

நிகழும் பிலவ வருட ஐப்பசி மாதம் 27-ம் தேதி சனிக்கிழமை சுக்ல பட்சத்து தசமி திதி, மேல்நோக்குள்ள சதயம் நட்சத்திரத்தில், கும்ப ராசியில், வியாகாதம் நாமயோகம், தைதுலம் நாமகரணத்தில், பஞ்சபட்சியில் மயில் பலவீனம் அடையும் நேரத்தில், நேத்திரம் ஜுவனம் நிறைந்த அமிர்தயோகத்தில், ரிஷப லக்கினத்தில் நவாம்சத்தில் கும்ப லக்கினத்தில், புதன் ஓரையில் பொன்னன் எனப் புகழப்படும் பிரகஸ்பதியாகிய குருபகவான் மகரம் ராசியிலிருந்து கும்பம் ராசிக்குள் 13.11.2021 அன்று மாலை 6 மணி 10 நிமிடத்தில் அமர்கிறார்.
குருவளைய வீடென்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படும் ஸ்திரவீடான கும்பம், ராசியில் குரு அமர்வதால் உலகெங்கும் நோய் பயம், உயிர்பயம் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். பாதாளத்தில் படுத்து கிடக்கும் பொருளாதாரம் மெல்ல மெல்ல எழுந்து நிற்கும். கூண்டுக் கிளிகளாய் அடைப்பட்டு கிடக்கும் மானுடம் இனி வீட்டுக் காவலுக்கு விடை தந்துவிட்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும்.
நீசமாகி தன்னிலை தாழ்ந்து கிடந்த குருபகவான் இப்போது சனிபகவானை விட்டு விலகி தனித்து அமர்வதால் ஷேர் மார்க்கெட்டில் பங்குகள் விலை ஏறும். தங்கத்தின் பயன்பாடு அதிகரிக்கும். புதிய தங்கச் சுரங்கங்கள், படிமங்கள் கண்டறியப்படும். தங்கத்தின் விலை உயரும். அரசாங்க நிறுவனங்கள் தனியார் மயமாகும். ஆயுள்காப்பீட்டுத்துறை மற்றும் தொலைத்தொடர்புத் துறை பங்குகள் கைமாறும்.
குருபகவான் சிம்மத்தை பார்ப்பதால் அரசியலில் ஆளுபவர்கள் கை ஓங்கும். ஆட்சியாளர்களின் நீண்டநாள் ஆசைகள் நிறைவேறும். பெட்ரோல், டீசல் விலை உயரும். எரிபொருளுக்கான மாற்று வழியை மத்திய அரசு கண்டறிந்து விலையேற்றத்தைத் தடுக்கும். நிலக்கரிக்குரிய கிரகமான சனிபகவான் வலுத்திருப்பதால் நிலக்கரிச் சுரங்கங்களின் உற்பத்தி அதிகமாகும். குருபகவான் மிதுனத்தைப் பார்ப்பதால் பள்ளி, கல்லூரிகள் முழுவீச்சில் இனி செயல்படும். மாணவர்கள் சாதிப்பர்.
துலாம் ராசியை குரு பார்ப்பதால் வியாபாரம் சூடுபிடிக்கும். மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகும். ரியல் எஸ்டேட் வேகமாகி சொத்துக்களின் விலை உயரும். சொகுசு வாகனங்கள் வாங்குவோர் அதிகரிப்பர். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யும். புதிய சாலைகள், மேம்பாலங்கள் அமைக்கப்படும். நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இன்டர்நெட் சேவைகள் பெருகும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மன உளைச்சலிலிருந்து விடுபட்டு மக்கள் மகிழ்ச்சி அடைவர். சுற்றுலாத்துறை மற்றும் சினிமாத்துறை மீண்டும் பிரபலமாகும்.
எல்லைப் பிரச்சினைகள் பேச்சு வார்த்தைகள் கட்டுப்படுவதாக இருந்தாலும் போருக்கு நாடுகள் தயாராகும். இந்நிலையில் ஆயுதபலம், ராணுவபலம் பலமடங்கு அதிகரிக்கும். மதுபானங்களுக்குரிய வீடாகிய கும்பராசியில் குரு அமர்வதால் மதுபானம் உற்பத்தி அதிகரிக்கும். புது மதுபானக் கடைகளும் ஆரம்பமாகும். உலகெங்கும் மது அருந்துவோர் அதிகமாவார்கள். லாட்டரி, சூதாட்டம் பெருகும். போதை பொருள் கடத்துவோர் பிடிபடுவர்.
சந்தையில் வெளியாகும் தரமான நிறுவனங்களின் உயர்ரக பொருட்கள் மற்றும் சாதனங்களைப் போல் போலியான பொருட்கள் சந்தையில் அதிகம் புரளும். உணவு மற்றும் மருந்து வகைகளில் கலப்படங்கள் பெருகும். முகநூல், வாட்ஸ்அப்களில் வதந்திகளும், வாதங்களும் அதிகம் வலம் வரும்.
குடமாகிய கும்பத்தில் குரு அமர்வதால் குளம், குட்டை உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகள் யாவும் நிரம்பி உணவு உற்பத்தி அதிகரிக்கும். சேதாரங்களும் இருக்கும். இந்த கும்ப குரு ஒரு கும்பாபிஷேகத்தை போல மக்களையும், மண்ணில் வாழ் உயிரினங்களையும் குதூகலமாக்கும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |