

கல் நெஞ்சக்காரர்களையும் கலங்கமற்ற சிரிப்பால் கரைய வைக்கும் நீங்கள், கலா ரசனை மிக்கவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்து உங்களின் வருங்காலத் திட்டங்களை நிறைவேற்றியதுடன், குடும்ப வருமானத்தையும் ஓரளவு உயர்த்திய குருபகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை ராசிக்கு ஆறாம் வீட்டில் மறைகிறார். சகட குருவாச்சே! சங்கடங்களையும், எதிர்ப்புகளையும் தருவாரே! என்று கலங்காதீர்கள். ஓரளவு நல்லதே நடக்கும். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதைச் செய்து முன்னேறப் பாருங்கள். உங்களிடம் பழகுபவர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். என்றாலும் சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும்.
குருபகவான் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு. அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சாமர்த்தியமாகப் பேசி காய் நகர்த்துவீர்கள். பழைய நகையை மாற்றிப் புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். மகனின் அலட்சியப் போக்கு மாறும்.
குரு பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் புது வேலை கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். கடினமான வேலைகளையும் எளிதாக முடிக்கும் சக்தி கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுபச்செலவுகளும் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
13.11.2021 முதல் 30.12.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் முன்கோபம், திடீர் செலவுகள், சொத்துப் பிரச்சினைகள், சகோதரர் வகையில் மனவருத்தங்கள் வந்து செல்லும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம்.
31.12.2021 முதல் 02.03.2022 வரை சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பூர்விகச் சொத்தை விற்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள்.
02.03.2022 முதல் 13.04.2022 வரை குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதிக்குச் செல்வதால் கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து போகும். எந்தச் சூழ்நிலையிலும் மனைவியை மரியாதைக் குறைவாகப் பேச வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் வந்து செல்லும்.
வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்குவதற்குள் அவர்களை எதிர்பார்க்காமல் நாமே அந்த வேலையை செய்துவிடலாம் என்று முடிவெடுப்பீர்கள். தொழில் போட்டி அதிகமாகும். வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீர்கள். கடை வாடகை அதிகமாகிக் கொண்டே போகிறதே, கடன் ஏதாவது வாங்கி சொந்த இடம் பார்க்கலாமே என்ற முடிவுக்கு வருவீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். சிமெண்ட், கணிணி உதிரிப்பாகங்கள், ரியல் எஸ்டேட், எண்டர் பிரைசஸ் வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகத்தில் என்னதான் உண்மையாக உழைத்தாலும் எந்தப் பலனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உண்மையாக இருப்பது மட்டும் போதாது உயரதிகாரிகளுக்குத் தகுந்தாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு வருவீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். வேறு சிலர் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகி விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். புதிய உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் கொஞ்சம் இழுபறி நிலை நீடிக்கும். இந்த குரு மாற்றம் செலவுகளையும், அலைச்சல்களையும் ஓரளவு வெற்றியையும் தரும்.
| பரிகாரம்: சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜப் பெருமானையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் உத்திரட்டாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வாய் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். |
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |