Published : 07 Apr 2016 11:32 am

Updated : 07 Apr 2016 11:32 am

 

Published : 07 Apr 2016 11:32 AM
Last Updated : 07 Apr 2016 11:32 AM

காருக்குறிச்சியின் நாத சுகம்

நினைவு தினம் ஏப்ரல் 8

தமிழகத்தில் அண்மைக்காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய நாகஸ்வரக் கலைஞர் காருக் குறிச்சி அருணாசலம். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காருக்குறிச்சி எனும் ஊரில் 1907-ம் ஆண்டில் இவர் பிறந்தார். இவருடைய தந்தை பலவேசம் நெல்தானிய அளவை செய்யும் பணியைச் செய்துவந்தவர்.


ஒரு முறை காருகுறிச்சியிலுள்ள பெரும் பண்ணையார் ஒருவர் இல்லத் திருமணத்துக்கு கூறைநாடு நடேசபிள்ளை எனும் பிரபல நாகஸ்வர வித்வான் நாகஸ்வரம் வாசிக்கச் சென்றிருந்தார், அப்போது அருணாசலத்தின் தந்தை பலவேசம், அந்த நாகஸ்வர வித்வான் தங்கியிருந்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்து மாலைகள் கட்டிக்கொண்டிருந்தார். “மாப்பிள்ளை புறப்படத் தயார், உங்களை அழைத்துவரச் சொல்கிறார்கள்” என்று நடேசபிள்ளைக்கு ஆள் வந்தது. “பத்து நிமிடங்களில் கிளம்பி வருகிறோம் என்று சொல்” என்று அவர் வந்த ஆளிடம் சொல்லியனுப்பினார்.

இதுபோலப் பல ஆட்கள் வந்தழைப்பதும், “இதோ கிளம்பிவிட்டோம்” என்று நடேசபிள்ளை சொல்வதுமாகவே இருந்தது. அந்தப் பண்ணையார் தனது வார்த்தைக்கு யாரும் கட்டுப்படவில்லையென்றால் அவர்களைக் கொன்றுபோடக் கூடத் தயங்க மாட்டார். “இந்த நாகஸ்வரக்காரர் இப்படி அலட்சிய மாகயிருக்கிறாரே, என்ன ஆகப் போகிறதோ” என்ற கவலை மிகந்தது பலவேசத்துக்கு இறுதியாகப் பண்ணையாரே நேரில் வந்துவிட்டார். “இதோ வந்துகொண்டே இருக்கிறோம், நீங்கள் முன்னால் போய்க்கொண்டிருங்கள்” என்று அப்போதும் நடேசபிள்ளை கூறியபோது, “அதற்கென்ன, தங்கள் சௌகரியம் போல் வாருங்கள்” என்று சிறிதும் கோபமற்றவராகப் பண்ணையார் கூறிச் சென்றதைக் கண்ட பலவேசத்துக்கு இது மிகவும் ஆச்சரியத்தை உண்டாக்கியது.

‘ஆஹா! இவர் ஒரு பெரிய நாகஸ்வர வித்வான்; இவரிடமுள்ள கலை எவ்வளவு மதிப்புடையதாயிருந்தால் நமது பண்ணையார் இவ்வாறு சிறிதும் கோபம் கொள்ளாதிருப்பார்! இந்தக் கலையைப் பயில வேண்டும், அப்போதுதான் நமக்கும் மதிப்பு கிடைக்கும்’ என்ற முடிவு செய்த பலவேசம், சேரன்மகாதேவியிலிருந்த நாகஸ்வரக் கலைஞர் ஒருவரிடம் சீடரானார். வயதும் இதரச் சூழ்நிலைகளும் அவரது ஆசைக்கு இடையூறாக இருந்தன. தன்னால் சாதிக்க முடியாதவொன்றைத் தன் மகன் அருணாசலமாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு.

அருணாசலத்தை, சுத்தமல்லி சுப்பையா கம்பரிடம் நாகஸ்வரமும், களக்காடு சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் கற்றுக்கொள்வதற்காகச் சேர்த்துவிட்டார். ஓரளவு தேர்ந்த பின், அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கச்சேரிகளும் அருணாசலத்துக்குக் கிடைத்தன. எனினும், உலகிலேயே நாகஸ்வரத்தில் ஈடிணையற்ற சக்கரவர்த்தியாக விளங்கும் திருவாவடுதுறையார் போன்ற ஒருவரிடம் சீடனாக ஆனால் தனது கலை மேன்மை பெறும் என்றும், அப்படியொரு நல்வாய்ப்பு தனக்குக் கிட்டுமா? என்றும் சிந்தனைவயப்பட்டார் அருணாசலம்.

ஈடேறிய கனவு

ஒருமுறை காருக்குறிச்சியிலுள்ள ஒரு பண்ணையில் நாகஸ்வரம் வாசிக்க வந்திருந்தார் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை. அவருடன் வாசித்து வந்த ‘கக்காயி’ நடராஜசுந்தரத்துக்கு உடல்நலமில்லை. “யாரேனுமொரு பையன், அவன் சும்மா சத்தம் கொடுத்தால் போதும். ஒத்தாசைக்குக் கிடைப்பானா?” என்று தம் நண்பர்களிடம் கேட்டார் திருவாவடுதுறையார். மணிசர்மா என்பவர் உடனே ஓடிச் சென்று அருணாசலத்தை அழைத்து வந்து அறிமுகம் செய்வித்தார்.

“பையன் தேவலாமே. இவன் சில காலம் என்னோடு இருக்கட்டும்” என்று ராஜரத்தினம் பிள்ளை கூறினார். இவ்வாறு 26.6.1935 அன்று ராஜரத்தினம் பிள்ளையின் சீடராக ஆனார் அருணாசலம். தனித்து, அமர்ந்து, முறைப்படியெல்லாம் கற்பிப்பவரல்ல திருவாவடுதுறையார். வீட்டில் இருக்கும்போதெல்லாம் வாசித்துக்கொண்டிருப்பார். அதைக் கவனமாகக் கேட்பது, கச்சேரிகளில் கூட அமர்ந்து கேட்பது இவைதான் பயிற்சி. கற்பதைக் காட்டிலும், இசையில் ‘கேள்வி’ பெரும் பயனைத் தரும்.

இப்படியாக, ராக ஆலாபனை செய்வது, அழகாகக் கீர்த்தனைகளை வாசிப்பது போன்ற பல அம்சங்களில் நிகரற்றவராக ஆனார் அருணாசலம். பாராட்டுகளும் பட்டங்களும் சன்மானங்களும் வந்து குவிந்தன. ராஜரத்தினம் பிள்ளைக்குப் பின்பு, மிக உயர்வான ஸ்தானம் அவருக்குக் கிடைத்தது. அப்படிப்பட்ட நிலையிலும் சிறிதும் கர்வமில்லாமல், எல்லோரிடத்தும் அன்புடனும் பண்புடனும் பழகிவந்தார் அருணாச்சலம்.

தன்னை மறக்கும் கலை

ஒருமுறை சென்னை பனகல் பார்க் அருகே திருமண விழா ஒன்றில் முதல் நாள் மாப்பிள்ளை அழைப்புக்கு நாகஸ்வர சக்கரவர்த்தி டி.என். ராஜரத்தினம் பிள்ளையின் நாகஸ்வர கச்சேரி. சமூகத்தின் பலதரப்பட்ட மக்களிடமும் அவருக்கு அமோக செல்வாக்கு. ராஜரத்தினம் பிள்ளை நாகஸ்வரம் வாசிக்கும்போது அநேகமாகத் தன்னை மறந்து கண்களை முடிக்கொள்வார். தன்னை மறந்த அந்த நிலையிலேயே, மிக எளிதில் சில ஸ்வரங்களை உதவியாகக் கொண்டு வாசித்துக்கொண்டிருப்பார்.

