

கீழக்கரையில் ஆன்மிகத் திருப்பணியாற்றிய இறைநேசர்களின் பட்டியல் விரிவானது. 25 இறைநேசச் செல்வர்களும் ஏழு இறைநேசச் செல்வியரும் அவர்களில் அடங்குவர். சதக்கத்துல்லா அப்பா, வள்ளல் சீதக்காதி ஆகியோரை அறிவோம். அந்த வரிசையில் வருபவர்தான் மகானந்த பாபா.
மொகலாய மன்னர் அவுரங்கசீபின் அன்பையும் மதிப்பையும் பெற்ற சதக்கத்துல்லா அப்பாவின் ஆசிரியர் மகுதுாம் சின்னீனா லெப்பையின் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் மகானந்த பாபா. நபிகள் நாயகத்தின் தோழரான சஹாபா அபூபக்கர் சித்தீக் அவர்களின் பரம்பரையில் தோன்றியவர்கள் இவர்கள். சின்ன நெய்னா என்ற பெயரே சின்னீனா என ஆயிற்று. அதிராம்பட்டினத்தில் ஹிஜ்ரி 982-ம் ஆண்டில் பிறந்து காயல்பட்டினத்திலும் கீழக்கரையிலும் அவர் திருப்பணியாற்றினார். ஹிஜ்ரி 1079-ல் காலமான அவருடைய அடக்க இடம் கீழக்கரை குத்பா பள்ளியில் அமைந்துள்ளது.
சின்ன நைனாரின் வழித்தோன்றலான மகானந்த பாபாவின் இயற்பெயர் முகம்மது அப்துல் காதிர். கீழக்கரையில் காலி முகம்மது இபுராகீம் அவர்களின் புதல்வராக ஹிஜ்ரி 1309-ம் ஆண்டில் பாபா பிறந்தார்.
“மகானந்த பாபா அவர்கள் சிறு பிராயத்திலேயே குர்ஆனை ஓதி மனப்பாடம் செய்து கொண்டார். கல்வியையும் ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் தந்தையாரிடமும் மற்றவர்களிடத்திலும் பெற்றார். ஏழை எளியவர்களை நேசித்தார். விருப்பத்துடன் அவர்களுக்கு அன்ன ஆகாரம் அளித்தார்.” என்று கூறியுள்ளார் மகானந்த பாபாவின் சீடர் அபிராமம் அப்துல் காதிர் ஆலிம் அப்பா.
மகானந்த பாபா தமது உள்ளுணர்வினால் எதையும் முன்கூட்டியே அறியும் ஆற்றலைப் பெற்றிருந்தார். பாபா அவர்களால் நலம் பெற்ற ஓர் அன்பர் மறுபடியும் அவரைத் தேடி வந்தார். வர்த்தகம் செய்வதற்காக இலங்கைக்குச் செல்வதாகக் கூறி வெள்ளிக்கிழமை இரவில் புறப்படுவதற்கு அனுமதி கேட்டார். அதற்குப் பதிலளித்த பாபா,வெள்ளிக்கிழமை இரவின் நற்பலன்களைப் பெற்றுக் கொண்டு, ராத்தீபு மஜ்லிஸ் வழிபாட்டு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு காலைத் தொழுகைக்குப் பிறகு புறப்பட்டுச் செல்லும்படி கூறினார்.
பாபாவின் நல்லுரையைக் கேளாமல் அவசரமாக அன்றிரவே அவர் புறப்பட்டுவிட்டார். செல்லும் வழியில் இன்னலை அனுபவித்தார். திருடர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். எல்லா பொருள்களையும் அவர்களிடம் பறிகொடுத்துவிட்டார் வணிகர்.
மகானந்த பாபா பல ஆண்டுகள் திருப்பத்துாரில் மார்க்க ஞானப் பணிபுரிந்து வந்தார். அவருடைய நற்பணிகளைப் பாராட்டிய ஊர்மக்கள் திருப்பத்துார் வலியுல்லா என்று பெருமையுடன் அழைத்தார்கள். கண்ணாடி அப்பா,கண்ணாடி வலியுல்லா என்றும் அவர் அழைக்கப்பட்டார்.
1891 முதல் 1959 வரை வாழ்ந்து மறைந்த மகானந்த பாபா மெய்ஞானச் செறிவு கொண்ட பாடல்கள் பலவற்றை எழுதியுள்ளார்.
ஆன உடலுயிர் ஆங்கொன்றி நிற்பது
ஏனிது விந்தையன்றோ மகத்தாய்
ஏனிது விந்தையன்றோ?
விந்தை யோர் முட்டைக்குள் மேவும் சிறுபட்சி
வந்ததைப் போன்றிடுமே ஜகத்தாய்
வந்ததைப் போன்றிடுமே.
உடலுக்குள் உள்ள உயிரை முட்டைக்குள் பறவையாகக் கண்ட இவரது பாடல்கள் இன்றும் ‘மஹானந்த கீதம்’ என்ற பெயரில் பாடப்படுகின்றன.