Published : 12 Nov 2021 12:11 PM
Last Updated : 12 Nov 2021 12:11 PM

குருப்பெயர்ச்சி பொதுப் பலன்கள்:  தனுசு ராசி வாசகர்களே (13.11.2021 முதல் 13.4.2022 வரை)

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை அறிந்த நீங்கள் யாரையும் உதாசீனப்படுத்தமாட்டீர்கள். உங்கள் ராசிக்கு தனஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்து கொண்டு பணப்புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டுச் செய்யப் பாருங்கள். எந்த ஒரு வேலையையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளை திட்டி நோகடிக்காமல் அவர்களைப் புரிந்து நடந்துகொள்ளுங்கள்.

கணவன் மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அன்னி யோன்யமும் குறையாது.
குரு உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டைப் பார்ப்ப தால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. பிதுரார்ஜிதச் சொத்துக் களிலிருந்த பிரச்சினைகள் விலகும். கூடாப்பழக்கம் விலகும். கனவுத் தொல்லை குறையும். குரு ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. தந்தைவழிச் சொத்துக்கள் கைக்கு வரும். அயல்நாட்டு வேலை கிடைக்கும். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.

13.11.2021 முதல் 30.12.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்சினை தீரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தை விமரிசையாக முடிப்பீர்கள். சகோதரர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். சொந்த ஊர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்நின்று நடத்துவீர்கள்.

31.12.2021 முதல் 02.03.2022 வரை சதயம் நட்சத்திரத்துக்கு குருபகவான் செல்வதால் உங்களின் புகழ், கௌரவம் உயரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வேற்றுமதத்தவர்கள், வெளிநாட்டிலிருப்ப வர்களால் உதவிக் கிடைக்கும்.

02.03.2022 முதல் 13.04.2022 வரை குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் வீட்டை இடித்துப் புதுப்பிக்கத் திட்டமிடுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வந்துசேரும். தள்ளிப் போன காரியங்கள் உடனே முடியும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்புகள் வரும். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கட்டிட உதிரிப் பாகங்கள், ஸ்டேஷனரி, பெட்ரோ கெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்களில் ஒருவர் உங்களை ஆதரித்தாலும் மற்றொருவர் மூலமாக குடைச்சல்கள் இருக்கும்.

உத்தியோகத்தில் சின்ன சின்ன அலைகழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறை, நிறைகளையெல்லாம் சுட்டிக் காட்ட வேண்டாம். பணிகளைக் கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். சக ஊழியர்களின் கடின உழைப்பால் தடைப்பட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். தேர்வில் வெற்றி பெற்று உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். என்றாலும் தன்நிலையை தக்கவைத்துக் கொள்ளக் கொஞ்சம் போராட வேண்டி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும். இடமாற்றம் சாதகமாகும். இந்த குரு மாற்றம் சிறுசிறு தடைகளையும், தடுமாற்றங்களையும் தந்தாலும் இடையிடையே வெற்றியையும், மகிழ்ச்சியையும் தரும்.

பரிகாரம்: காஞ்சிபுரத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஏகாம்பரநாதேஸ்வரரையும், அங்குள்ள ஸ்ரீதட்சிணாமூத்தியையும் புனர்பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனவளம் குன்றியோருக்கு உதவுங்கள். தடைகள் நீங்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

t1

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x