இறைநேசர்களின் நினைவிடங்கள்: மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் - முசலும் வந்தது நசலும் போயிற்று

இறைநேசர்களின் நினைவிடங்கள்: மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் - முசலும் வந்தது நசலும் போயிற்று
Updated on
3 min read

மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம், காயல்பட்டினத்தில் பிறந்து, கீழக்கரையில் படித்து ஆசிரியரின் புதல்வியைத் திருமணம் செய்ததால், மாப்பிள்ளை லெப்பை ஆலிம் எனப் பெயர் பெற்றவர். பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயர் சையிது முகம்மது. ஹிஜ்ரி 1232-ம் ஆண்டு முஹர்ரம் மாதம் பிறை பதினாறில் (கி.பி 1817) வெள்ளை அஹ்மது லெப்பை- ஆமினா உம்மா தம்பதியரின் அன்புப் புதல்வராக அவர் பிறந்தார்.

சையிது முகம்மது இரண்டு வயது பாலகராக இருந்தபோது பெற்றோர் சொந்த ஊரைவிட்டுக் கீழக்கரைக்கு வந்து குடியேறினார்கள். குழந்தைக்கு நன்றாகப் பேச வரவில்லை. திக்குவாய்ப் பிள்ளையாக இருந்தார். அந்தக் குறையை எப்படியாவது போக்கிவிடத் தந்தையார் முயன்றார். அதனால் ஷைகு முகம்மது அல் நுஸ்கி என்பவரிடம் குழந்தையைக் கொண்டு சென்றார். அந்தப் பெரியவர் இறையருளை இறைஞ்சி குழந்தைக்கு ஓதிவிட்டார். தேனை நாவில் இட்டுத் தண்ணீரைப் பருகச் சொன்னார். பாலகரின் திக்குவாய் அகன்றுவிட்டது.

மக்காவில் பாதுகாக்கப்பட்ட நூல்

பத்து வயதிலேயே குர்ஆனை மனப்பாடம் செய்துவிட்ட சையிது முகம்மது அரூஸியா தைக்கா கல்வி நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். அவருடைய கல்வித்திறன் தைக்காவின் தலைவர் தைக்கா சாகிபைக் கவர்ந்தது. தன் வீட்டு மாப்பிள்ளையாக்கிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார். அதன்படி தமது புதல்வி சாராவை மனைவியின் சம்மதத்துடன் மணம் செய்துவைத்தார். அதனால் அவருக்கு ஏற்பட்ட பெயர்தான் மாப்பிள்ளை லெப்பை.

தமிழ், அரபு, உர்து, பார்ஸி மொழிகளில் புலமை பெற்றிருந்த மாப்பிள்ளை லெப்பை பல நாடு நகரங்களுக்குப் பயணம் செய்து ஆத்ம ஞானிகளையும் அறிஞர்களையும் சந்தித்தார். ஐம்பத்தைந்தாவது வயதில் ஹஜ் கடமையை நிறைவேற்ற மக்கா நகருக்குச் சென்றரார். அங்கே ஒரு வியப்பு காத்திருந்தது. அங்குள்ள ஒரு நூலகத்தில் அவர் எழுதிய ‘மின்ஹதுஸ் சரந்தீப்’ என்ற நுாலின் கையெழுத்துப் பிரதி வைக்கப்பட்டிருந்தது. கீழக்கரையில் தம்மால் எழுதப்பட்ட நுால் மக்கா நகரில் பட்டு உறையிடப்பட்டு பாதுகாக்கப்படுவதைக் கண்டு மகிழ்ந்தார். ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு ஈரான், சிரியா, ஈராக், ஏமன் ஆகிய நாடுகளுக்குச் சென்று சமய, சமூக நிலைமைகளைக் கண்டறிந்தார்.

இறைநேசர் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் இயற்றிய அரபுத் தமிழ் நுால்கள் பற்பல. எடுப்பான இனிய நடையில் சமய சட்ட திட்டங்களையும், தத்துவங்களையும் விளக்கும் நுால்கள் அவை. பெரும் எண்ணிக்கையில் தனிப்பாடல்களையும் எழுதினார். நபிகள் நாயகத்தின் புதல்வி பாத்திமா நாயகி மீது அவர் பாடிய நுால் ‘தலை பாத்திஹா’.

