Published : 24 Mar 2016 12:46 PM
Last Updated : 24 Mar 2016 12:46 PM

ஆன்மிக நூலகம்: சிவனின் புனித கண்ணீர் முத்து

சிவன் பல்லாண்டு காலம் தவமியற்றினார். தவம் நிறைவுற்றுக் கண் விழித்தபோது, கண்களிலிருந்து சூடான நீர் வெளிப்பட்டு உருண்டு பூமியில் விழ, அதனை ருத்திராட்சமாகப் பெற்றாளாம் பூமி அன்னை. ருத்திராட்சம் எப்படி வந்தது என்பதை இப்படி அழகாக விளக்குகிறது இந்த நூல். ருத்திராட்சத்தின் பெருமைகள், புலிக்கால் முனிவர் வரலாறு, சிவனுக்கு உரிய சேந்தனாரின் திருப்பல்லாண்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது இப்புத்தகம்.

சிவனின் அற்புதங்கள், லீலைகள் ஆகியவை எளிய தமிழில் எழுதப்பட்டுள்ளன. பல கதைகள் உள்ளதால் சுவாரசியத்திற்குக் குறைவில்லை. மொக்கணீஸ்வரர் கதை பக்திச் சுவைக்கு எடுத்துக்காட்டு. மகாபாவி என்று கருதப்பட்ட சார்வாங்கன் ருத்திராட்ச மரத்தின் அருகே இருந்தபோது இறந்ததால் சிவலோகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கதையும் இதில் உண்டு.

புத்தகம்: செல்வமே சிவபெருமானே
ஆசிரியர்: வேணுசீனிவாசன்
பதிப்பகம்: அழகு பதிப்பகம்
தொலைபேசி: 044 2650 2086.
இமெயில்: Shankar_pathippagam@yahoo.com
விலை: ரூ.140



கிரியா யோக புருஷர்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அவதரித்த மகான் பாபாஜி, கிரியா யோகக் கலையை, போகரிடம் முறையாகக் கற்று, அகத்திய மாமுனியிடம் தீட்சை பெற்று, மூப்பையும் இறப்பையும் வென்றவர். ஆதிசங்கரர், கபீர்தாசர், லாகிரி மகாசாயர், யோகி ராமையா, யோகி நீலகண்டன், ஸ்ரீ யுக்தேஸ்வரர் கிரி மகராஜ், பரமஹம்ச யோகானந்தர் போன்ற சீடர்களை உருவாக்கியவர்.

பாபாஜியின் கௌரிசங்கர் பீடம் இமயமலையின் உச்சியில் உள்ளது. அறிவியல் மட்டுமல்லாது இயற்கைக்கும் அப்பாற்பட்ட மகா அவதார் பாபாஜியின் வாழ்க்கை வரலாற்றை, அவரது இளமைப்பருவ சுவாரஸியமான சம்பவங்களை தொகுத்து வழங்கியுள்ளார் ஆசிரியர். கிரியா யோகத்தைப் பரப்ப சரியான நபராக பாபாஜி நடிகர் ரஜினிகாந்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

புத்தகம்: மகா அவதார் பாபாஜி
ஆசிரியர்: கோமு கண்ணா
பதிப்பகம்: அழகு பதிப்பகம்
தொலைபேசி: 044 26502086
இமெயில்: Shankar_pathipagam@yahoo.com
விலை: ரூ.75

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x