இந்தத் திருமண நிகழ்விலும் அவர் தன்னை மறந்த நிலையில் வாசித்துக்கொண்டிருந்தார். திடீரென அவரது வாசிப்பு நின்றது. ஆனால், கண்களை மட்டும் திறக்கவில்லை. அருகிலேயே அவரது சிஷ்யப்பிள்ளை காருக்குறிச்சி தொடர்ந்து வாசித்துக்கொண்டிருந்தார். அருகில் இருந்து வாசித்துக்கொண்டிருந்த அருணாச்சலத்துக்கு கை, கால் உதறல் எடுக்கத் தொடங்கிவிட்டது. வாசிப்பில் தான் ஏதாவது தவறு செய்துவிட்டோமோ என்று அவருக்குள் ஒரு பயம். பயந்தபடியே தனது குருநாதரை ஏறிட்டுப் பார்த்தார். குருநாதரோ ரசித்துக்கொண்டிருந்தார்.

தேடிவந்த பிராபல்யம்

ரசிகர்களுக்குக் காருக்குறிச்சியாரிடம் இருந்த மதிப்புக்கும் அன்புக்கும் ஈடுகூற முடியாது. ஒருமுறை, சென்னைத் தமிழிசைச் சங்கத்தின் இசை விழாவில் நடைபெற்ற அருணாசலத்தின் நாகஸ்வரக் கச்சேரியை வானொலி நிலையத்தினர், வழக்கத்துக்கு மாறாக, நள்ளிரவு 12 மணி வரையிலும் நேரடியாக ஒலிபரப்பினார்கள் என்றால், மக்களுக்கு அருணாசலத்தின் இசையின் மீது இருந்த மதிப்பே காரணமாகும்.

காருக்குறிச்சியாரிடம் புகழ்பெற்ற தவில் கலைஞர்கள் பலர் வாசித்து வந்தனர். திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல் பிள்ளை, யாழ்ப் பாணம் தட்சிணாமூர்த்தி பிள்ளை போன்றோரை முக்கியமாகக் குறிப்பிடலாம்.

அருணாசலம் தனது நாகஸ்வர இசையைக் கிராமபோன் இசைத்தட்டுகளில் பதிவு செய்திருப்ப தோடு, சில திரைப்படங்களிலும் வாசித்துள்ளார். ‘கொஞ்சும் சலங்கை’ என்ற திரைப்படத்தில் எஸ். ஜானகி பாட அருணாச்சலம் நாகஸ்வரம் வாசித்துள்ள ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடல் மிகவும் பிரபலமானது. ‘அனார்கலி’ என்ற இந்திப் படத்தில் லதா மங்கேஷ்கர் ஒரு பாட்டு பாடுவார். அந்தப் பாடலை காருக்குறிச்சி தனது நாகஸ்வரத்தில் இசைத்திருப்பார்.

புகழேணியின் உச்சியை எளிதாகவும், விரைவாகவும் எட்டிப்பிடித்த சிறந்த நாகஸ்வர விற்பன்னரான காருக்குறிச்சி அருணாச்சலம் 8.4.1964 அன்று தன் கோவில்பட்டி இல்லத்தில், இயற்கையைத் தழுவி, இசை ரசிகர்களுக்குப் பேரிழப்பை உண்டாக்கினார்.

காருக்குறிச்சி வாசிப்பில் உள்ள சுகம் ரசிகர்களுக்கு ஒரு போதை. நாகஸ்வரம் இருக்கின்ற வரையில், இசை இருக்கின்ற வரையில் அவருடைய பெயர் நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு மகா வித்வான் அவர்!

தவறவிடாதீர்!


    நாகஸ்வரக் கலைஞர்காருக்குறிச்சி அருணாசலம்நாதஸ்வரக் கலைஞர்நாதஸ்வரக் கலைஞர் நினைவு தினம்மகா வித்வான்

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author