Last Updated : 10 Mar, 2016 12:10 PM

 

Published : 10 Mar 2016 12:10 PM
Last Updated : 10 Mar 2016 12:10 PM

இறைநேசர்களின் நினைவிடங்கள்: நல்லிணக்கத்தின் மணிமகுடம்- பிரான்மலை ஷைகு அப்துல்லா

திருக்கொடுங்குன்றம், பாரிமலை, பரம்பு மலை என்று பல பெயர்களில் பிரான்மலை அழைக்கப்பட்டு வந்தது. பிரான்மலை என்ற பெயர் ஏற்படக் காரணமாக அமைந்தவர் இறைநேசர் ஷைகு அப்துல்லா என்று கூறப்படுகிறது. ராமநாதபுரம் புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியில் அடக்கமாகியுள்ள அவருடைய தர்கா இங்குதான் இருக்கிறது. ஏறத்தாழ 275 ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டிலிருந்து தென்னகத்துக்கு வந்த மகான் அவர், அவருடைய திருப்பணியை மதித்து நல்லாசியைப் பெற்ற பல சமய அன்பர்களும் அவரை பீரான் என்றும் பிரான் என்றும் அழைத்து வந்தார்கள் அதனால் அந்த இடத்தையும் பிரான்மலை என்று அழைக்கத் தொடங்கினர்.

பிரான்மலைக் குன்றின் உயரம் 2,500 அடி. மலையுச்சியிலுள்ள தர்கா நீண்ட காலம் திறந்த நிலையிலேயே இருந்தது. பிற்காலத்தில்தான் சுவர் அமைக்கப்பட்டது. தர்காவுக்கு நானூறு மீட்டர் கீழே ஒரு மண்டபம் உள்ளது. ஷைகு அப்துல்லா வலியுல்லாவைத் தரிசிக்கவும்,நேர்ச்சையை நிறைவேற்றவும் வருபவர்கள் இந்த மண்டபத்தில்தான் தங்குகிறார்கள். பொதுவாக தர்காக்களில் இறைநேசர்களின் நினைவு விழா குறிப்பிட்ட மாதம் ஓரிரு தினங்களில்தான் நடைபெறும் ஆனால் பிரான்மலை தர்காவில் வருடம் முழுவதும் விழாக்கோலமாக இருக்கிறது.

நம்பிக்கை தரும் தர்கா

ஆண்டு முழுதும் இன மத வேறுபாடு இல்லாமல், அனைத்துச் சமூக அன்பர்களும், சுற்றுலாப் பயணிகளும் இந்த தர்காவுக்கு வருகின்றனர். தரிசிக்க வருவோரின் வேண்டுகோள் யாவும் பிரான்மலை இறைநேசரின் நல்லாசியினால் நிறைவேறுகிறது என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது. பிரார்த்தனைகள் நிறைவேறியபின், பலரும் நன்றி செலுத்த தர்காவுக்கு வருகிறார்கள். காரைக்குடியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் தர்கா அமைந்துள்ளது.

குழந்தைப் பேறு, வேலைவாய்ப்பு, நல்ல இல்லற வாழ்க்கை மற்றும் வாழ்வின் தீய சக்திகளை விரட்டியடித்தல் போன்ற வேண்டுதல்களுக்கு ஷைகு அப்துல்லா நாயகரின் நல்லாசியினால் பரிகாரமும் பலனும் கிடைப்பதாகப் பக்தர்கள் போற்றுகின்றனர்.

பக்தர்களின் அனுபவங்கள்

ஷைகு அப்துல்லா வலியுல்லா அவர்கள் அன்றும் இன்றும் பற்பல அற்புதங்களை நிகழ்த்தி வந்துள்ளதை பிரான்மலை அன்பர்கள் விவரிக்கிறார்கள். பிரான்மலைக்கு அவ்வப்போது வந்து தரிசித்துச் செல்லும் ஒரு பெண்மணியின் அனுபவம் இது:

சிறுமியாக அவர் இருந்தபோதே தாயார் இறந்துவிட்டார். தந்தை மறுமணம் செய்து கொண்டார். சிற்றன்னையாக வந்த அந்த மாது சிறுமியைக் கொடுமைப்படுத்தி வந்தாள். அது மட்டுமின்றி அவளைப் பற்றி அன்றாடம் கணவரிடம் குற்றம் குறைகளைக் கூறிவந்தாள், பொறுமை இழந்த தந்தை மகளை மலைக்குக் கொண்டுசென்று அடர்ந்த காட்டுப் பகுதியில் உருட்டித் தள்ளிவிட்டார். பாதாளம் போன்ற ஒரு பள்ளத்தில் மரத் தூர்களுக்கு இடையே சிக்கிக்கொண்டாள் சிறுமி.

மறுநாள் அந்தப் பக்கம் விறகு பொறுக்குவதற்காக வந்தவர்கள் சிறுமியின் அழுகுரலைக் கேட்டுப் பள்ளத்தை எட்டிப் பார்த்தார்கள். ஆபத்தான அதல பாதாளம் அது என்பதால் கிராமத்திற்குச் சென்று பலரை அழைத்து வந்து சிறுமியை மீட்டார்கள். மேலே வந்த சிறுமி எவ்வித அதிர்ச்சியும் கலக்கமும் இல்லாமல் நடக்க ஆரம்பித்தாள். பிரான்மலை நாயகரின் ஆசியினால் தான் அந்தச் சிறுமி பாதாளத்திலிருந்து உயிர் தப்பியதாக ஊர் மக்கள் நம்பினார்கள். ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது என்று சொல்கிறார்கள்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த கலந்தர் முகியிதீன் ராவுத்தர் குழந்தைச் செல்வம் இல்லாமல் இருந்தார். முதலில் ஆண் குழந்தை பிறந்தால் இறைநேசர் அப்துல்லாவின் பெயரையே பிள்ளைக்குச் சூட்டுவதாக எண்ணியிருந்தார். ஆனால் குழந்தை பிறந்ததும் வேறு பெயரை வைத்து விட்டார். பிறகு இரண்டாவது பிள்ளை பிறந்தது. சிறிது காலத்தில் முதல் குழந்தை இறந்துவிட்டது. எண்ணியபடி இறைநேசரைக் கண்ணியப்படுத்தத் தவறியதால்தான் குழந்தையை இழக்க நேர்ந்து விட்டது என்பதை உணர்ந்து வருந்தினார் கலந்தர் முகியிதீன்.

இந்துக்களின் நன்கொடை

இந்து சமய அன்பர்கள் பிரான்மலையில் பிறக்கும் தங்கள் ஆண் குழந்தைகளுக்கு ‘மலையான்’ என்று பெயரிடும் வழக்கம் உள்ளது. பிறக்கும் பிள்ளைகளுக்கு மலைமேலேயே முடி எடுக்கும் வழக்கமும் இருந்து வருகிறது.ராஜா சர் முத்தையா செட்டியாரின் முயற்சியினால் பிரான் மலைக்கு பஸ் போக்குவரத்து ஏற்பட்டது. இங்கு இந்து மக்களே முஸ்லிம்களைவிட அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். விவசாயத் தொழில்புரியும் இவர்களில் ஒரு சாரார் விளைச்சலில் ஒரு சிறு பகுதியை மலைக்குறுணி எனும் பெயரில் தர்காவைப் பராமரித்து வரும் பக்கீர் குடும்பத்துக்கு ஆண்டுதோறும் அளித்து வருகிறார்கள்.

ஷைகு அப்துல்லா வலியுல்லாவைத் தரிசிக்க தர்காவுக்கு வருபவர்கள் பரிசுத்தமாக வரவேண்டும் என்று சொல்லப்படுகிறது. அப்படி வராதவர்களின் நேர்ச்சை நிறைவேறாது என்றும், வழிப்பயணம் நலமாக அமையாது என்றும் ஒரு நம்பிக்கை நிலவிவருகிறது. தரிசிக்க வருவோர் தங்களுடன் எடுத்து வரும் நாணயங்களும் பணநோட்டுகளும்கூட சுத்தமாக இருக்க வேண்டுமாம்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x