Published : 14 Apr 2016 08:35 AM
Last Updated : 14 Apr 2016 08:35 AM

சாதுவான சந்தகௌசிகன்

மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 19

மகாவீரர் ஒருமுறை அடர்ந்த காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் எதிர்ப்பட்ட மாடு மேய்ப்பவர்கள், வழியில் சந்தகௌசிகன் எனும் பயங்கரமான பாம்பு உள்ளது. அது நம்மைப் பார்த்தால் போதும், எரிந்து விடுவோம். மிகக் கொடிய நஞ்சு உடையது. ஆகவே வேறு வழியில் செல்லுங்கள் என மகாவீரரை வேண்டி எச்சரித்தனர்.

சிங்கத்தையும் சிறு நரியையும், புலியையும் புள்ளி மானையும்,சாந்தத்தையும் கொடூ ரத்தையும் சமமாகக் கருதுபவர் மகாவீரர். எனவே காட்டினுள் சென்று தியானத்தில் ஆழ்ந்தார்.

அப்பொழுது அங்கே சந்தகௌசிகன் பாம்பு வந்தது. தன் இடத்தில் ஒருவர் வந்து ஆக்கிரமிப்பதா என்று கோபத்துடன் முறைத்துப் பார்த்தது. மகாவீரர் எரியவில்லை. மகாவீரர் மீது தன் நஞ்சை உமிழ்ந்தது. ஆனால் புனிதனைச் சுற்றிய ஒளிவட்டம் நஞ்சைத் தடுத்தது. பாம்பு, மறுபடியும் சினத்தோடு சீறி, மகாவீரர் மீது நஞ்சைக் கக்க அவ்விடமே நஞ்சு நெடியானது. ஆனாலும் அந்த மகான் மகான் பாதிப்படையவில்லை.அச்சுதனின் அருட்பார்வையும் பாம்பின் கோபப் பார்வையும் சந்தித்தன. அன்பிற்கும் ஆவேசத்திற்கும், நஞ்சிற்கும் நல்லமிர்தத்திற்கும் மோதல் நடந்தது. அருளாளன் மீது ஏறி பின்னிப் பிணைத்தது. ஆத்திரத்தில் அவரைக் கடித்தது.கடித்த இடத்திலிருந்து ரத்தத்திற்கு பதிலாக பால் வடிந்தது. பாலைக் கண்டு பாம்பு பயந்து களைப்புடன் அமர்ந்தது.

தியானம் கலைந்தது

முற்றும் அறிந்த முழுமை அறிவனின் தியானமும் கலைந்தது. மகாவீரர், சந்தகௌசிகனிடம் பொறுமையாகத் தான் கூறுவதைக் கேட்பாயாக என்று கூறி அதன் முற்பிறவிகளை நினவூட்டினார்.

பாம்பே, ஒரு பிறவியில் நீ சினம் மிக்கவனாக இருந்ததால் பாம்பானாய். அடுத்த பிறவியில் துறவியாகி ஒரு தவளையின் இறப்பிற்கு காரணமானாய். பரிகாரத்திற்காகத் தவமிருக்கச் சொன்ன உனது சீடனை அடித்தாய். உணர்ச்சிவயப்பட்டு நீயும் தூணில் முட்டி மோதி இறந்தாய். பின் சந்தகௌசிகனாக இங்குள்ள மாணவர்களின் ஆன்மப் பயிற்சிக் குடிலின் தலைவனாக இருந்தாய். அப்போது சுவேதாம்பி இளவரசன் குடிலின் பூக்களைப் பறித்துக்கொண்டு ஓடினான். நீ மிகவும் வெகுண்டு ஒரு கோடாரியுடன் அவனை விரட்டி ஓடும்போது காலிடறி விழுந்தாய். உன் கோடாரியே எமனாகி உன்னைக் குத்த இறந்தாய். இப்பொழுது மறுபடியும் பாம்புப் பிறவி எடுத்துள்ளாய். எனவே சினத்தை விடு என்றார். பாம்பிற்கு முற்பிறவிகள் நினைவுக்கு வந்து அறிவுரையை ஏற்றது.

சாதுவான பாம்பைச் சிலர் அடித்துத் துன்புறுத்தினார்கள். ஆனாலும் மனிதனாகப் பிறந்து இறைவனாக ஆனவரின் தரும உரையை ஏற்று, அகிம்சையையே வழியாகக் கொண்டு தன் துயரைத் தாங்கி உண்ணாநோன்பிருந்து உயிர் நீத்தது அந்த பாம்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x