

எந்த மதத்தைச் சேர்ந்த சகோதராக இருந்தாலும் ஜெபம் செய்வது இறைவனோடு நட்பு பாராட்டவும் அவரைத் தொடர்புகொள்ளவும் முக்கியக் கருவியாக இருக்கிறது. கிறிஸ்தவத்தில் கடவுளாகிய தேவன் யார், அவரைத் தொழுதுகொள்ளும் வழிமுறை என்ன என்பதைத் தெளிவுற எடுத்துக்காட்டுகிறது விவிலிய வேதம். ‘பெற்றுக்கொள்ளும்படி ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது…’ என்ற இந்தப் புத்தகம் ஜெபம் பற்றிய தெளிவான புரிதலை மிக எளிமையாக நமக்கு அளிக்கிறது.
கிறிஸ்தவ வாழ்வில் ஜெபம் செய்ய வேண்டுமென்பது முக்கிய ஆன்மிகக் கருத்தாக இருந்தாலும், அத்தகைய ஆன்மிக சாதனத்தைத் தெரிந்தே தவறவிடுவது கிறிஸ்தவ வாழ்வில் அதிகரித்துவருவதால், அதைச் சீர்திருத்திக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் கண்டிப்புடன் எடுத்துக்காட்டுகிறது.
நமது கஷ்ட காலத்தில் மட்டுமே நாம் ஜெபத்தை நாட முயல்கிறோம். நெருக்கடியான நேரத்தில் தேவன் உங்கள் ஜெபத்துக்குக் காதுகொடுப்பார் என்றாலும், விசுவாசம் ஜெபத்தின் அடிப்படை அமைப்பாக இருக்கிறது என்பதை நம்மில் பெரும்பாலானோர் உணர்வதில்லை. எனவே தேவனுடைய சித்தம், தேவனுக்கு நம்மைப்பற்றிய நோக்கமென்ன என்பதை முதலில் புரிந்துகொண்டால்தான் உங்கள் ஜெபம் அவரால் கேட்கப்படும் என்பதையும் தெளிவுற எடுத்துக் காட்டுகிறது கிறிஸ்தவ இறை ஊழியரான வி.செ. இம்மானியேல் விவிலிய வழியில் நின்று எழுதியிருக்கும் இந்நூல்.
ஜெபிக்கும் விதத்தைப் புரிந்துகொள்ள முயலும் ஒவ்வொருவரும் திடமான வழியை இந்நூல் வழியே கண்டடையலாம்.
பெற்றுக்கொள்ளும்படி ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது…
வி.செ.இம்மானியேல்,
குமரன் நகர்,
கிறிஸ்து ஆலைய வெளியீடு,
எண்.29ஏ, தேவாலயத் தெரு,
குமரன் நகர், சென்னை 82
தொடர்புக்கு 044 25502835