

திருமலையப்பன் மீது பக்தியோடு பாடி அருள் பெற்றவர் தரிகொண்ட வெங்கமாம்பாள் என்னும் பக்தை. இவரை மீரா, ஆண்டாள் ஆகியோரின் மறு வடிவம் என்று சொல்லலாம்.
ஆந்திராவில் தரிகொண்டா என்ற சிற்றூரில் 1730 ஆம் ஆண்டு பிறந்த இவர், தன் வாழ்வைத் திருமலை அப்பனுக்கே அர்ப்பணித்தார். ஒவ்வொரு நாள் இரவும் பகவானுக்கு ஆரத்தியும், முத்துக் காணிக்கையும் சமர்ப்பித்துவந்தார். முத்து ஆரத்தி என்ற வழக்கம் இன்றும் நடைபெற்றுவருகிறது. திருமலையில் நடைபெறும் நித்ய அன்னதானம் இவர் பெயரில் நடந்துவருகிறது.
வாழ்வின் குறிக்கோள் பக்தியும், தூய்மையுமே என்பதைத் தன் பாடல்களில் வெளிப்படுத்திப் பல நூறு பாடல்களைப் பாடியிருக்கிறார். இவருடைய பாடல்களைப் பிரபலமாக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் சில திட்டங்களை நிறைவேற்றிவருகிறது.
சென்னை சர்வாணி சங்கீத சபையினர் தரிகொண்ட வெங்கமாம்பாள் பாடல்களைக் கொண்ட இசை நிகழ்ச்சியை கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்திவருகின்றனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் பணியாற்றும் முனைவர். வி.எல்.வி. சுதர்சன் தேர்ந்தெடுத்த சில பாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்துள்ளார்.
இவ்வாண்டு இந்த இசை நிகழ்ச்சி பிப்ரவரி 28 ம் தேதி மயிலை ராகசுதா அரங்கத்தில் நடைபெற்றது.
புவனகிரி விஷ்ணுப்ரியா சுதர்சன் கடந்த நான்கு வருடங்களாக இந்த இசை நிகழ்வில் தொடர்ந்து பாடிவருகிறார். தெலுங்குப் பாடல்களை அதன் அர்த்தமும் உச்சரிப்பும் சிதையாமல் பாவத்தோடு பாடியது குறிப்பிடத்தக்கது.
இவரோடு இவ்வாண்டு இணைந்து பாடியவர் கிருஷ்ணவேணி. கர்னாடக இசை மற்றும் மெல்லிசை, நாட்டுப்புற இசை எனக் கலந்து வழங்கப்பட்ட பாடல்களுக்கு பின்னணி இசையை வயலினில் ராமும், புல்லாங்குழலில் சியாமளி வெங்கட்டும் வழங்கினர். மிருதங்கம் விஜேந்திரன், தபலா சத்தியநாராயணா, கடம் வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர்.
தரிகொண்ட வெங்கமாம்பாவைப் பற்றி தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் அறிமுக உரையை மதி ராம்நாத் வழங்கினார்.