Published : 24 Dec 2021 03:13 PM
Last Updated : 24 Dec 2021 03:13 PM

கிறிஸ்துமஸ்: மாட்டுத் தொழுவத்தை தேர்ந்தெடுத்த மனுஷகுமாரன்

ரோமப் பேரரசின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்தது கிறிஸ்து இயேசு பிறந்த பெத்லஹேம். இது யூதர்கள் பெரும்பான்மையாக வசித்துவந்த யூதேயா தேசத்தில் இருந்தது. ரோம சாம்ராஜ்யத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அரசு நிர்வாகத்தின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது. எத்தனை வரிகள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளவும், குடும்பத்திலிருந்து ஒருவரையேனும் ராணுவத்துக்குக் கட்டாய ஆள் எடுப்பு செய்யவும் இது பயன்படுத்தப்பட்டது.

ஆனால், யூதர்களுக்கு ராணுவத்தில் சேர்வதில் விருப்பமில்லை. அதனால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த விலக்கு பெற்றதற்காக அவர்கள் அதிக வரி செலுத்திவந்தனர். எனவே, வரி முறைக்காக அவர்கள் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு பதினான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட்டது. இயேசுவை நிறைமாதக் குழந்தையாக மரியாள் கருவில் தாங்கியிருந்தபோது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டது. இதனால் மனைவியை அழைத்துக்கொண்டு மக்கள் தொகைப் பதிவேட்டில் தன் குடும்பத்தைப் பதிவு செய்ய பெத்லஹேம் புறப்பட்டார் சூசை.

இறைமகன் பிறந்தார்

நாசரேத்துக்கும், பெத்லஹேமுக்கும் இடையேயான தூரம் ஏறக்குறைய 12 கிலோமீட்டர்கள். வழக்கமாக ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குக் கால்நடையாகவும் கழுதைகள் மீதும், வசதியிருப்போர் குதிரை வண்டிகளிலும் பயணம் செய்தனர். இப்படிப் பயணம் செய்வோர் தங்குவதற்காக ஆங்காங்கே சத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சத்திரத்தில் தங்குவதற்கு இடமும், பயணம் செய்கின்ற விலங்குக்கான தீவனமும், சமைப்பதற்குச் சிறிது வைக்கோலும் மட்டும்தான் கொடுக்கப்படும். உணவு பயணியரைச் சார்ந்தது.

மரியாளும், சூசையும் நீண்ட பயணத்தின் பின் பெத்லஹேமுக்குள் நுழையும்போதே மிகவும் சோர்வுற்றிருந்தனர். மரியாள் மிகவும் சோர்வுற்று, தான் பயணித்துவந்த கழுதையின் மீதே படுத்திருந்தார். பெத்லஹேமில் பல்வேறு ஊர்களிலிருந்தும் யூதேயாவுக்கு வரி கட்ட வந்தவர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. இருவரும் ஒவ்வொரு விடுதியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தனர். எங்கேயும் தங்க இடம் கிடைக்கவில்லை மரியாவும், சூசையும் சத்திரத்தில் தங்க வந்திருந்தபோது, அது பயணியர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. எனவே, அவர்கள் தங்குவதற்குக் கிடைத்த இடம் மாட்டுக்கொட்டகை. அந்த இடத்தில்தான் கடவுள் குழந்தையாகப் பிறந்தார்.

எளிய மக்களே முதலில் கண்டனர்

மனித இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தெய்வக் குழந்தையான இயேசுவைக் கண்டு வணங்கிட இடையர்களே முதலில் செல்கிறார்கள். இடையர்கள் அக்காலத்தில் மிகத் தாழ்ந்த நிலையில் ஒடுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வந்தனர். உலகத்தை மீட்க வந்த கடவுளுக்கு வணக்கம் செலுத்திட இவ்வுலகப் பெருமக்கள் வரவில்லை. மாறாக, எளியமக்களே இறைவனை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அவர்கள் இயேசுவுக்கு வணக்கம் செலுத்தியபோது விண்ணகமும் அவர்களோடு சேர்ந்துகொண்டது என லூக்கா விளக்குகிறார்.

இறைவன் நம்மோடு

கன்னி மரியாளிடம் “பிறக்கவிருக்கும் குழந்தை இம்மானுவேல் என்று அழைக்கப்படும்” என்று கப்ரியேல் வானதூதர் அறிவிக்கிறார். இம்மானுவேல் என்றால் இறைவன் நம்மோடு என்று பொருள் தருகிறார். இதுதான் கிறிஸ்துமஸ் தினத்தின் நம்பிக்கையூட்டும் நற்செய்தி. இறைவன் நம்மோடு என்றும் வாழ்கிறார் என்பதற்கு அடையாளமாகவே ஒரு குழந்தையின் வடிவில் கடவுள் நம் முன் தோன்றுகிறார். மனித முயற்சிகளோடு இறைவனின் அருளும் இணையும்போது இந்த உலகைச் சூழும் ஆபத்துகள் அனைத்தும் விலகிப் போவதை நீங்கள் காண்பீர்கள். இந்த நம்பிக்கையோடு இந்த கிறிஸ்து பிறப்பு விழாவை மகிழ்வுடன் கொண்டாடுவோம் வாருங்கள்.

ஏனெனில் இறைவன் நமக்காக மனு மகன் அவதாரம் எடுத்திருக்கிறார். எனவே, அன்பின் அடையாளமாக நம் மத்தியில் பிறந்திருக்கும் குழந்தை இயேசுவை உள்ளம் குளிரப் போற்றுகிறோம். நம்மில் யாரும் தனியாக இல்லை. இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையைத் தரப் பிறந்த தெய்வீக பாலகனுக்கு நன்றி கூறுவோம். அவரது பிறப்பால் அவநம்பிக்கை அகன்று, நம்பிக்கையின் ஒளி தோன்றும் உன்னதத் தருணம் இது. இன, மத, தேச எல்லைகள் கடந்து தெய்வக் குழந்தையின் அருள் அனைவரது உள்ளத்தையும் நிறைக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x