

சோழர்கால பாணியில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு, குடை கலசத்துடன் எண்பது அடி உயரம் கொண்டதாக அழகிய வடிவில் அமைக்கப்பட்ட புதிய தேரின் வெள்ளோட்டம் பள்ளி கொண்டானில், ஏப்ரல் 25-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது என்று உற்சவ சேவை சங்கத் தலைவர் முதலியாண்டான் தெரிவிக்கிறார்.
ஆகம விதிகளுக்கும் சிற்ப சாஸ்திர முறைகளுக்கும் உட்பட்டு இத்திருத்தேர் ஐந்து நிலைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இத்தேரில் பூமாதேவி, ரங்கநாத பெருமாள், தேவி ஆகியோரின் சிலாரூபங்கள் அழகுடன் அமைக்கப்பட்டுள்ளன. விஷ்ணு புராணம் மற்றும் மகாபாரதக் கதைகளில் உள்ள நிகழ்ச்சிகள் இத்திருத்தேரில் செதுக்கப்பட்டுள்ளன. சுமார் 300 சிலாரூபங்கள் கொண்டுள்ள இத்திருத்தேர் வரதராஜன் ஸ்தபதி தலைமையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி, நரசிம்ம அவதாரம் உட்பட தசாவதாரம் ஆகிய விஷ்ணுவின் அவதாரங்கள் சிலாரூபமாக அமைக்கப்பட்டுள்ள இந்தத் தேர் அறுபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திருத்தலத்தில் மே மாதம் 4-ம் தேதி தொடங்கும் பிரம்மோற்சவம் மே 18 ம் தேதி விடையாற்றியுடன் நிறைவடைகிறது. இதில் புதியதாக செய்யப்பட்ட மரத்தாலான இத்திருத்தேர் உற்சவம், 2016 மே 12 ம் தேதி வியாழனன்று காலை நடைபெறவுள்ளது.