Published : 12 Nov 2021 12:13 PM
Last Updated : 12 Nov 2021 12:13 PM

குருப்பெயர்ச்சி பொதுப் பலன்கள்: மிதுன ராசி வாசகர்களே (13.11.2021 முதல் 13.4.2022 வரை)

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

பழைய கலைப்பொருட்களை பத்திரப்படுத்தி வைக்கும் பழக்கமுள்ள நீங்கள் நேர்மையை நேசிப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் மறைந்து கொண்டு எதையும் எட்டாக் கனியாக்கியதுடன், மனஅழுத்தத்தையும், எதிர்மறை எண்ணங்களையும், விபத்துகளையும் தந்து கொண்டிருந்த குருபகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான ஒன்பதாம் வீட்டில் நுழைவதால் வாழ்வில் புது வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். இனி தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். குடும்ப விசேஷங்களில் ஒதுக்கப்பட்டீர்களே! பொது நிகழ்ச்சி களிலும் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டீர்களே! இனி அந்த அவல நிலை மாறும். எங்கு சென்றாலும் முதல் மரியாதை கிடைக்கும்.

வளைந்து கொடுத்தால் வானமளவு உயரலாம் என்பதை உணர்வீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வந்து சேரும். தந்தையாருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். தந்தைவழிச் சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகளுக்குத் தீர்வு கிடைக்கும். தள்ளிப்போன திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். வீடு களை கட்டும். அறிவுப்பூர்வமாகவும், அனுபவப்பூர்வமாகவும் பேசத் தொடங்குவீர்கள். கல்வியாளர், அறிஞர்களின் நட்பால் தெளி வடைவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். மனைவி உங்களின் புதுத் திட்டங்களை ஆதரிப்பார். மனைவிவழி உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கிருந்த கூடாநட்பு விலகும். அவருக்கு அயல்நாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்விகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து எதிர்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்கு வீர்கள்.

குருபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எப்போதும் ஏதோவது ஒரு கவலையும், சோகமுமாக இருந்த உங்கள் முகம் இனி மலரும். அழகு, இளமைக் கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள். குரு உங்களின் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். இளைய சகோதரர்களால் பயனடைவீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்வதற்கு விசா கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. குரு உங்களின் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் முடிவுகள் எடுப்பதில் இருந்த குழப்பம், தடுமாற்றம் நீங்கும். அடிக்கடி கர்ப்பச் சிதைவு ஏற்பட்டவர்களுக்கு கரு தங்கி குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.

13.11.2021 முதல் 30.12.2021 வரை இக்கால கட்டங்களில் அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்பு, வீண் செலவுகள், சிறுசிறு அவமானம் வந்துச் செல்லும். கை, காலில் அடிபடக் கூடும். சொத்து வாங்கும் போது தாய் பத்திரத்தைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். சகோதரர்களால் சங்கடங்கள் வரும்.

31.12.2021 முதல் 02.03.2022 வரை சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் சின்ன சின்ன மனசஞ்சலங்கள், வீண் பதற்றம், பிறர் மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும். பூர்விகச் சொத்துப் பிரச்சினை வெடிக்கும். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள்.

02.03.2022 முதல் 13.04.2022 வரை குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்துக்குச் செல்வதால் மனைவியுடன் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். கடந்த காலத்தை நினைத்து அவ்வப்போது கொஞ்சம் பதற்றம் வந்துசெல்லும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். கடையை விரிவுபடுத்துவீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்திணைவார். வங்கிக்குக் கட்ட வேண்டிய கடனில் ஒருபகுதியைக் கட்டி முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள்.

தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சிலருக்கு அயல்நாட்டு நிறுவனத்தில் வேலை அமையும். உங்களின் கோரிக்கையை நேரடி மூத்த அதிகாரி ஏற்றுக் கொள்வார். இந்த குருப்பெயர்ச்சி முதல் வரிசையில் உங்களை உட்கார வைப்பதுடன், வசதி, வாய்ப்பு களையும் அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்: விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீவிருத்தகிரிஸ்வரரையும், ஸ்ரீவிபசித்து முனிவர் மற்றும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் மூலம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஏழைப்பெண்ணின் திருமணத்துக்கு மாங்கல்யம் வாங்கிக் கொடுங்கள். சுபிட்சம் உண்டாகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

t1

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x