

காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருப்புட்குழி என்னும் திவ்யதேசத்தில் மாசிமாத ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு 3.03.2016 முதல் 12.3.2016 வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. 5.3.2016 சனிக்கிழமை காலை, புதியதாக நிர்மாணிக்கப்பட்ட தங்க கருடவாகனத்தில் விஜய ராகவப்பெருமாள் எழுந்தருள உள்ளார்.
சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் பாதையில், காஞ்சிபுரத்திற்கு வெகு அருகில் அமைந்துள்ள திவ்யதேசமே திருப்புட்குழி. “பொன்னை மரகதத்தை புட்குழி எம் போரேற்றை” எனத் திருமங்கையாழ்வார் இந்த விஜய ராகவனைப் போருக்குச் செல்லும் ராகவ சிங்கமாகக் கண்டு பாடினார். ஆழ்வாரின் வாக்கிற்கிணங்க இந்த விஜய ராகவனின் நாயகி திருநாமமும் மரகதவல்லி என்றே வழங்கப்படுகிறது.
திருப்புட்குழியில், இராமன் செய்த இந்த தகன அக்னியின் வெப்பம் தாளாது, இத்தலத்தில் உள்ள விஜயராகப் பெருமாளின் கருவறையில், அவனது நாய்ச்சிமார்கள் தேவியும், பூதேவியும் இடம் மாறி சற்றே தலை சாய்த்து எழுந்தருளியிருப்பதாக ஸ்தல புராணம் குறிப்பிடுகிறது.
பறவைகளுக்குத் தலைவன் பட்சி ராஜன் எனப் போற்றப்படும் கருடன். வைணவ மரபில் கருடன் பெரிய திருவடி என்றே குறிப்பிடப்படுகிறார். பிரம்மோற்சவ காலங்களில் கருடன் மேல் ஆரோகணித்து வரும் கருடசேவை உற்சவம் பெரிய திருவிழாவாக அனைத்து வைணவத் திருக்கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. இங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தங்க கருடவாகனத்தில்தான் விஜய ராகவப் பெருமாள் மார்ச் 5-ம் தேதியன்று எழுந்தருள உள்ளார்.
ராமவதார காலத்தில், தந்தைக்கு மகன் ஆற்றும் கடமை போல, ஒரு தனயனின் நிலையிலே நின்று, தனக்கு உதவிய ஜடாயு என்னும் பறவை அரசனுக்கு இறுதிச் சடங்கைச் செய்தது, அனைத்தையும் சம நோக்கு கொண்டு பார்க்கும் ராமனின் குண நலனைக் காட்டுகிறது.
அந்த இராமாயண சரித்திரத்தை ஸ்தல புராணமாகக் கொண்ட திவ்ய தேசமே திருப்புட்குழி. புள்+ குழி =புட்குழி என்றானது. அதாவது ஜடாயு என்னும் பறவைக்கு இராமன் தகனக் கிரியைகள் செய்த வரலாற்றின் பெருமை உடையது.