இஸ்லாம் வாழ்வியல்: இஸ்லாம் வாழ்வியல்) சீர்திருத்திய இறையச்சம்

இஸ்லாம் வாழ்வியல்: இஸ்லாம் வாழ்வியல்) சீர்திருத்திய இறையச்சம்
Updated on
2 min read

தொழுகை முடிந்ததும் அந்த இளைஞனுக்குக் கடும்பசி ஏற்பட்டது. உண்ணுவதற்கு ஒன்றுமில்லை! பக்கத்திலிருந்த ஆற்று நீரையாவது குடித்து சற்று இளைப்பாறலாம் என்று எண்ணி ஆற்றங்கரைக்குச் சென்றான். கைகளில் நீரை அள்ளியெடுத்துப் பருகும்போது, எதேச்சையாக அவனது பார்வை நீரில் மிதந்து வந்த ஓர் ஆப்பிள் பழத்தின் மீது பட்டது. பசியின் விளைவாக அதை எடுத்துத் தின்றும் விட்டான். பசி ஓரளவு விலகியது. மனத்தவிப்பும் அடங்கியது.

எதையும் ஆற, அமர யோசிக்கும்போதுதான் தெளிவும் பிறக்கும். நிலைமையும் புரியும். இளைஞனுக்குத் தான் உண்ட ஆப்பிள் பழம் சம்பந்தமாய் ஒரு சந்தேகம் எழுந்தது. நேரம் செல்லச் செல்ல அது பெரிதாய் வளர்ந்தது. மன அமைதியும் பறிபோனது.

சற்று நேரத்துக்கு முன் நீரில் கிடைத்த ஆப்பிள் பழம் யாருடையது? நிச்சயமாய் அது யாரோ ஒருவருக்கு சொந்தமானதாகத்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், சொந்தக்காரர்களின் அனுமதி இல்லாமல் எடுத்து உண்டது தவறான செயல். இப்போது என்ன செய்வது? அதற்கு ஒரே வழி ஆப்பிள் பழத்தின் உரிமையாளரிடம் நடந்தவற்றை விளக்கி மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மறுமையில் இறைவனின் கோபத்திலிருந்து தப்பவே முடியாது! இறையச்சத்தால் தவித்து, பழம் மிதந்து வந்த திசையிலேயே இளைஞன் நடந்தான்.

சிறிது தொலைவு நடந்ததும் ஆற்றின் கரையோரம் ஓர் ஆப்பிள் தோட்டம் இருப்பதைக் கண்டான். அந்த தோட்டத்து மரத்திலிருந்துதான் பழம் பழுத்து ஆற்றில் விழுந்திருக்க வேண்டும். அப்படி மிதந்து வந்த பழம்தான் தான் உண்டது என்று எண்ணி இளைஞன் தோட்டத்தில் நுழைந்தான்.

தோட்டத்தின் மூலையில் ஒரு குடில் தென்பட்டது. “அய்யா..! அய்யா..!” என்று அழைத்தான்.

சற்று நேரத்தில் ஒரு முதியவர் அவனிடம் வந்தார். நீண்ட வெள்ளைத்தாடி. சுருக்கம் விழுந்த முகம். கருணை சொரியும் கண்கள். பழுத்த பழமாய் அவர் இருந்தார்.

“யாரப்பா நீ என்ன வேண்டும்?” என்று அவர் இளைஞனிடம் கேட்டார்.

“அய்யா..! ஒரு தவறு நடந்துவிட்டது. பசிக்கொடுமைத் தாளாமல் ஆற்றில் மிதந்துவந்த தங்களின் தோட்டத்து ஆப்பிள் பழம் ஒன்றை உங்கள் அனுமதி இல்லாமல் நான் உண்டுவிட்டேன். அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ளவே இங்கு வந்தேன்! பெரியவரே! என் தவறை மன்னித்துவிடுங்கள். மறுமை நாளின் தண்டனையிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்” என்று அந்த இளைஞன் பரிதாபமாய் கெஞ்சலானான்.

அரும்பு மீசை, குறுந்தாடி, சிவந்த உடல், நெடிதுயர்ந்த தோற்றம் கொண்ட அந்த இளைஞனைக் கண்டு முதியவர் யோசனையில் மூழ்கிவிட்டார்.

தம்பி! நீ செய்தது சாதாரணமான தவறல்ல. இதற்கு நீ கடுந்தண்டனை அனுபவித்தேயாக வேண்டும். நாளையிலிருந்து சரியாய் ஓராண்டு காலம் இந்தத் தோட்டத்துக்கு நீர்ப்பாய்ச்சி, பராமரித்து வர வேண்டும். இதுதான் உனக்கான தண்டனை!”

எவ்வளவு சிரமமிகுந்த தண்டனையாக இருந்தாலும் அதை இம்மையிலேயே அனுபவித்து இறைவனின் சந்நிதியில் நிரபராதியாய் நிற்பதே சிறந்தது என்று இளைஞன் முடிவெடுத்தான். முதியவரின் சொல்படியே தோட்டத்தை பராமரிக்க ஆரம்பித்தான்.

ஓராண்டு கழிந்தது.

நேரே முதியவரிடம் சென்ற இளைஞன், “அய்யா, நான் வேலையில், சேர்ந்து நேற்றுடன் ஓராண்டு முடிந்துவிட்டது. தங்களது நிபந்தனையை என்னால் முடிந்தவரை சிறப்பாக முடித்துவிட்டேன்” என்றான் பணிவாக.

“சரி..! அடுத்ததாக எனது பரிசொன்றையும் நீ ஏற்றுக் கொண்டால்தான் உனக்கு மன்னிப்பு” என்ற பெரியவர் தொடர்ந்து சொன்னார். “கால் ஊனமுற்ற, வாய்பேசாத, காதுகேளாத கண்பார்வை இழந்த என் பெண்ணையும் மணமுடித்துகொள்ள வேண்டும்”. இளைஞனுக்கு வேறு வழியில்லை. திருமணமும் நடந்தது.

முதலிரவு அறையில் நுழைந்த இளைஞன் அழகே உருவான பெண்ணொருத்தி முகமன் சொல்லி அவனை வரவேற்றதைக் கண்டு திடுக்கிட்டான். நேரே முதியரைத் தேடிச் சென்றான். ஏதோ ஆள்மாறாட்டம் நடந்திருக்கலாம் என்று அச்சத்தோடு தெரிவித்தான். முதியவர் புன்முறுவல் பூத்தார். அமைதியுடன் சொன்னார்.

“தம்பி! உன் அறையிலிருப்பது சந்தேகமில்லாமல் எனது மகள் ஃபாத்திமாதான்! அவளது காதுகளில் இதுவரை எந்தவிதமான தீயச்சொற்களும் விழவில்லை அதனால்தான் அவள் காது கேளாதவள் என்றேன். அவள் எந்த அந்நிய ஆடவன் கண்ணில் பட்டதில்லை. எந்த அந்நிய ஆடவனை ஏறெடுத்தும் பார்த்ததில்லை அதனால்தான் அவள் பார்வையற்றவள் எனத் தெரிவித்தேன்.

அவள் இதுவரை உண்மையைத் தவிர வேறொன்றையும் பேசி அறியாதவள். அதனால்தான் வாய்பேசாதவள் என்றேன். தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே சென்றதில்லை. அதனால்தான், கால் ஊனமுற்றவள் என்றேன். நான் மறைப்பொருளில் சொன்னவை இவை. தவிர, என் மகள் எந்த குறையும் இல்லாதவள். உன் தவறை நான் மன்னித்துவிட்டேன்.” என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார் புகழ்பெற்ற இஸ்லாமிய பேரறிஞர் அப்துல்லாஹ் சோமய். மணமகன் பெயர் அபூசாலிஹ் மூஸா.

இந்த தம்பதிகளுக்கு பிறந்தவர்தான் ஈரான், ஜீலான் நகரைச் சேர்ந்த புகழ்பெற்ற இறைஞானி ஷேக் அப்துல் காதிர் ஜீலானி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in