Last Updated : 31 Mar, 2016 12:25 PM

 

Published : 31 Mar 2016 12:25 PM
Last Updated : 31 Mar 2016 12:25 PM

இறைநேசர்களின் நினைவிடங்கள்: அறிவாய் வெளியாய் வெளிமீது ஒளிவாய் - கோட்டாறு ஞானியார் சாகிபு அப்பா

நாகர்கோயில் நகரத்தில் உள்ள கோட்டாறு பல இறைநேசர்களும் ஞான இலக்கியச் செல்வர்களும் உறையும் இடமாகும். ஞானியார் அப்பா என்றும் ஞானியார் சாகிபு என்றும் போற்றப்படும் இறைநேசரின் தர்கா இங்குதான் உள்ளது.

ஞானியார் அப்பாவின் இயற்பெயர் ஷெய்கு முகியிதீன் மலுக்கு முதலியார். அப்துல் காதிர் சாகிபு, மீரான் பீவி தம்பதியரின் அன்புச் செல்வராக ஹிஜ்ரி 1167-ல் (கி.பி 1747) அவர் பிறந்தார்.

தாய் கண்ட கனவு

அவர் சிசுவாகக் கருவில் இருந்தபோது தாயார் ஒரு கனவு கண்டார். பூரணச்சந்திரன் வானத்திலிருந்து இறங்கி தமது மடியிலிருந்துபடி ஒளியோடு விளையாடும் கனவுக் காட்சியே அது. அவர் உடனடியாக எழுந்து கணவரிடம் அதைச் சொன்னார். கணவர் இறைவனைத் துதித்தபடி, “ நாடு புகழ்ந்து போற்றும் அற்புத காரண ஞானச் செல்வமாய் ஒரு குழந்தையை பெற்றெடுப்பீர்” என்று மனைவியிடம் கூறினார். அதன்படி பத்து மாதங்களுக்குப் பிறகு ஷெய்கு ஞானியார் சாகிபு பிறந்தார்.

ஞானியார் அப்பா பள்ளிக்குச் செல்லும் வயதில் கல்வி கற்காமல், பதினான்கு வயது வரை இறை சிந்தனையில் மவுனமாக ஈடுபட்டிருந்தார். ஹிஜ்ரி மூன்றாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் தோன்றிய சூஃபி ஞானி மன்சூர் ஹல்லாஜின் சீடர்களில் ஒருவரான மவுலானா சையிது தமீம், கோட்டாறு பாவா காசிம் பள்ளிவாசலில் தங்கியிருந்து அற்புதச் செயல்கள் நிகழ்த்திவந்தார். அவரிடம் ஞானியார் அப்பா சென்று ஞானநெறிகளைக் கற்றார். தீட்சையும் பெற்றார். பதினாறு வயது வரை தியான யோகங்களில் ஈடுபட்டு வந்தார்.

மெய்ஞானத் திருப்பாடல்கள்

குருவின் ஆணைப்படி திருப்பணிகளைத் தொடங்கிய ஞானியார் அப்பா, முதன்முதலாகக் கமுதிக்குச் சென்றார். அங்கு தீவினைகளில் ஈடுபட்டு வந்த இருவரை நல்வழிப்படுத்தி தீட்சை அளித்தார். அந்த ஊரில் தங்கியிருந்த போதே ஞானியார் சாகிபு மெய்ஞ்ஞானத் திருப்பாடல்களைப் பாடத் துவங்கினார்.

அங்கிருந்து கோட்டாறுக்குத் திரும்பும் வழியில் மேலப்பாளையத்தில் தங்கியிருந்து சடை அப்துல் காதிறு என்பவருக்குத் தீட்சையளித்தார். அப்பாவின் நினைவாக நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஞானியார் அப்பா தைக்கா அங்கே உள்ளது.

ஞானியார் சாகிபு கோட்டாறு திரும்பியதும் தமது குருநாதரின் கட்டளைப்படி பல ஞான வழிபாடுகளையும் நற்போதனைகளையும் செய்துவந்தார். பல அற்புதச் செயல்களைப் புரிந்து மக்களை வழிபடுத்தினார். பின்னர் இரு மாதர்களை மணமுடித்துப் பிள்ளைச் செல்வங்களும் பெற்றார்.

கேரளத்திலும், காயல் பட்டினத்திலும் வாழ்ந்த இறைநேசச் செல்வர்களின் அறிமுகம் பெற்று ஆத்மார்த்த ஞான விஷயங்களைப் பரிமாறிக்கொண்டார் ஞானியார். திருப்பணிகளில் முழுமுச்சாக நீண்டக்காலம் ஈடுபட்டிருந்த அவர், இறைவன் நாட்டப்படி தமக்கு இறுதி நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்தார். தமது சகோதரர் இளைய ஞானி ஷெய்கு உதுமான் ஆலிமிடம் அதனை அறிவித்துச் சில பொறுப்புகளை ஒப்படைத்தார்.

முன்னறிவிப்பின்படி ஞானியார் அப்பா ஹிஜ்ரி 1209 ஆம் வருடம் (கிபி. 1794 ) ஜமாத்துல் அவ்வல் மாதம் 14 வெள்ளிக்கிழமை இரவு உயிர் நீத்தார். அவர் கூறிய இடத்தை அவர் தம்பி விலைக்கு வாங்கி அங்கேயே ஞானியார் சாகிபை அடக்கம் செய்தார். அங்கு தர்காவும் கட்டப்பட்டது.

கோட்டாற்றைச் சேர்ந்த அகமது லெப்பையின் மகள் பெற்றெடுத்த ஆண் குழந்தை, நோயுற்று இறந்த தகவலைக் கண்ணீர் சிந்தியபடி ஞானியாரிடம் கூறிப் பரிகாரம் நாடினார்கள். அவர்களின் வீட்டுக்குச் சென்று குழந்தையை மீண்டும் உயிர்பெற்றெழச் செய்தாராம் அப்பா.

ராமநாதபுர சேதுபதியின் படையணியைச் சேர்ந்த வேலைக்காரர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்ட து. ஞானியார் அந்தக் கையை மீண்டும் பொருத்தி இயல்பு நிலையை ஏற்படுத்தினார் என்றும் கூறப்படுகிறது.

ஞானியார் சாகிப் சென்ற இடங்களில் சீடர்களின் எண்ணிக்கை பெருகியது. கோட்டாறு, திருவிதாங்கூர், கமுதி, பழனி,தேரூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், ஏர்வாடி, மேலப்பாளையம், ஆளூர், தக்கலை, திட்டுவளை, தோவாளை, திருவனந்தபுரம், பறக்கை, சுசீந்திரம் ஆகிய ஊர்களில் சீடர்கள் பெருகினர்.

ஞானப் பாடல்கள்

செய்கு முகியிதீன் மலுக்கு முதலியாரான ஞானியார் சாகிபு இயற்றிய ஞானப் பாடல்கள் படிப்போரை வியப்பில் ஆழ்த்துகின்றன. இறைவனை தரிசிக்கும் ஒரு காட்சி:

“அணுவாகியதும் அணுவுக்கு அணுவாய் அழிவற் றுரையாகிய வேதமேலாம்

அணுவுக்கு அணுவாய் அணுயா வையுமாய் அறிவாய் வெளியாய் வெளிமீது ஒளிவாய் அணுவுக்கு அணுவொளி வெளியாய் அறிவாய் அகண்ட பரிபூரண சின்மயமாய் அணுவுக்கு அணுவாய் எனையாள் பரமே அகண்ட பரிபூரண பூரணனே!”

பூரணப் பதிகப் பாடல்களில் இறைவனைப் போற்றிப் புகழ்கிறார் அவர் இயற்றிய ஞான இலக்கியங்களின் பட்டியல் விரிவானது.

ஞான தோத்திரம், ஞான காரணம், ஞான தேவாரம், ஞான ஏகதேசம், ஞான ஆனந்தம், ஞான அனுபவ விளக்கம், ஞான அந்தாதி, ஞானக் கும்மி, ஞான வேதாட்சர வருக்கம், ஞானத் திருப்புகழ், ஞானத் திருநிதானம், ஞானக் குருவடி விளக்கம், ஞான அம்மானை, ஞான கீதாமிர்தம், ஞானப் பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைப் படைத்துள்ளார். ஞானியார் அப்பாவின் பக்திப் பாடல்கள் அனைத்தும் மெய்ஞ்ஞானத் திருப்பாடல் என்ற பெயரில் நுாலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. சதாவதானி கா.ப. செய்கு தம்பி பாவலர், ஞானியார் அப்பாவின் பெண்வழிப் பேரர் ஆவார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x