சிறந்த கவிஞராகத் திகழ்ந்த மாப்பிள்ளை லெப்பை ஆலிமை கர்நாடக நவாபு தனது அரசவைக்கு அழைத்து, ‘மலக்குஷ் ஷுஅரா’ என்ற விருதை அளித்தார். அதற்குக் கவியரசர் என்று பொருள். அப்பொழுது அவர் திப்பு சுல்தான் அமர்ந்த அரியணையில் அமர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

ஆன்மாவுக்கும் ஆபரணம்

ஒரு சமயம் அவருடைய துணைவியார் காசு மாலை வேண்டும் என்று கேட்டார். அவர் அதற்கு மாறாக ‘ஹதியா மாலை’ எனும் கவிதை நுாலை இயற்றித் தந்தார். அது மாதர்களுக்கான நல்லுரைகள் அடங்கிய தொகுப்பு. உடலுக்கு மட்டுமின்றி ஆன்மாவுக்கும் ஆபரணம் அது என்று மனைவியிடம் அவர் கூறினார்.

நாகூர் ஷாகுல் ஹமீது நாயகரின் சரித்திரத்தை எழுதித் தரும்படி நவாபு குலாம் கவுஸ் கான் மாப்பிள்ளை லெப்பை ஆலிமைக் கேட்டுக் கொண்டார். அதன்படி அரபு மொழியில் சரித்திர நுாலை எழுதிக் கொடுத்தார்.

அரேபியாவிலிருந்து கீழக்கரைக்கு வந்திருநத ஒரு பாவாணர் மாப்பிள்ளை லெப்பை அவர்களின் கல்வி, கலைஞானம், ஆன்மிகம், சமயப் புலமையைக் கண்டு வியந்துபோனார். என்றாலும் பாடல் புனைவதில் அவருக்குள்ள திறனைப் பரிசோதிக்க விரும்பி அரபுமொழிப் பாமாலை ஒன்றை உடனடியாக இயற்றித்தரும்படி கேட்டார். மாப்பிள்ளை லெப்பை ஆலிம் 76 கண்ணிகளைக் கொண்ட பாமாலையைச் சில நிமிடங்களில் எழுதிக் கொடுத்தபோது வியப்படைந்து மனம்விட்டுப் பாராட்டினார்.

கீழக்கரையில் அச்சகத்தை நிறுவி அரபுமொழி நுால்களையும் அவர் பதிப்பித்துவந்தார். அவ்வாறு வெளியிட்ட நுால்களில் ஒன்று நபி நாயகத்தின் புகழ்பாடும் ‘கஸீதத்துல் வித்திரியா’. நபிகளாரின் பேரர்கள் ஹசன், ஹுசேன் முதலானோர் மீதும் பாமாலைகளை இயற்றினார். தமது அரூஸிய்யா மதரசாவில் நூலகம் ஒன்றையும் நிறுவினார்.

இலங்கை முஸ்லிம் சமூகத்துடன் தொடர்பு

இறைநேசர் மாப்பிள்ளை லெப்பையின் தொடர்பினால் இலங்கை முஸ்லிம் சமூகம் பெரும்பலனைப் பெற்றது. கொழும்பு, மருதானை, பம்பலப்பிட்டியா முதலான நகரங்களுக்குச் சென்று பல பள்ளி வாசல்களையும், மதரசாக்களையும், சங்கங்களையும் அவர் நிறுவினார்.

அங்குள்ள திக்வல்லாவில் தங்கியிருந்தபோது வெளியூரைச் சேர்ந்த அவருடைய சீடர்கள் தங்கள் ஊருக்கு வருகையளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது அந்த ஊரில் வாந்திபேதி பரவியிருந்ததால் அங்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டார். ஆனால் திட்டமிட்டபடி அந்த ஊருக்கு ஆலிம் புறப்பட்டார். வழியில் ஒரு முயல் தென்பட்டது. ‘முசலும் வந்தது நசலும் போயிற்று’ என்று கூறினார். அதன்படி அந்த ஊரைப் பீடித்திருந்த வாந்திபேதி மறைந்துவிட்டது.

