

சுற்றுப்புறச் சூழ்நிலையை புரிந்துகொண்டு அதற்கேற்ப காய் நகர்த்துவதில் வல்லவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து ஓரளவு உங்களைச் சாதிக்க வைத்ததுடன், வசதி, வாய்ப்புகளையும் தந்த உங்கள் குருபகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை ராசிக்கு எட்டாம் வீட்டில் மறைவதால் அலைச்சலுடன் ஆதாயத்தைத் தருவார். பயணங்களும், தவிர்க்க முடியாத செலவுகளும் துரத்தும்.
வருமானம் குறையாது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும், மனப்பக்குவத்தையும் தருவார். உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களையும், பிடிவாதப் போக்கையும் கொஞ்சம் மாற்றிக் கொள்ளப் பாருங்கள். இல்லையென்றால் அதுவே உங்களுக்கு எதிராக முடிய வாய்ப்பிருக்கிறது. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை அறிவீர்கள். ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஏறிக் கொண்டே போகும் கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் தீர்வு காண்பீர்கள். என்றாலும் புதிதாகச் சிக்கல்கள் ஏதுவும் வருமோ என்ற அச்சமும் மனத்தில் அடிக்கடி வந்துபோகும். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். ஈகோ பிரச்சினையால் கணவன் மனைவிக்குள் பிரிவுகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். வழக்கால் நெருக்கடிகள் வந்து நீங்கும். ஒரு பக்கம் பணவரவு இருந்தாலும் தவிர்க்க முடியாத செலவுகளும் அதிகமாகிக் கொண்டே போகும்.
குருபகவான் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவலாகி வரும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்விகச் சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு, உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சீராகும்.
அவருடனான மனத்தாங்கல் நீங்கும். தாய்வழிச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களுடைய படைப்புகள் தொலைக்காட்சி, வானொலி, செய்தித் தாள்களில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஒரு சொத்தை விற்று மற்றொன்று வாங்குவீர்கள்.
13.11.2021 முதல் 30.12.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்துக்கு குருபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். புதுப் பொறுப்புகள், பதவிகள் வரும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.
31.12.2021 முதல் 02.03.2022 வரை சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் கட்டிட வேலையைத் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயம் முடியும். என்றாலும் தாயாருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துபோகும். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள்.
02.03.2022 முதல் 13.04.2022 வரை குருபகவான் தன் சுய நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்துக்குச் செல்வதால் புகழ், கௌரவம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங் கள். சிறுசிறு நஷ்டங்கள் வந்து போகும். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாகப் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். வேலையாட்களுடன் மோதல் போக்கு வேண்டாம். அதை நினைத்து வருத்தப்படுவீர்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது.
உத்தியோகத்தில் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். அலட்சியம் வேண்டாம். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். உயரதிகாரிகள் உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் உங்களின் தவறு களை சுட்டிக் காட்டினால் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். திடீர் இடமாற்றம் உண்டு. சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அயல்நாட்டு வாய்ப்புகள் வரும். இந்தக் குரு பெயர்ச்சி சற்றே போராடி புதிய முயற்சிகளை முடிக்க வைப்பதாக அமையும்.
| பரிகாரம்: காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் பாதையில் அமைந்துள்ள திருப்புலிவனம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரரையும், ஸ்ரீசிம்ம குரு தட்சிணாமூர்த்தியையும் சித்திரை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். வெற்றி உண்டு. |
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |