Published : 28 Apr 2016 12:12 pm

Updated : 28 Apr 2016 12:12 pm

 

Published : 28 Apr 2016 12:12 PM
Last Updated : 28 Apr 2016 12:12 PM

பைபிள் கதைகள் 4: தனிமனித வழிபாடும் சிலை வழிபாடும்

4

பெருவெள்ளத்திலிருந்து பரலோகத் தந்தையாகிய கடவுள் தன்னையும் தம் குடும்பத்தார் அனைவரையும் உயிர்களையும் காப்பாற்றியது குறித்து நோவா நன்றியுடையவராக இருந்தார். கடவுள் மீது அவருக்கு இருந்த விசுவாசம் பெருகியது. கடவுளுக்கு கீழ்ப்படிந்து அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக தம் விளைச்சலிலிருந்தும் மந்தைகளிலிருந்தும் சிறந்ததை கடவுளுக்குப் பலியாகச்செலுத்தி நன்றி தெரிவிக்கும் வழிபாட்டை நோவா கடைப்பிடித்து வந்தார். அதையே தமது பிள்ளைகளுக்கும் கற்றுத்தந்தார். இவ்வாறாகப் பெருவெள்ளத்துக்குப்பின் நோவா 350 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்று விவிலியம் கூறுகிறது.

தனிமனித வழிபாடு

நோவாவுக்கு சேம், காம், யாப்பேத் ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர். இவர்களது சந்ததியினர் வழிவழியாகப் பெருகி பெரிய மக்கள் கூட்டமாக மாறினர். மக்கள் கிழக்கே இருந்து பயணம் செய்து சிநெயார் நாட்டில் ஒரு பெரிய நதிக்கரைச் சமவெளியைக் கண்டு அங்கேயே தங்கினர். மக்கள் அனைவரும் ஒரே மொழியைப் பேசினர். நோவாவின் சந்ததியில் வீரமும், தலைமைப் பண்பும் மிக்கவனாக வந்தவன் நிம்ரோது. இவன் பயிர்த்தொழில் செய்வதை விடுத்து, தனது உடல்பலத்தால் மிருகங்களை வேட்டையாடினான். தன்னை எதிர்த்து நின்ற சக மனிதர்களையும் கொன்றொழித்தான்.

இதனால் உயிருக்குப் பயந்து நிம்ரோதுவைக் கண்டு மக்கள் தலை வணங்கினர். கடவுளாகிய பரலோகத் தந்தைக்கு தலை வணங்கிய மக்கள், முதல் முறையாக பூமியில் சக மனிதன் ஒருவனுக்கு வணக்கம் செலுத்தினர். பூமியில் தனிமனித வழிபாடு நிம்ரோதுவிலிருந்து தொடங்கியது. தனக்குப் பயந்து மற்றவர்கள் தன்னை வணங்குவதைக் கண்டு கர்வம் கொண்ட நிம்ரோது தன்னை ஒரு அரசனாக அறிவித்துக்கொண்டான். கடவுளோ மனிதர்களோ தேர்ந்தெடுக்காமல் தனக்குத்தானே முடிசூட்டிக்கொண்ட முதல் மனிதனாகிய நிம்ரோதுவின் தான்தோன்றித்தனம் கடவுளுக்குப் பிடிக்கவில்லை.

கடவுளுக்கே சவால்

நிம்ரோது தன்னை அரசனாக அறிவித்துக்கொண்டதோடு நிற்கவில்லை. தான் அடிமைப்படுத்திய மக்கள் அனைவரையும் தனது குடையின் கீழ் ஆட்சிசெய்ய ஒரு நகரத்தையும் அதில் ஒரு பெரிய கோபுரத்தையும் கட்ட முடிவு செய்தான். இதன்மூலம் தனது குடிமக்கள் பூமியில் வேறு எங்கும் சிதறிப்போய்விடாமல் தனது ஆளுகையில் இருக்க அது வழிவகை செய்யும் என்று திட்டமிட்டான். இதனால் தனது மக்களிடம் “அனைவரும் வாருங்கள்! நமக்காக ஒரு நகரத்தைக் கட்டுவோம்! அந்த நகரத்தின் நடுவே வானத்தை முட்டும் அளவுக்கு ஓர் உயரமான கோபுரத்தையும் கட்டுவோம்; அப்போது நமக்குப் பெயரையும் புகழையும் கொண்டுவரும்.” என்று ஆசைகாட்டினான்.

புகழ் என்பது கடவுளுக்கு மட்டுமே உரியது என்று அதுவரை நினைத்திருந்த மக்கள், ஒரு செயலைச் செய்வதன் மூலம் மனிதர்களாகிய தங்களுக்கும் அது வந்து சேரும் என்று நம்பத்தொடங்கினார்கள். நிம்ரோதுவால் மனிதர்களின் மனங்களில் சுயநல அழுக்கு படியத்தொடங்கியது. தான் படைத்த மனித இனம் தனக்கே சவால் விடுவதாக நினைத்தார் கடவுள். இதனால் கெட்ட அரசனாகிய நிம்ரோதுவும் அவனது மக்களுக்கும் தற்பெருமைக்காக கோபுரம் கட்டுவது கடவுளாகிய யகோவா தேவனுக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில் மக்கள் பூமி முழுவதும் பரவிச் சென்று வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்காகக் கடவுள் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார்.

பலமொழி பேசிய மக்கள்

நோவாவின் வழித்தோன்றல்களான மக்கள் கூட்டத்தை திடீரென பலமொழிகள் பேசும்படியான அற்புதத்தைக் கடவுள் நிகழ்த்தினார். ஒரேமொழியில் பேசிக்கொண்டிருந்த நிம்ரோதுவின் கீழ் வாழ்ந்த மக்கள் திடீரென வேறு வேறு மொழிகள் பேசியதால் ஒருவர் சொல்வது மற்றொருவருக்குப் புரியாமல் எல்லோரும் குழம்பிப் போனார்கள். இதனால்தான் அந்த நகரத்துக்கு பாபேல் என்று பெயர் வந்தது. அதுதான் பின்னாட்களில் பாபிலோன் என்று பெயர் பெற்றது என்கிறது விவிலியம். பபேல் என்பதன் பொருள் ‘குழப்பம்’ என்பதாகும். இந்த மொழிக் குழப்பத்தால் திகைத்த மக்கள் அந்த நகரைவிட்டு வெளியேற ஆரம்பித்தனர். அந்தந்த மொழி பேசியவர்கள் ஒன்றிணைந்து தனித்தனி இனக்குழுக்குழுக்களாக மாறிய அவர்கள் பூமியின் மற்ற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து சென்று குடியேறி வாழத்தொடங்கினார்கள். எனினும் நிம்ரோதுபேசிய மொழியைப் பேசிய மக்கள் மட்டும் அவனோடு அங்கேயே தங்கினார்கள். மக்கள் வெளியேறியதால் கோபுரம் கட்டும் பணி அப்படியே நின்றுபோனது.

ஊரில் நகரில் ஒருவர்

பபேல் நகரத்திலிருந்து மொழிக் குழப்பத்தால் வெளியேறிய மக்கள் சென்று குடியேறிய இடங்களில் ஒன்றுதான் ‘ஊர்’ என்ற நகரம். மிகவும் அழகிய நகரமாக உருப்பெற்ற அந்த ஊரில் வாழ்ந்த மக்கள், கடவுளாகிய பரலோகத் தந்தையை மறந்துபோனார்கள். அவர்கள் விதவிதமான சிலைகளை கடவுள் என்று நினைத்து வணங்க ஆரம்பித்தார்கள். தன்னை மறந்துபோன மக்கள் மீது கடவுள் இரக்கம் கொண்டார். அவர்களை மீட்க, இந்த ஊரில் தனக்கென ஒரு பக்திமிக்க ஒரு மனிதனைக் கடவுள் தேர்ந்துகொண்டார். அவர்தான்

ஆபிரகாம். இவர் ஊர் நகரத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவரிடம் கடவுள் பேசினார். என்ன பேசியிருப்பார்? அடுத்தக் கதையில் பார்ப்போம்.
பைபிள் கதைகள்தனிமனித வழிபாடுசிலை வழிபாடு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x