ஒரு சமயம் கட்டுகோடா தைக்கா அடிக்கல் நாட்டு விழாவுக்குச் சீடர்களுடன் புறப்பட்டார். அப்பொழுது வெற்றுக் குடம் ஒன்றைத் துாக்கிக்கொண்டு ஒரு பெண் செல்வதைக் கண்ட சீடர்கள் முகம் சுளித்தார்கள் ‘அபசகுனம்’ என்று அவர்கள் சொல்வதைக் கேட்ட ஆலிம், அந்தப் பெண் தண்ணீரை நாடிச் செல்கிறாள்; அது போல நாம் அருளாசியை நாடிச் செல்கிறோம் என்று கூறி சீடர்களைத் தெளிவு படுத்தினார்.

வருவதை முன்னறிந்தவர்

மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அற்புதங்களை நிகழ்த்தும் ஆற்றல் பெற்ற இறைநேசராகத் திகழ்ந்தார். எதையும் முன்னறிந்து கொள்ளக்கூடிய சக்தியை இறைவன் அவருக்கு அளித்திருந்தான். அவர் தமது புதல்வர் அப்துல் காதிருடன் நாகப்பட்டினத்துக்குச் சென்றிருந்தார். அப்போது மனைவி சாரா உம்மாள் கீழக்கரையில் காலமாகிவிட்டதை உணர்ந்து ஒரு பாடலைப் பாடத் தொடங்கினார். அதைக் கேட்ட மகன் கண்ணீர் சிந்தினார். கீழக்கரைக்குத் திரும்பியதும் தாயாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதைக் கண்டு கலங்கினார் அப்துல் காதிர்.

தமது காலத்திலேயே அருமைப் புதல்வர்கள் இருவர் இறைநேசர்களாகிவிடுவார்கள் என்று உணர்ந்தார் மாப்பிள்ளை லெப்பை ஆலிம். அதன்படி ஒருவர் கல்வத்து நாயகம் எனும் தவச் செம்மலாகவும், மற்றவர் ஜல்வத்து நாயகம் எனும் ஆன்மீகச் சுடராகவும் விளங்கினர்.

மூத்த மகன் சையிது அப்துல் காதிர், தந்தையிடம் அரபு மொழி அறிவும் ஆத்மஞான தீட்சையும் பெற்று இளமையிலேயே தவஞான சீலராகச் செயல்பட்டார். நாகூர் ஆண்டகையின் ஆசியினால் பிறந்தவர் என்பதால் அவருடைய அப்துல் காதிர் எனும் பெயரையே பிள்ளைக்குச் சூட்டினார். கீழக்கரை வள்ளல் இறைநேசர் சீதக்காதியின் இயற்பெயரும் அதுவே. அந்தச் செல்ல மகனே பின்னர் கல்வத்து நாயகம் என்ற சிறப்பைப் பெற்றார்.

அடுத்த மகனின் பெயர் ஷாகுல் ஹமீது. அஹ்மது முஸ்தபா என்றும் அந்தப் பிள்ளை அழைக்கப்பட்டார். பிறகு ஆன்மிக விவேகம் நிறைந்தவர் என்ற கருத்து வரும் ஜல்வத்து நாயகம் எனும் சிறப்புப் பெயரை அவர் பெற்றார். அவருடைய புதல்வரும் மாப்பிள்ளை லெப்பை அவர்களின் பேரப்பிள்ளையுமான தைக்கா அஹ்மது அப்துல் காதிரும் இறைநேசராக விளங்கினார். அவரே கீழக்கரை ஷெய்கு நாயகம் வலியுல்லா.

இறைநேசர் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்கள் தமது இறுதிக்காலத்தில் புதல்வர்களையும், உற்றார் உறவினர்களையும், சீடர்களையும் அருகில் அமர்த்தி நல்லாசி வழங்கினார். இறைவனைப் போற்றிப் புகழும்படி கேட்டுக் கொண்டார். தமது 84-ம் வயதில் ஹிஜ்ரி 1316 ரஜபு மாதம் ஐந்தாம் நாள் சனிக்கிழமை மதியத் தொழுகைக்குப் பிறகு கீழக்கரையில் மறைந்தார். அவர் நிர்வகித்துவந்த அரூஸியா தைக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டார். ஆலிம் அவர்களின் நினைவு விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in