

ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சி தொடங்கி அர்த்தஜாமப் பூஜை வரை அன்றாடம் நடக்கும் பலவிதமான சடங்குகளின்போதும், உபசாரங்களின் போதும் பலவிதமான வாத்தியங்கள் சைவ, வைணவக் கோயில்களில் வாசிக்கப்படுகின்றன. சங்கு, கொம்பு, பிரம்ம தாளம், உடல், குட்டத்தாரை, திருச்சின்னம், நெடுந்தாரை போன்ற பழங்கால வாத்தியங்களைப் பற்றிய குறிப்புகள் தேவாரம், திருவாசகம் போன்றவற்றில் காணப்படுகின்றன.
சைவ ஆலயங்களின் இசைக் கருவிகள்
தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் குழல், உடுக்கை, இலைத்தாளம், கொட்டி மத்தளம், கின்னரம், பறை, மெராவியம், வங்கியம், பாடவியம், வீணை, முத்திரைச்சங்கு, சகடை ஆகிய வாத்தியங்கள் இசைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
வைணவ ஆலயங்களில் இசைக் கருவிகள்
ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் (ராப்பத்து) இரவு ரங்கநாதர் நம் பெருமாள் மூலஸ்தானம் திரும்பும்பொழுது, அவர் முன்பு வீணை வாசிக்கும் நிகழ்ச்சி இன்றும் நடைபெறுகிறது. இது ஏகாந்த சேவை எனப்படுகிறது.
பாரிவலத்தின்போது வாசிக்கப்படும் பாரிமணி
ஸ்ரீரங்கம் கோயிலில் சடங்கின்போது வாசிக்கப்படும் இன்னொரு முக்கியமான வாத்தியம் பாரிமணி. இது கைகளால் வாசிக்கப்படும் ஒரு தாள வாத்தியக் கருவி. நீண்ட மரச்சட்டத்தின் இரு முனைகளிலும் இரண்டு பெரிய மணிகள் இருக்கும். சிவன், காளி கடவுளர்கள் நேசிக்கும் வாத்தியமாகக் கருதப்படும் இந்தப் பாரிவாத்தியம் இன்றைக்கு ரங்கம் கோயிலில் மட்டுமே வாசிக்கப்படும் வாத்தியமாக இருக்கின்றது என்பதை கோயில் சடங்குகளின்போது வாசிக்கப்படும் இசைக் கருவிகளைக் குறித்து ஆய்வு செய்யும் டாக்டர் லலிதா குறிப்பிட்டுள்ளார்.
நாழிமணிக்காரர் என்னும் சமூகத்தைச் சேர்ந்தவர்களே பாரிமணி என்றழைக்கப்படும் இந்த வாத்தியத்தை வாசிக்கிறார்கள். இவர்கள் இறைவனின் மீது பாடல்களைப் பாடியபடி, இந்த வாத்தியத்தை வாசிப்பது நாகரசங்கீர்த்தனம் என அழைக்கப்படுகின்றது. ரங்கம் கோயிலில் அர்த்தஜாமப் பூஜை முடிந்தவுடன், `இன்றைய நாளின் சடங்குகள் அனைத்தும் முடிந்தன’ என்பதை பக்தர்களுக்கு அறிவிக்கும்வகையில் பாரிமணி, பாரிமத்தளம், தாளம் ஆகியவற்றை கோயிலை ஒட்டியுள்ள சித்திரை வீதியில் வாசித்துச் செல்வார்கள். இந்தச் சடங்கை பாரிவலம் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.