Published : 12 Nov 2021 12:12 PM
Last Updated : 12 Nov 2021 12:12 PM

குருப்பெயர்ச்சி பொதுப் பலன்கள்: விருச்சிக ராசி வாசகர்களே (13.11.2021 முதல் 13.4.2022 வரை)

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

வாதாடும் குணம் கொண்ட நீங்கள், இயற்கையை அதிகம் நேசிப்பீர்கள். மூடநம்பிக்கைகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களின் புதிய முயற்சிகளை முடக்கி வைத்தாரே! எந்த ஒரு வேலையையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் அலைக்கழித்தாரே! எதைச் செய்தாலும் அதில் ஒரு தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் ஏற்படுத்தினாரே! தந்தையாருக்கு மருத்துவச் செலவுகளையும், அவருடன் கருத்து மோதல்களையும் ஏற்படுத்திய குருபகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதை தெரிந்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும்.

வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். தாயாருக்குச் சின்ன சின்ன அறுவை சிகிச்சை, மூட்டு வலி, முதுகுத் தண்டில் வலி வந்துப் போகும். வீடு, மனை வாங்கும் போது தாய் பத்திரம், வில்லங்கச் சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. சொத்து விற்பதாக இருந்தால் ஒரே தவணையில் பணத்தை வாங்கப் பாருங்கள். ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொண்டேயிருக்கும்.

தாழ்வுமனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகமாகும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். உறவினர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். கூடாப் பழக்கவழக்கங்கள் தொற்ற வாய்ப்பிருக்கிறது.
குரு, உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பயணங்களால் பயனுண்டு. மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்கள் உத்யோக ஸ்தானத்தை பார்ப்பதால் சிலருக்கு புது வேலை கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீட்டில் கூடுதல் அறை கட்டுவீர்கள்.

13.11.2021 முதல் 30.12.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் அழகு, இளமை கூடும். பேச்சில் கம்பீரம் தெரியும். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

31.12.2021 முதல் 02.03.2022 வரை சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் மனோபலம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டி லிருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். பூர்விகச் சொத்தை சீர்செய்வீர்கள். புது வேலை கிடைக்கும்.

02.03.2022 முதல் 13.04.2022 வரை குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிலும் வெற்றி கிட்டும். வி.ஐ.பிக்களின் நட்பு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்திற்கேற்ப முதலீடு செய்து லாபம் ஈட்டப்பாருங்கள். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளம்பர யுக்திகளை கையாளுங்கள். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். கடையை வேறிடத்துக்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாவீர்கள். ரியல் எஸ்டேட், தரகு, உணவு, துணி வகைகளால் லாபமடைவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். சிலர் நம்பிக்கையான பங்குதாரரை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

உத்தியோகத்தில் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்வார்கள். கூடுதல் நேரம் ஒதுக்கி நீங்கள் உழைத்தப் போதும் அதற்கு எவ்வித பாராட்டும் இல்லாமல் போகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அடிக்கடி இடமாற்றம் வரும். சில நேரங்களில் உங்களின் அடிப்படை உரிமைக்காகக்கூட போராட வேண்டிவரும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாகக் கிடைக்கும். இந்த குரு மாற்றம் அவ்வப்போது ஏமாற்றங் களையும், இடமாற்றங்களையும் தந்தாலும் கடின உழைப்பால் முன்னேற வைக்கும்.

பரிகாரம்: கருவூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ பசுபதீஸ்வரரையும், அங்குள்ள ஸ்ரீதட்சணாமூத்தியையும் பூரட்டாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். பார்வையற்றோருக்கு உதவுங்கள். மகிழ்ச்சி பெருகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

t1

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x