

பிரதிபலன் பாராமல் உதவும் நீங்கள், கடின உழைப்புக்குச் சொந்தக்காரர்கள். இதுவரையில் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்து வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பையும், சலிப்பையும் ஏற்படுத்தினாரே! எங்கு சென்றாலும் ஏமாற்றங்களையும், இழப்புகளையும் தந்தாரே! குடும்பத்திலும் உங்களுக்கென்று ஒரு தனித்துவம் இல்லாமல் செய்தாரே! எவ்வளவு உழைத்தாலும் நல்ல பெயர் இல்லையே என்று ஆதங்கப்பட்டுப் புலம்ப வைத்தாரே! இப்படிப் பலவகையிலும் இன்னல்களை மாறி மாறித் தந்து மனதில் அமைதியே இல்லாமல் நிலைக்குலையச் செய்த குருபகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை உங்கள் ராசியை விட்டு விலகி தன வீடான இரண்டாம் வீட்டில் அமர்வதால் தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வந்துசேரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் இனி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள்.
திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். நோய் குணமாகும். உடல் நலம் சீராகும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். அழகு, இளமை கூடும். பெரிய மனிதர்கள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை புரிந்துக் கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள்.
குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டைப் பார்ப்பதால் கடன் பிரச்சினை கட்டுப்பாட்டுக்குள் வரும். பெரிய நோயிலிருந்து விடுபடுவீர்கள். குரு எட்டாம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்வீர்கள். வேற்று மதத்தினர் உதவுவார்கள். குரு பத்தாம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்கள் கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும்.
13.11.2021 முதல் 30.12.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் தடைகள் ஓரளவு நீங்கும். முக்கியப் பதவி, பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிட்டும். சகோதரர்களின் மனசு மாறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பழைய கடன் பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகன வசதிப் பெருகும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். எப்போதும் மருந்தும், மாத்திரையுமாக இருந்த தாயார் சற்றே குணமடைவார்.
31.12.2021 முதல் 02.03.2022 வரை சதயம் நட்சத்திரத்துக்கு குருபகவான் செல்வதால் கடனாக கேட்ட இடத்தில் பணம் வரும்.
கடந்த கால சுகமான அனுபவங்க ளெல்லாம் மனதில் நிழலாடும். சொந்தபந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். திருமணம் கூடி வரும். சிறுகச் சிறுகச் சேமித்து வைத்ததில் புறநகர் பகுதி யிலாவது ஒரு கால் கிரவுண்டு வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.
02.03.2022 முதல் 13.04.2022 வரை குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்துக்குச் செல்வ தால் வீட்டில் தள்ளிப்போன சுப காரியங்களும் ஏற்பாடாகும். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! சிறுசிறு அவமானங்களையும் சந்தித்தீர்களே! இனி உங்கள் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்பச் செயல்படத் தொடங்குவீர்கள். ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்த சக ஊழியர் களும் மதிக்கத் தொடங்குவார்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். இந்த குருப்பெயர்ச்சி தொட்டதையெல்லாம் துலங்க வைப்பதுடன் அடிப்படை வசதிகளை அதிகப்படுத்துவதாக அமையும்.
| பரிகாரம்: திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருக்கஞ்சனூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஅக்னீஸ்வரரையும், அங்குள்ள ஸ்ரீதட்சிணாமூத்தியையும் பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வாரிசு இல்லாத வயதான தம்பதிக்கு உதவுங்கள். நிம்மதி பெருகும். |
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |