

எந்தவொரு நிகழ்வுக்கும் நேரடி சாட்சியங்களை ஏற்றுக்கொள்வது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறநெறிகளில் ஒன்று. இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வுக்குப் பல சான்றுகள் இருந்தாலும், முக்கிய சாட்சிகள் என்றால் இயேசுவோடு மூன்றாண்டுகள் வாழ்ந்த சீடர்கள்தான். இயேசுவோடு வாழ்ந்தபோது, தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டையிட்டுக்கொண்டார்கள்.
கடலில் பயணம் செய்தபோது, சீறி எழுந்த அலைகளைப் பார்த்து, “ நாங்கள் சாகப்போகிறோம்; நீங்கள் இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களே!?” என்று இயேசுவைப் பார்த்து மரண பயத்தில் கூச்சல்போட்டார்கள்.
இயேசுவுக்கு ஆபத்து என்று வந்தபோது, அவரை விட்டுவிட்டு ஓடி ஒளிந்தனர். இயேசு இறந்த பிறகு தங்கள் உயிரைப்பாதுகாத்துக்கொள்ள அறைகளில் பதுங்கியிருந்தார்கள். இயேசு தனது மரணத்தை முன்னறிவித்திருந்தாலும் அவரது திடீர் இறப்பை அவர்களால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. லாசருவை உயிரோடு எழுப்பிய நம் ஆண்டவர் ஏன் மரணத்திலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளவில்லை என்று குழம்பினார்கள்.
அந்த அளவுக்கு நம்பிக்கையின்மையும் கோழைத்தனமும் கொண்டிருந்த சீடர்களின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றம் வந்தது. அந்த மாற்றத்தை அவர்களுக்குள் உருவாக்கியது இயேசுவின் உயிர்ப்பு. அப்போதுதான் இயேசு அவர்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வருகின்றன. கடவுள் மீது நம்பிக்கை வைத்தால் நிச்சயம் அவர் வழியைக் காட்டுவார். அதுவரை பொறுமையாக இருப்போம் என, அவர்கள் குழுவாக தங்கியிருக்கிறார்கள்.
அவர்கள் மனதில் ஓரளவு தெளிவு பிறந்துவிட்டாலும்; கடவுள் நம்மோடுதான் இருக்கிறார் என்கிற மன உறுதி அவர்களுக்குத் தேவையல்லவா? நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்த அந்தத் தருணத்தில்தான் இயேசு அவர்கள் மத்தியில் காட்சியளிக்கிறார். குழப்பம் மிக்க சூழ்நிலையில் தங்கள் குருவானவரின் மரணம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீள வழி தேடிக்கொண்டிருந்த சீடர்கள் மத்தியில் இயேசு பிரசன்னமாகிய நிகழ்வை விவிலியத்தில் லூக்கா நற்செய்தியாக வாசிப்போம்…
சக பயணியாக
அக்காலத்தில் இயேசுவின் சீடர்கள் இயேசு உயிர்த்துவிட்டார் என்ற செய்தியை நம்பவில்லை. ஆங்காங்கே ஒளிந்திருந்த அவர்கள் உயிருக்கு பயந்து எருசலேமிலிருந்து 11 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள எம்மாவு என்ற ஊருக்குத் தப்பி ஓடிப்போனார்கள். கரடுமுரடான மலைப்பாதைகளின் வழியே கால்நடையாய்த் தப்பிச் சென்ற அவர்களோடு பயண வழியில் இயேசுவின் வயதையொத்த ஒரு இளைஞர் இணைந்துகொண்டார். ஆனால் சீடர்களால் அவர் இயேசு என்பதை உணர முடியவில்லை.
அவரை ஒரு பயணி என்று நினைத்தனர். ஆனால் எருசலேமில் நிகழ்ந்தவற்றை இயேசு அவர்களிடம் கேட்டார். இயேசுவின் வாழ்வையும் மரணத்தையும் அவரிடம் பகிர்ந்து கொண்ட சீடர்கள், “ நீர் ஒருவர்தான் இந்த நிகழ்வுகள் பற்றி அறியாதவராக இருக்கிறீர்” என்று அவரிடம் கடிந்துகொண்டார்கள். அன்று இரவு நெருங்கியபோது பயணி என்று கருதிய இயேசுவை தங்களோடு குகையில் தங்களோடு தங்கும்படி கோரினார்கள். இயேசுவும் அவர்களோடு தங்கினார். அப்போது இயேசு அப்பத்தைப் பிட்டு அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தபோது இயேசுவைக் கண்டுகொண்டார்கள். அந்தக் கணமே இயேசு அவர்கள் மத்தியிலிருந்து மறைந்தார்.
கோழைகள் வீரர்கள் ஆயினர்
பிறகு நம்பிக்கையுடன் எருசலேம் திரும்பிய அவர்கள் எம்மாவு பயணத்தில் இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கு இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் தோன்றி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் இம்முறை திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள்.
அதற்கு அவர், “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே'' என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்ப முடியாதவர்களாய், வியப்புக்கு உள்ளாகியிருந்தார்கள்.
அப்போது அவர் அவர்களிடம், “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டார். அவர்கள் வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள் முன் அமர்ந்து உண்டார். பின்பு அவர் அவர்களைப் பார்த்து, “மோசேயின் சட்டத்திலும் இரைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே பலமுறை உங்களுக்குச் சொல்லியிருந்தேனே” என்றார்.
அவர்களுடைய மனக் கண்களைத் திறந்தார். அவர் அவர்களிடம், “ மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என எருசலேம் தொடங்கி பூமியெங்கும் வாழும் மனிதர்களிடம் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்களே சாட்சிகள் (வாசகம் 24:35-48)” என்றார்.
கிறிஸ்தவத்தின் விதை
தங்களது குருவானவரின் இந்த உயிர்ப்புக்குப் பிறகு அவர் தங்கள் மத்தியில் தோன்றி தங்களுக்கு வழிகாட்டிய அனுபவம்தான் சீடர்களின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. சாவைப் பார்த்து நடுங்கிக்கொண்டிருந்த அவர்களுக்கு வாழ்வின் முக்கியத்துவம் புரிந்தது. இயேசுவோடு அவர்கள் வாழ்ந்தபோது அவர் கற்றுத்தந்த முன்மாதிரிகள் இப்போது அவர்களுக்கு வாழ்முறையாக மாறின. இயேசு கற்பித்துச் சென்ற வார்த்தைகள் அவர்களின் உள்ளத்தை ஊடுருவிப் பாய்ந்தன.
தங்களின் உயிரைப் பெரிதாக மதித்துக்கொண்டிருந்த அவர்களுக்கு, இயேசுவின் வாழ்வும் மரணமும் பாவத்தின் சாபத்திலிருந்து மீட்கும் வல்லமை கொண்டவை என்பதை இயேசுவின் வாழ்வை அறியாத மக்களுக்கு அறிவிக்க அவர்கள் போர் வீரர்களைப்போல் புறப்படுச் சென்றார்கள். இயேசுவை அறிவிப்பதற்காக எதையும் இழப்பதற்குத் தயாராக இருந்த இந்த மாபெரும் மாற்றம்தான் கிறிஸ்தவத்தின் விதையாக அமைந்தது.