

சிகரத்தைத் தொட்ட போதும் தலைக்கனம் கொள்ளாத நீங்கள், அடித்தட்டு மக்களுக்காக அயராது உழைப்பீர்கள். இதுவரை ஆறாம் வீட்டில் அமர்ந்து கூறாக்கிப் போட்டாரே குருபகவான். பல கஷ்ட, நஷ்டங்களைத் தந்து, மறைமுக எதிர்ப்புகளால் உங்களை திணறடித்து, கடன் பிரச்சினைகளால் தூக்கத்தை குறைய வைத்த குருபகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்க இருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.
குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விலையுயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.
எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சிலர் வங்கிக் கடன் உதவி கிடைத்து, புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். அரசாங்க விவகாரங்கள் நல்லபடியாக முடிவடையும். மனைவி உங்களுடைய புது முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார். அவரின் ஆரோக்கியம் சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மோதல்களும் விலகும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகளின் திருமணத்தை எல்லோரும் மெச்சும்படி நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அவருக்கும் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல பெண் அமைவார்.
குருபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் பெரிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பங்கு வர்த்தகம் மூலமாக பணம் வரும். மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். சமுதாயத்தில் மதிக்கத்தகுந்த அளவுக்கு கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. வெளிமாநிலங்களில் உள்ள புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டை குரு பார்ப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். நவீனரக வாகனம் வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கோயில் பஜனைகளில் கலந்துக் கொள்வீர்கள்.
13.11.2021 முதல் 30.12.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டுவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள்.
31.12.2021 முதல் 02.03.2022 வரை சதயம் நட்சத்திரத்துக்கு குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பெரிய திட்டங்கள் நிறைவேறும். தைரிய மாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
02.03.2022 முதல் 13.04.2022 வரை குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். விலையுயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் படிகளில் ஏறுவது, இறங்குவதோ அல்லது எடைமிகுந்த பொருட்களை சுமக்கவோ வேண்டாம்.
வியாபாரத்தில் அடுத்தடுத்து சில நஷ்டங்களை சந்தித்தீர்களே! எதிலும் ஆர்வமில்லாமல் இருந்தீர்களே! பலரிடம் ஏமாந்தீர்களே! இனி சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். புதுத் தொடர்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்புகள் வரும். அயல்நாட்டிலிருப்பவர்களும் உதவுவார்கள். உங்கள் கருத்துகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு மறுப்புத் தெரிவிக்காத நல்லவர் பங்குதாரராக வருவார். சிலர் செய்து கொண்டிருக்கும் தொழிலை விட்டு, வேற்றுத் தொழிலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.
உத்தியோகத்தில் ஓடிஒடி வேலை பார்த்தும் கெட்டப் பெயர்தானே கிடைத்தது! இனி முடங்கிக் கிடந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும். அவர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமின்றி கிடைக்கும். சிலர் உத்தியோகம் தொடர்பில் அயல்நாடு சென்று வருவீர்கள். சக ஊழியர்களில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களின் மனம் மாறும். இந்த குரு மாற்றம் வாடி வதங்கிப் போயிருந்த உங்களை வளமைப்படுத்துவதுடன் வருங்காலத் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அமையும்.
| பரிகாரம்: சென்னையில் பாடி என்றழைக்கப்படும் திருவலிதாயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுருபகவானை அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் நெய் விளக்கேற்றி வணங்குங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நல்லது நடக்கும். |
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |