Published : 24 Mar 2016 12:24 pm

Updated : 24 Mar 2016 12:24 pm

 

Published : 24 Mar 2016 12:24 PM
Last Updated : 24 Mar 2016 12:24 PM

ஓவியத்தில் எழுத முடியாத பேரழகன்

ஸ்ரீ ராமருக்கு நம் தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்களில் சிறப்பு கொண்டு விளங்கும் திருத்தலம் தில்லை விளாகம் ஸ்ரீவீர கோதண்ட ராமர் ஆலயம். இவ்வாலயம் உள்ள இடமே தண்டகாரண்யம். ஸ்ரீராமர் ராவணனை வென்றபின் சேதுக்கரை வழியே வந்தபோது, இவ்வூரில் தங்கிச் சென்றதாகக் கூறுகிறது தலபுராணம். வட இந்தியாவிலும் தண்டகாரண்ய வனம் உள்ளது.

ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கொண்ட இந்த ஆலயத்தின் தலவிருட்சம் தில்லை மரம். இங்கு உள்ள புண்ணிய தீர்த்தங்கள் ஹேமபுஷ்கரிணி, ராம தீர்த்தம், ஹனுமன் தீர்த்தம்.


திரண்ட தோள்களும், முழங்கால்வரை நீண்ட கைகளும், கருணை பொங்கும் கண்களும், நகை சிந்தும் இதழ்களும் கொண்ட ஆணழகனாக ராமரைக் காண தில்லைவிளாகம் செல்ல வேண்டும். இங்கு போர் முடிந்து வீர கோதண்ட ராமஸ்வாமியாக கையில் வில் கொண்டு, வலப்புறம் சீதை, இடப்புறம் இளைய பெருமாளுடன், நின்ற திருக்கோலத்தில் அனுமனும் காட்சிதர கண்ணை அள்ளும் அழகோடு நிற்கிறார் பெருமாள்.

திருமூர்த்தியின் அழகு

இறைவனின் கைகள், மற்றும் கணுக்காலில் பச்சை நிற நரம்புகளும், விரலில் உள்ள ரேகைகளும் தெளிவாகத் தெரிவது நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. வில் ஏந்திய கையின் வளைவு நெளிவுகள் சிற்பக் கலைக்கு ஓர் எடுத்துக் காட்டு. இறைவனின் அருள் பொங்கும் அழகு நம்மை அகல விடாமல் தடுக்கிறது. 1862-ம் ஆண்டு வேலுத்தேவர் என்பவர் தில்லைவிளாகத்தில் குளம் தோண்டியபோது இவ்வாலய மூர்த்திகள் கிடைத்தனவென்று கூறப்படுகிறது. அங்கு ஒரு குடிசை போட்டு இம்மூர்த்திகளை வழிபடத் தொடங்கினார். ஒரு காலத்தில் புகழுடன் இருந்த இக்கோயில் கால மாற்றங்களால் புதைந்து விட்டது போலும்.

இவ்வாலயத்தின் சன்னிதி கிழக்கு நோக்கி உள்ளது. சன்னிதி வாயிலில் இருபுறமும் சங்க, பதும நிதிகள் காட்சியளிக்கின்றனர். இவ்வாலயத்தில் வீர கோதண்ட ராமர் சன்னிதி மட்டுமே உள்ளது. இங்கு மூலவர் கிடையாது. நான்கடி உயரமுள்ள பஞ்சலோக உற்சவ மூர்த்தியே பிரதான மூர்த்தி. வலக்கையில் அம்பும், இடக்கையில் வில்லுமாகக் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் வீரகோதண்டராமசுவாமி. ராவணனை வென்று சீதையை மீட்டபின் அயோத்தி செல்லும் வழியில் பரத்வாஜர் ஆசிரமத்தில் தங்கிச் சென்றதாக ராமாயணத்தில் கூறப்பட்டுள்ள தலம் இதுவே என்பர்.

ராம பாணத்துடன் காட்சி

வீர கோதண்டராமர் வெற்றிப் புன்னகையுடன் காட்சி தருகிறார். திரிபங்கம் என்று சொல்லப்படும் மூன்று வளைவுகளுடன் கூடிய திருமேனி, திண்தோள், இடுப்பு மற்றும் முழந்தாள் வளைவுகள், திருமார்வில் போரினால் ஏற்பட்ட வடுக்கள், தேமல்கள் மனிதர்களுக்கு உள்ளது போலவே சேவையாகின்றன. கைகளில் விரல்களும் மனிதர்களைப் போலவே நீண்ட தனித்தனி விரல்களுடன், நகங்களுடன் உள்ளன.இங்குள்ள ஸ்ரீராமர் வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத விதமாக ராம பாணத்துடன் காட்சி தரும் சிறப்புடையவர். இந்தப் பாணத்தை ராமர் காகாசுரன்,வாலி, ராவணன் ஆகியோரை அழிக்க மட்டுமே பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதில் ‘ராமசரம்' என்று பழைய தமிழெழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.

