

கடவுளின் அன்பை எண்ணிப்பார்க்காமல் எளிதில் சாத்தானிடம் ஏமாந்துபோனார்கள் ஆதாமும் ஏவாளும். எனவே, ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். பட்ட பிறகு புத்தி தெளிந்ததால் தந்தையை நோக்கி அழ ஆரம்பித்தனர். உணவு குறித்த பயம் அவர்களைப் பெரிதும் வாட்டியது.
அப்போது கடவுள், “உனது முகம் வேர்வையால் நிறையும்படி நீ கஷ்டப்பட்டு உழைத்து உனது உணவை உண்பாய். உன்னை மண்ணால் உருவாக்கினேன். நீ இறக்கும்போது மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்”என்றார். ஏதேன் தோட்டத்துக்கு வெளியே கடும் முட்செடிகள், பாறைகள் மற்றும் புதர்கள் சூழ்ந்த நிலமாய் பூமி இருந்ததைப் பார்த்தார்கள்.
ஒருபுறம் தனது வாழ்க்கைத் துணையான ஏவாளுடன் அன்பான வாழ்க்கையைத் தொடங்கினாலும் இன்னொரு பக்கம் நிலத்தைச் சீர்திருத்த ஆதாம் கடும் உழைப்பைத் தர வேண்டியிருந்தது. சீர்திருத்திய நிலத்தில் பயிர்த் தொழில் செய்யத் தொடங்கினான் ஆதாம். ஏவாள் கர்ப்பமுற்று முதல் குழந்தையைப் பெற்றாள். அவனுக்கு காயீன் என்று பெயர் வைத்தார்கள். இரண்டாவதாகவும் ஆண் மகவைப் பெற்றாள். அவனுக்கு ஆபேல் என்று பெயர் வைத்தார்கள். அதன் பிறகு அந்த ஆதிப் பெற்றோருக்குப் பெண் பிள்ளைகளும் பிறந்தார்கள். காயீனும் ஆபேலும் வளர்ந்து ஆதாமுக்குப் பயிர்த் தொழிலில் உறுதுணையாய் இருந்தார்கள். மூத்தவனாகிய காயீன் தன் தந்தையைப் போல் பயிர்களையும் பழங்களையும் விளைவித்தான். ஆனால் ஆபேல், அப்பாவுக்கும் அண்ணனுக்கும் தன் தாய்க்கும் உதவிக்கொண்டே ஆடுகளை மேய்த்து அவற்றை மந்தைகளாகப் பெருக்கினான். ஆடுகளைத் தன் குழந்தைகள் போல் பாவித்து அவற்றின்மீதும் அன்பு செலுத்தினான். எனவே அவை ஆபேலின் குரலுக்குச் செவிமடுத்து அவனைப் பின்தொடர்ந்தன. இவ்வாறாகத் தலைமைப் பண்பு மிக்கவனாக ஆபேல் உருவானான். இருவரும் தங்கள் பெற்றோர் மூலம் பரலோகத் தந்தையைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரை வணங்கிவந்தார்கள்.
பொறாமையும் முதல் கொலையும்
தம் தந்தை ஆதாமைப் போல் கடவுளாகிய யகோவா தேவனுக்குத் தங்கள் காணிக்கைகளைச் செலுத்த காயினும் ஆபேலும் முன்வந்தனர். காயீன் தான் பயிர் செய்த உணவுப் பொருட்களைக் கொண்டுவந்தான். ஆபேல் தன்னிடமிருந்த மிகச் சிறந்த ஒரு ஆட்டைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் பார்த்துக் கடவுள் சந்தோஷப்படுகிறார். ஆனால், காயீனுடைய காணிக்கைகளைப் பார்த்து அவர் சந்தோஷப்படவில்லை.
