விரைவில் வரம் அருளும் பெருமான்

விரைவில் வரம் அருளும் பெருமான்
Updated on
2 min read

மார்ச் 7 - மகா சிவராத்திரி

சிவராத்திரியன்று சிவனைக் குறித்து விரதமிருக்கும் வழக்கம் உண்டு. ஒவ்வொரு விழாவும் மனிதனின் உடலையும் ஆன்மாவையும் சுத்திகரிக்க வல்லது. நமது தூக்க சுழற்சியை ஒரு நாள் மடை மாற்றிவிட்டு, பின்னர் தொடரச் செய்யும் முயற்சியாகச் சிவராத்திரி அமைந்துள்ளது.

சிவராத்திரி பிறந்த கதை

வேடன் ஒருவன் வேட்டையாடியபடியே காட்டிற்குள் வெகுதூரம் சென்றுவிட்டான். அவன் தன் வீட்டை அடைவதற்குள், மாலை மயங்கி இருட்டிவிட்டது. வழி சரியாகப் புலப்படாததால் திகைத்து நின்றான் வேடன். அப்போது சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்ட அவன், அருகில் இருந்த வில்வ மரத்தின் மீதேறி, அதன் கிளையில் பாதுகாப்பாக அமர்ந்துகொண்டான்.

சிறிது நேரத்தில் மனித வாடையைப் பிடித்துக்கொண்டு வந்த சிங்கம் அந்த மரத்தின் அடியிலேயே நின்றுகொண்டது. சிறிதளவு கண் அசந்தாலும், வீழ்வது சிங்கத்தின் வாயில்தான் என்பதை உணர்ந்த வேடன் பயந்தான். இரவு முழுவதும் விழித்திருக்க வழி ஒன்றைக் கண்டுபிடித்தான். தான் ஏறி அமர்ந்துள்ள மரத்தில் இருந்து, இலையைக் கிள்ளிக் கிள்ளிக் கீழே போட முடிவு செய்தான். இரவு முழுவதும் இடையறாமல் இச்செயல் தொடர்ந்தது.

பொழுது புலர்ந்தது

காலையில் சூரியன் எழுந்தான். பொழுது புலர்ந்தது. புள்ளினம் ஆர்த்தன. வேடன் மரத்திற்குக் கீழே சிங்கம் இருக்கிறதா என்று பார்த்தான். அது அவ்விடத்தைவிட்டுப் போயிருந்தது. மரத்தை விட்டுக் கீழிறங்கினான். அவன் இரவு முழுவதும் கிள்ளிப் போட்ட இலைகள் மலைபோல் குவிந்திருந்தன.

அந்த இலைக் குவியலுக்கு உள்ளே இருந்து அசரீரி ஒன்று கேட்டது. “இப்பூவுலகில் செல்வ வளம் பெற்று வாழ்வாய். தக்க காலத்தில் கயிலாயம் வந்தடைவாய்” என்றது.

இலைக் குவியலை விலக்கிப் பார்த்தான் வேடன். அங்கே லிங்க ரூபம் அவன் கண்ணில்பட்டது. மேலும் அசரீரி கூறியது “இரவெல்லாம் கண் விழித்து, இந்த வில்வ மரத்தில் இருந்து இலைகளைப் பறித்து, இடையறாமல் இரவு முழுவதும் என்மீது போட்டுக்கொண்டே இருந்தாய். இன்று சிவராத்திரி என்பதால், நீ அறியாமலேயே செய்த புண்ணியத்தின் பலனால், உனது இக, பர வாழ்வு சிறக்கும்” என்றது அசரீரி.

அறிந்தும் அறியாமலும்

அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை நீக்கக் கோரி இறைவனை மன்றாடுவது பக்தர்கள் வழக்கம். ஆனால் அறிந்தும், அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்யும் புண்ணியங்களையும் இறைவன் கணக்கில் கொண்டு, அவற்றிற்கான நற்பலன்களைத் தானே அளித்துவிடுகிறான் என்பது இப்புராணக் கதை மூலம் விளங்குகிறது. இந்நிகழ்வை ஒட்டியே சிவராத்திரி, சிவாலயங்களில் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி நித்திய, மாத, பட்ச, யோக எனப் பலவகைப்பட்டாலும், மகாசிவராத்திரியே மிகப் பிரபலமானது.

ஆஷி தோஷி

வடநாட்டில் சிவராத்தியன்று பகலில் பல மைல் தூரம் நடந்து சென்று, சிவபெருமானின் திருவுருவச் சிலைகளுக்கு அபிஷேகம் செய்ய, கங்கையில் இருந்து நீர் எடுத்துக்கொண்டு தங்கள் கிராமங்களுக்குத் திரும்பி வருவார்கள் பக்தர்கள். அப்போது, சிவனின் உடுக்கையைக் குறிக்கும் ஓலியான `பம், பம் போலோ’, `சிவ், சிவ் போலோ’ என்று கோஷமிட்டுக்கொண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாரி, சாரியாகச் சாலையில் செல்வார்கள். சிவபெருமானை, `ஆஷி தோஷி’ என்று சொல்வார்கள். சிவனைப் பூஜித்தால், சட்டென்று வரமளித்துவிடுவார் என்பதே இதன் பொருள்.

சிவராத்திரி கொண்டாடுவது எப்படி?

வயிறு நிறைய உண்டால், தூக்கம் கண்ணைச் சுழற்றும் என்பதால் சிவராத்திரியன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பின் சிறிதளவே உணவு உட்கொள்ள வேண்டும். இந்த உணவுக் கட்டுப்பாடு நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் பிற நோயாளிகளுக்கும் பொருந்தாது.

சிவ நாமத்தை உதடு பிரியாமல் மனத்திற்குள் ஜெபிக்க வேண்டும். சிவாலயங்களுக்குச் சென்று சிவ தரிசனம் செய்ய வேண்டும். இயன்றால் இரவு முழுவதும் சிவாலயத்திலேயே தங்கி, இரவு ஒவ்வொரு ஜாமத்திலும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளைக் கண்டு களிக்க வேண்டும்.

மறுநாள் விடியற்காலை, ஸ்நானம் செய்துவிட்டு, வீட்டிலுள்ள சிவனை பூஜிக்க வேண்டும். அதன் பின் தேவையான அளவு உண்ணலாம். அன்றைய தினம் பகல் முழுவதும் தூங்காமல், இரவில் வழக்கம் போல் தூங்கலாம். இந்த சுழற்சி மாற்றம் உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி தரும். இம்மைக்கும், மறுமைக்கும் நல் வாழ்வு அளிக்கும் என்பது ஐதீகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in