ராமரின் மார்பில் மகாலக்ஷ்மி இருப்பதும், அவரது கை, கெண்டைக்கால் விரல்களில் ரேகைகள் இருப்பதையும் காணும்போது மெய்சிலிர்க்கிறது. வலது காலில் பச்சை நரம்புகள் காட்சியளிக்கின்றன. வனவாசம் சென்றபோது கௌசல்யாதேவி கட்டிய ரக்ஷை அவரது இடது காலில் காணப்படுகிறது. மலர்ந்த கண்கள், கூர்மையான நாசி, பச்சை நரம்போடிய கால்கள் என்று சாதாரண மனிதர் தோற்றத்தில் காணப்படும் ‘ஓவியத்தில் எழுதவொண்ணா' பேரழகனாக காட்சி தரும் ராமரை விட்டு கண்களை அகற்ற முடியவில்லை. தூய மனதுடன் வேதாரண்யக் கடலில் நீராடி இவரை வழிபடுவதால் எண்ணிய எண்ணம் நிறைவேறும்.

ராமனின் இடப்பக்கம் இளையவன் இலக்குவன் கம்பீரமாக நிற்கிறார். ஆதிசேஷன் ரூபமான இளையவன், நிழலாய் வாளும் வில்லும் கொண்டு பின்தொடர்ந்து இராமன் முன்செல்ல ஊனின்றி உறக்கமின்றி பதினான்கு ஆண்டுகள் சேவை செய்த வேதப்புதல்வன் கைகளில் வில்லும் சரமும் ஏந்திக் காட்சியளிக்கிறார்.

வலப்பக்கத்தில் நிற்கும் சீதை தன் மணாளனைத் திரும்ப அடைந்த மகிழ்ச்சியில் கையில் தாமரையுடன் காட்சி தருகிறாள். கல்யாணத் திருக்கோலம் என்பதால் இருவரின் ஆடையும் எப்போதும் இணைந்து முடிந்த நிலையிலேயே சேவை சாதிக்கிறார்கள்.

'பரதாழ்வாருக்கு யாதுரைக்க வேண்டும்' என கைகட்டி,வாய்பொத்தி நிற்கும் அனுமனின் அழகும் இவ்வாலயத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் தரிசனம். இந்த அனுமன் வரப்ரசாதி. அனுமனுக்கு தயிர்சாதப் ப்ரார்த்தனை செய்துகொண்டால் ஒரு மண்டலத்திற்குள் அவர்களின் ப்ரார்த்தனை கைகூடுவது கண்கண்ட உண்மை. இராமனை ஜானகியோடு சேர்த்து வைத்த அனுமன் நம்முடைய பிரார்த்தனைகளையும் செவ்வனே நிறைவேற்றி வைக்கிறார். திருமணம் கைகூடாதவர்களும், புத்திரபாக்யம் அற்றவர்களும் இந்த மாருதியை பிரார்த்தனை செய்ய மனம் போல் மாங்கல்யம் தான். முன்பு இரட்டைக் கொம்புடைய தேங்காய் இங்கு விசேஷம். இப்போது அந்த மரம் பட்டுப் போய்விட்டது.

சிறிய திருவடி அனுமன் அருகிருக்க, பெரிய திருவடி கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் சன்னிதிக்கு எதிரே காட்சியளிக்கிறார். இவருக்கு பஞ்சமியில் உளுத்தம்பருப்பு மோதகம்(அமிர்தகலசம்) சுண்டல் செய்து நைவேத்தியம் செய்தால் பிரார்த்தனைகள் கைகூடும் என்பது உறுதி.

இக்கோவிலின் வடக்கில் சிவன் கோயில் உள்ளது. கிழக்கு நோக்கி காட்சிதரும் ராமனின் முன் மண்டபத்தில் நாம் வடக்கு நோக்கி நின்றோமானால் இருவரையும் ஒருசேர தரிசிக்கலாம். சிவன் கோவிலில் நடராஜர் சன்னிதியும் உண்டு. ஆகவே இந்த தலம் ஆதிதில்லை என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு வைகானஸ முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆடி அமாவாசை, வைகுண்ட ஏகாதசி, ராம நவமி நாட்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

ராமநவமி உற்சவத்தின் ஆறாம் நாள் ஸ்ரீராம சீதாதேவி திருக்கல்யாணம் நிகழும். அருட்பார்வையுடன் அன்னை, இளவலுடன் அழகுறக் காட்சி தரும் அண்ணல் ராம பிரானை வேண்டி, வணங்கியோர்க்கு, நினைத்ததை நிறைவேற்றி, இகபர சுகங்களை அருள்வார் ஜானகி மணாளன்.தில்லைவிளாகம் செல்வது எப்படி?

திருவாரூர் மாவட்டத்திலுள்ள தில்லைவிளாகம் ஆலயத்திற்கு திருத்துறைப் பூண்டியிலிருந்து வேதாரண்யம் செல்லும் பேருந்தில் செல்ல வேண்டும்.


ஆலயங்கள் சிறப்புஸ்ரீவீர கோதண்ட ராமர் ஆலயம்தண்டகாரண்யம்ராமாயண கோயில்தில்லைவிளாகம்திருவாரூர் கோயில்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x