காயீனுடைய காணிக்கை, ஆபேலின் காணிக்கையைவிடக் குறைவாக இருந்தது காரணமல்ல. மாறாக, ஆபேல் நல்ல குணமுடையவனாக இருந்தான். அதனால் கடவுள் சந்தோஷத்துடன் அவனது காணிக்கையை ஏற்றுக்கொண்டார். காயீனோ கெட்ட புத்தி உள்ளவனாக இருந்தான். தனது தம்பியை நேசிக்கவில்லை. இதனால் காயீன் மீது கடவுள் வருத்தம் கொண்டிருந்தார். இதை உணராத காயீன் தன்னைவிட தன் தம்பி ஆபேலைக் கடவுள் அதிகமாக விரும்புவதாகக் கற்பனை செய்துகொண்டு பொறாமை உணர்ச்சியை வளர்த்துக்கொண்டான். கடவுள் தன் காணிக்கையை ஏற்காமல்போன தருணத்தில் தம்பியின் மீது மேலும் அவனுக்குக் கோபம் பெருகியது. அந்தக் கோபம் கொலைவெறியாக மாறியது.
ஒருநாள் ‘ தம்பி… வா, நாம் வயலுக்குப் போய்வருவோம்’ என்று அழைத்துச் சென்றான். அண்ணனின் வார்த்தைகளைத் தட்டாமல் கிளம்பினான் ஆபேல். அங்கே அண்ணன் சொன்னபடி வேலைகளைச் செய்துகொண்டிருந்த ஆபேலை. எதிர்பாராத தருணத்தில் தாக்கிக் கொன்றான் காயீன். பூமியில் முதல்முறையாய் மனித ரத்தம் சிந்தியது. தம்பியின் உடலிலிருந்து பெருகிய ரத்தத்தைக் கண்டு அச்சமடைந்த காயீன் அங்கிருந்து ஓடிப்போனான். தனது பெற்றோரின் முகத்தைப் பார்க்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை. குற்றவுணர்ச்சி அவனைச் சித்திரவதை செய்தது.
மறைக்க நினைத்த காயீன்
தான் செய்த கொலை கடவுளுக்குத் தெரியாது என்று நினைத்தான். அதனால் “உன் தம்பி ஆபேல் எங்கே?” எனக் கேட்ட கடவுளிடம், “எனக்குத் தெரியாது. என் தம்பியைக் காவல் செய்வது என் வேலையில்லை” என்று பொய் கூறி மறைத்தான். கடவுளோ, “ நீ என்ன காரியம் செய்தாய்? நீ உன் சகோதரனைக் கொன்றுவிட்டாய். பூமியிலிருந்து அவனது ரத்தம் என்னைக் கூப்பிடுகிறதே. உன் கைகளிலிருந்து வழியும் ஆபேலின் ரத்தத்தை வாங்கிக்கொண்ட இந்த பூமியில் நிலையில்லாமல் ஒவ்வொரு இடமாக நீ அலைந்துகொண்டிருப்பாய்” என்று தண்டித்தார்.
கடவுள் தனக்களித்த தண்டனையைக் கண்டு நடுங்கினான் காயீன். எனவே, கடவுளிடம் அவன் கெஞ்ச ஆரம்பித்தான்.
அப்போது மனமிரங்கிய கடவுள், “உன்னை யாரும் கொல்லாதவாறு உன்மேல் நான் ஒரு அடையாளம் வரைவேன்” என்று சொல்லிவிட்டு அவனை அந்த இடத்திலிருந்து அனுப்பினார். வேறு வழியின்றித் தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து தூரமாகக் கிளம்பினான். அப்போது தன்னோடு வரும்படி தன் சகோதரிகளில் ஒருத்தியை அழைத்துச் சென்றான். பூமியில் அவர்கள் தேர்ந்துகொண்ட புதிய இடத்தில் தம்பதியாய் வாழத் தொடங்கினார்கள்.
காலப்போக்கில் காயீனுக்கும் அவன் மனைவிக்கும் பிள்ளைகள் பிறந்தனர். வெகு சீக்கிரத்திலேயே பூமியிலே மனிதர்கள் பெருகினார்கள். அவர்களில் கடவுள் தனக்கு உகந்த மனிதர்களைத் தேர்வுசெய்து அவர்களை மனித இனத்துக்கான வழிகாட்டிகளாய் வழிநடத்த ஆரம்பித்தார். அந்த மனிதர்களைப் பற்றி அடுத்த கதையில் பார்ப்போம்.