடும்பம்.

நோவாவைத் தேர்வு செய்த கடவுள்

ஆதாமின் வழித்தோன்றலான லாமேக்கிற்கு 182 வயதானபோது அவனுக்குப் பிறந்த மகனே நோவா. நோவாவுக்குப் பெயர் சூட்டியபோது “ நாம் விவசாயிகளாகப் பாடுபடுகிறோம். ஏனென்றால் தேவன் பூமியைச் சபித்திருக்கிறார். ஆனால் நோவா, நமக்கு இளைப்பாறுதலை அளிப்பான்” என்று லாமேக் கூறினார். அது உண்மையாயிற்று. நோவா தன் தந்தையைப்போலவே நேர்மையான மனிதனாக இருந்தார். எனவே நோவாவைக் கடவுள் தேர்ந்துகொண்டார்.

நோவாவுக்கு 500 வயதானபின் அவருக்கு சேம், காம், யாப்பேத் ஆகிய மகன்கள் பிறந்தனர். நோவானின் குடும்பம் கடவுளுக்கு உகந்த குடும்பமாக வாழ்ந்துவந்தது. நோவா குடும்பத்தைத் தவிர மொத்த மனித இனமும் சாத்தான் காட்டிய தீய வழியில் வாழ்ந்துகொண்டிருந்தது. எங்கும் வன்முறை பரவியிருந்தது. மக்கள் கொடூரமானவர்களாக மாறியிருந்தனர். இதனால் மனிதர்களைப் பூமியில் படைத்ததற்காகக் கடவுள் மிகவும் வருத்தப்பட்டார். தீய மனிதக் கூட்டத்தையும், மிருகங்கள், ஊர்வன, பறப்பன ஆகியவற்றையும் அழிக்க முடிவு செய்தார்.

எனவே பரலோகத் தந்தை நோவாவை அழைத்தார். “கொப்பேர் மரத்தைப் பயன்படுத்தி மூன்று தளங்கள் கொண்ட ஒரு பெரிய கப்பலைச் செய். கப்பல் 450 அடி நீளமும், 75 அடி அகலமும், 45 அடி உயரமும் கொண்டதாக இருக்கட்டும். அதில் பல அறைகளை ஏற்படுத்து. உள்ளும் புறம்புமாகத் தார் பூசி செம்மைப்படுத்து. தேவையான உணவைக் கப்பலில் சேமித்து வை. கவனமாகக் கேள். நான் பூமியில் ஒரு பெரிய வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி வானத்துக்குக் கீழேயுள்ள அனைத்து உயிர்களையும் அழிப்பேன். எனவே நீயும் உன் மனைவியும் உன் மகன்களும், மகன்களின் மனைவிமார்களும் கப்பலுக்குள் போய்விடுங்கள். பூமியிலுள்ள அனைத்து உயிர்களிலும் ஆண், பெண் என இணையாகத் தேர்ந்தெடுத்துக்கொள். கப்பலில் அவை உயிரோடு இருக்கட்டும்” என்றார்.

நோவா கடவுள் சொன்னபடியே எல்லாவற்றையும் சரியாகச் செய்து முடித்தான். கடவுள் சொன்னபடியே விலங்குகள், பறவைகள் அனைத்தையும் கப்பலில் ஏற்றித் தன் குடும்பத்துடன் கப்பலில் ஏறி அமர்ந்துகொண்டான்.

பெருவெள்ளமும் புதிய வாழ்க்கையும்

கடவுள் பெருமழையை வரவழைத்தார். 40 இரவுகளும் 40 பகல் பொழுதுகளுமாகத் தொடர்ந்து மழை கொட்டித்தீர்த்தது. மழையைத் தொடர்ந்து வெள்ளம் பெருகியது. அவ்வெள்ளம் கப்பலைத் தரையிலிருந்து மேல் நோக்கிக் கிளப்பியது. தீய மனிதர்கள் உட்பட உலகில் உள்ள அனைத்து உயிர்களும் மடிந்தன. நோவாவும் அவனது குடும்பத்தினரும் உயிர் பிழைத்தனர். வெள்ளமானது தொடர்ந்து 150 நாட்கள் பூமியில் பரவியிருந்தது. பிறகு கடவுள் தண்ணீரை வற்றச் செய்து, நோவாவின் கப்பலை அரராத் என்ற உயரமான மலையின் மீது தரை தட்டச் செய்தார். நோவா கப்பலின் ஜன்னலைத் திறந்து, ஒரு புறாவை வெளியே அனுப்பினார். ஆனால் தண்ணீர் இன்னும் பூமியில் பரவியிருந்தது. எனவே புறா மீண்டும் கப்பலுக்கே திரும்பி வந்தது.

மேலும் பல நாட்களுக்குப் பிறகு நோவா மீண்டும் புறாவை அனுப்பினார். அன்று மாலையில் திரும்பி வந்த அப்புறா தனது வாயில் ஒலிவ மரத்தின் துளிர்த்த சிறு கிளை ஒன்றை கவ்விப்பிடித்தபடி வந்தது. இதன் மூலம் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டது என்பதை அறிந்துக்கொண்டார். மேலும் பல நாட்கள் கழித்து புறாவை வெளியே அனுப்பியபோது. அது திரும்ப வரவே இல்லை. எனவே அதன் ஜோடிப் புறாவையும் மற்ற விலங்குகள் பறவைகளையும் பூமியில் இறங்க நோவா அனுமதித்தார். அதுவே புதுப்பிக்கப்பட்ட பூமியில் முதல் ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளாக ஆயிற்று.

உடன்படிக்கையின் அடையாளம்

தனக்கு கீழ்ப்படிந்து நடந்த நோவாவுடனும் அவனது வாரிசுகள் மற்றும் மீட்கப்பட்ட உயிர்களோடும் கடவுள் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார். “ பூமியை இனியொரு முறை நான் வெள்ளப் பெருக்கால் அழிக்க மாட்டேன். இதற்கு அடையாளச் சின்னமாக மேகங்களுக்கு இடையே வானவில்லை உருவாக்கியிருக்கிறேன். எனக்கும் பூமிக்குமான உடன்படிக்கைக்கு இதுவே அத்தாட்சி” என்றார். அப்போது பூமியில் முதல் வானவில் தோன்றியது.
பைபிள் கதைகள்பெருவெள்ளம்நோவாகப்பல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x