

முகலாயர்களின் சபைக்கு முதலில் வந்த ஐரோப்பியர்கள் ஏசு சபையைச் சேர்ந்த பாதிரியார்கள்தான். போர்ச்சுகீசியக் காலனியான கோவாவில் 1542-ல் குடியேறிய அவர்கள் மாமன்னர் அக்பரின் அழைப்பின் பேரில் தான் அவர்கள் முதலில் முகலாய அரசவைக்கு வந்தனர். பாதிரியார் ஜெரோம் சேவியர் லாகூருக்கு 1595-ல் வருகை புரிந்து அக்பரின் சபையில் 1615 வரை இருந்தார். லாகூரில் கிறிஸ்தவப் பண்டிகைகளை மிகவும் வண்ணமயமாகக் கொண்டாடியது குறித்து தனது குறிப்புகளையும் கோவாவுக்கு எழுதி அனுப்பியுள்ளார்.
யேசு சபையினரால் அக்பர், ஜஹாங்கீர் ஆகியோரை மனம் மாற்றி மதமாற்றம் செய்ய முடியவில்லை. ஆனால் 1610-ல் அக்பரின் பேரன்களான தமுராஸ், பேசுங்கர் மற்றும் ஹூசாங் ஆகியோர் ஞானஸ்தானம் பெற்றனர். ஆனால் போர்த்துகீசியர்களுடனான உறவுகள் சீர்குலைந்ததையடுத்து அவர்கள் இஸ்லாமுக்கே திரும்பிவிட்டனர். அவர்கள் கிறிஸ்தவ சமயத்துக்கு மாறியதையடுத்து 1611-ல் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டபோது பிரார்த்தனையில் கல்ந்துகொண்டு ஈஸ்டர் முட்டைகளை விரும்பி உண்ட குறிப்புகளை பாதிரியார் சேவியர் எழுதியுள்ளார். யூதாசின் கொடும்பாவி எரிப்பு, கயிறு மேல் நடப்பது போன்ற சடங்குகள், விளையாட்டுகளும் நடந்ததாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பட்டாசு, வாண வேடிக்கைகளும் தேவாலயத்தைச் சுற்றி நடந்துள்ளன.