Published : 05 Jun 2014 10:00 AM
Last Updated : 05 Jun 2014 10:00 AM

ஏகாமர க்ஷேத்ரம் திருபுவனேஸ்வர்

பாரம்பரியமும் நவீனமும் கலந்து மிளிரும் இடம் புவனேஸ்வர். அற்புதமான கோவில்களும் நினைவுச் சின்னங்களும்தான் இதன் அடையாளம். ஒரியா மாநிலத்தின் தலைநகரமான இது, ஒரு சிவ ஸ்தலம்.

புராணங்களின்படி சிவன் இந்த இடத்தைக் காசிக்கு மேலாகக் கருதினார். அதற்கான காரணத்தை அறிய பார்வதியும் புவனேஸ்வருக்கு வந்தாராம். அப்போது அவருடைய ரூப சௌந்தர்யத்தில் மயங்கிய கீர்த்தி, வாசன் என்ற இரு அரக்கர்கள் தங்களை மணந்துகொள்ளும்படி வற்புறுத்தினார்கள். பார்வதி தேவி, தன்னைத் தோளில் தாங்கிச் செல்லும்படி அவர்களிடம் கேட்டார். ஏறியவுடன் தன் எடையைப் பன்மடங்காக அதிகரித்து அந்த அரக்கர்களை நசுக்கிக் கொன்றார். அதனால் சிவன் கீர்த்திவாசன் என்று பெயர் பெற்று அங்கேயே குடி கொண்டார்.

ஒரு காலத்தில் மாமரங்கள் நிறைந்திருந்ததால் ஏகாமர க்ஷேத்ரம் என்று இப்பகுதி பெயர் பெற்றிருந்தது. திரிபுவனேஸ்வர் என்றும் பெயர் பெற்றிருந்தது. இங்கு ஆயிரக்கணக்கான கோவில்கள் இருந்தனவாம். இப்போது வெறும் 500 கோவில்கள்தான் இருக்கின்றன.

லிங்கராஜர் கோவில்

இதுதான் இந்த ஊரில் மிகப் பெரிய கோவில். 180 அடி உயரத்தில் வானளாவி நிற்கிறது. சோம வம்சத்தின் மூன்று தலைமுறை மன்னர்களைக் கண்டது இந்தக் கோவில். ஏழாவது நூற்றாண்டில் யயாதி கேசரி என்னும் மன்னன் தன் தலைநகரை புவனேஸ்வருக்கு மாற்றியபோது இந்தக் கோவிலைக் கட்டுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டான். ஆனால் கோவிலில் காணப்படும் குறிப்புகள் கி.பி.1114-1115-ல்

ஆண்ட அனந்தவர்மன் சோடகங்கா என்பவனுடைய காலத்தில் இந்தக் கோவில் கட்டுவதற்காக நிலம் மான்யமாக வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கின்றன. இந்தக் கோவில் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். மற்ற பகுதிகளான ஜக்மோகனா (வழிபாட்டுக் கூடம்), போக மண்டபம் (காணிக்கை மண்டபம்), நாட்டிய மண்டபம் (கலை நிகழ்ச்சிகள் நடக்கும் இடம்) ஆகியவை பிறகு வந்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் கோவிலின் அளவும் பரிமாணமும் நம்மை அசர வைக்கின்றன. இது கலிங்கக் கட்டுமானத்தின் உச்சத்தைப் பறைசாற்றுகிறது. நிமிர்ந்து பார்த்தால் கழுத்து வலிக்கிறது. மேலே கொடி பறக்கிறது. கட்டமைப்பு வளைகோட்டு வடிவத்தில் உள்ளது.

கருவறையின் மேல் உள்ள இந்தக் கட்டபைப்பு துயுலா என்று அழைக்கப்படுகிறது. இரவில் விளக்கு வெளிச்சத்தில் பார்த்தால் அந்த சங்கரனே விஸ்வரூபம் எடுத்து நிற்பது போல் தோன்றுகிறது.

கோவில் பின்துசாரஸ் ஏரிக் கரையில் உள்ளது. உமையவளின் தாகத்தைத் தணிப்பதற்காக சிவன் இந்த ஏரியை உருவாக்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

25000 சதுர அடி பரப்பளவில் கட்டப் பட்டுள்ள இந்த லிங்கராஜர் கோவிலும் 100 சிறிய கோவில்களும் பாரிய மதில்களால் சூழப்பட்டுள்ளன. பிரதான வாசல் கிழக்கிலும் மற்ற வாசல்கள் வடக்கிலும் தெற்கிலும் உள்ளன. பஞ்சரதா திட்டத்தில் ஐந்து பிரிவுகளுடன் கட்டப்பட்ட இந்தக் கோவில் அலங்கார வேலைப்பாடுகளுக்காகவும், அற்புதமான தொழில்நுட்பத்திற்காகவும் பேர்போனது. 54 மீட்டர் உயரமுள்ள துயூலாவும் (பிரதான கோபுரம்) 29 மீட்டர் உயரமுள்ள ஜக்மோகனாவின் மேலுள்ள பிரமிட் கோபுரமும் (பீதா துயூலா) முழுவதும் சிற்பங்களால் அணி செய்யப்பட்டுள்ளன. போக மண்டபத்திலும் நாட்டிய மண்டபத்திலும் இது போன்ற சிற்பங்கள், கனரகக் கூரைகளைத் தாங்கும் கணைகளில் பொருத்தப்பட்டுள்ளன.

கருவறையின் ஒரு பக்கக் கதவில் சூலமும் மற்றதில் சக்கரமும் உள்ளன. இது சுயம்பு லிங்கமாக இருந்தாலும் ஹரிஹர ரூபத்தில் உள்ளது. இது முன்பு செழித்து வளர்ந்திருந்த ஜகன்னாத வழிபாட்டையே குறிக்கும்.

பார்வதி, கார்த்திகேயர், கணேசர் போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனியாக கோவில்களும் உள்ளன. சிலைகளும் பெரிதாக உள்ளன. அங்கேயும் அதியற்புதமான சிற்பங்களும் செதுக்கல்களும் இடம் பெற்றுள்ளன.

ஒரு நாள் போதாது

இங்கேயுள்ள 100 சிறிய கோவில்களைப் பார்க்க வேண்டுமென்றால் ஒரு நாள் போதாது. சிலவற்றில் மூர்த்தியே இல்லை. எப்படிப் பார்த்தாலும் இதன் பிரம்மாண்டம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்தக் கோவிலின் சிறிய பிரதிமைகள் அதன் கோபுரத்திலேயே நேர்த்தியுடன் இணைக்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில் இது மெய்மறக்க வைக்கும் கட்டிடக் கலைக் கண்காட்சி.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x