Published : 24 Dec 2021 03:36 PM
Last Updated : 24 Dec 2021 03:36 PM

கிறிஸ்துமஸ்: ஐந்து மெழுகுவர்த்திகள் ஏற்றுவதன் நோக்கம்

வால்பாறை தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள 5 வகையான மெழுகுவர்த்திகள். படம்: எஸ்.கோபு

கிறிஸ்துமஸ் குறித்தும் இயேசு பிறப்பின் பெருமைகள் குறித்து வால்பாறை தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தின் பங்குதந்தை மரிய ஜோசப் பகிர்ந்து கொண்டதாவது:

பாவங்களில் அகப்பட்டு கிடந்த மக்களின் ஆழ்மனதில் மண்டிக்கிடந்த இருளை அகற்ற உதித்த பேரொளி, அமைதிக்கான வழியை அடையாளம் காட்டியதால், உலகம் முழுவதும் உள்ள மக்கள் உளம் மகிழ்ந்து கொண்டாடும் உன்னத விழாவாக கிறிஸ்துமஸ் திருவிழா உள்ளது.

பெத்லகேம் என்னும் சிற்றூரில் மாட்டுத்தொழுவத்தில் எளிமையாக பிறப்பெடுத்து கடைநிலை மக்களின் துயர்துடைத்து ஏழைக்கும் ஏற்றமிகு வாழ்வு அளித்து வழிகாட்டியாகவும், இருளில் மண்டி கிடந்த உள்ளங்களில் தனது பேரொளியால் வழியை காட்டி அவர்களுடன் வழியாகவே வந்தவர் இயேசு. அவரின்பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்துமஸ் தினம் கடைநிலை மனிதர்களுக்கு உறுதியான நம்பிக்கை தரும்ஓர் அற்புத விழா.

கீழ்திசை ஞானிகள் 3 பேர் கண்ட விண்ணிலிருந்து வந்த அந்த விடியல் உலக மக்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டுகிறது. காரிருளில் கிடந்த மக்கள் முதன்முதலாக கண்ட பேரொளி மனித குலத்தில் அற்புதங்களை நிகழ்த்த ஒளியான இறைவனே உலகைத் தேடிவந்த நாளில் கிறிஸ்துமஸ் விழா நமக்குச் சொல்லும் செய்தி, அன்பு, நீதி, சமத்துவம், சகோதரத்துவம், பகிர்வு ஆகிய பண்புகள் மனிதர்களின் மனங்களில் செழிக்கட்டும்.

மனிதனே உனக்கான ஒளி தோன்றி உள்ளது. ஆண்டவரின் மாட்சிமை உன் மீது உதித்துள்ளது என்பதை உணர்த்த கிறிஸ்துமஸ் முன்தயாரிப்புகளில் 5 வகையானமெழுகுவர்த்திகள் தேவாலயங்க ளில் ஏற்றப்படும் நிகழ்வு முக்கியத் துவம் பெறுகிறது. கிறிஸ்துவின் பிறப்பு அன்பின் விழா என்பதை உணர்த்த முதல்வாரத்தில் கருநீல நிற மெழுகுவர்த்தியும், நம்பிக்கையின் விழா என்பதை உணர்த்த இரண்டாம் வாரத்தில் மீண்டும் ஒரு கருநீல மெழுகுவர்த்தியும், மகிழ்ச்சியை கொண்டாட மூன்றாம் வாரத்தில் இளஞ்சிகப்பு நிற மெழுகுவர்த்தியும், எதிர்நோக்கினை வெளிக்காட்ட 4-வது வாரத்தில் மீண்டும் கருநீல நிற மெழுகுவர்த்தி என கிறிஸ்துமஸ் தினத்துக்கு முன்பு 4 வாரங்களில் இந்த நான்கு வகையான மெழுகுவார்த்திகள் தேவாலயங்களில் ஏற்றப்படும்.

கிறிஸ்துவின் பிறப்பை தெரிவிக்க ஐந்தாவதாக வெள்ளை நிற மெழுகுவர்த்தியும் ஏற்றப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் திருநாள், உலகினை சூழ்ந்துள்ள நோயிலிருந்து மனிதகுலத்துக்கு நிரந்தர விடுதலை தந்து மக்களை நிம்மதியாகவும், நோயின்றியும் வாழ்வதற்கான சூழலை இந்த கிறிஸ்துமஸ் தினம் இவ்வுலகுக்கு அளிக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x