Last Updated : 18 Feb, 2016 12:05 PM

 

Published : 18 Feb 2016 12:05 PM
Last Updated : 18 Feb 2016 12:05 PM

காசியை மிஞ்சும் புண்ணியம்

திருக்காஞ்சியில் ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது புதுச்சேரி வில்லியனூர் என்னும் கிராமத்திற்கு அருகேயுள்ளது. செஞ்சியாறு, கிளிஞ்சியாறு, வராக நதி என்றெல்லாம் அழைக்கப்படும் சங்கராபரணி நதியே இந்த ஆலயத்தின் முக்கியத் தீர்த்தமாகும்.

இக்கோயிலின் கருவறை தஞ்சை பிரகதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய கோயில்களின் கருவறைகளை ஒத்திருக்கிறது. ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரரின் லிங்கம் பதினாறு பட்டைகளைக் கொண்ட ஷோடசலிங்கம். இது மிக அபூர்வம். இந்த லிங்கத்தை வணங்கினால் முன்னோர் சாபம் நீங்கும் என்பது நம்பிக்கை. நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு உள்ளிட்ட பதினாறு செல்வங்களையும் அளிக்கும் என்பது ஐதீகம்.

சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவலிங்கத்தை  அகஸ்திய மாமுனிவர் தனது திருக்கரத்தால் பிரதிஷ்டை செய்துள்ளார் என்கிறது தல புராணம்.

பண்டைய காலத்தில் அந்தணன் ஒருவன் இறந்த தன் தந்தையின் அஸ்தியைக் கங்கையில் கரைப் பதற்காக அஸ்திப் பானையைத் தலையில் சுமந்து சென்றான். வழிப்பயணம் தொலைவாக இருந்ததால், துணைக்கு நண்பனையும் அழைத்துச் சென்றான். திருக்காஞ்சியை அவன் கடக்கும்போது, இயற்கை உபாதை ஏற்பட்டதால், தன்னுடன் வந்த நண்பனிடம் பானையைத் தந்து திறந்து பார்க்காமல் இருக்குமாறு சொல்லிச் சென்றான். ஆனாலும், அவன் அப்பானையைத் திறந்து பார்த்தான். பானையினுள்ளே இருந்த பொருளைக் கண்டு மீண்டும் முன்பிருந்தது போலவே வைத்து விட்டான்.

பூவான அஸ்தி

காசியை அடைந்த அந்தணன் கங்கைக் கரையில் அஸ்தியைக் கரைக்க பானையைத் திறந்தபோது அருகே இருந்த நண்பன் திடுக்கிட்டான். இதே சாம்பல் எலும்புக் குவியதைத் திருக்காஞ்சியில் கண்டபோது, பூக்களாய் இருந்த அதிசயத்தைக் கூறினான்.

சாம்பல் பூவாய் மாறும் அதிசயம் நிகழ்ந்த அந்த இடம் எத்தனை சக்தி வாய்ந்த தலமாயிருக்க வேண்டும் என நினைத்த அந்தணன் இதை மறுபடியும் சோதித்துவிடுவது என்ற முடிவுடன் அதே அஸ்திக் கலசத்துடன் மீண்டும் திருக்காஞ்சியை அடைந்தான்.

அப்போது உண்மை அவருக்குப் புரிந்தது. காசிக்கு எடுத்து சென்ற அஸ்தி திருக்காஞ்சி எல்லையில் புஷ்பமாக மாறியிருந்தது. காசியில் செய்யும் பிதுர் கர்மாக்களை இங்கே செய்யலாம் என்ற அசரீரி கேட்டுக் கடவுளின் சித்தத்தையும் அறிந்தான்.

ஆரம்ப காலத்தில் சிறு கோயிலாக இருந்த கோயில் சோழர் காலத்தில் உன்னத நிலையை அடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் மக நட்சத்திரத்தில் நடைபெறும் மாசிமகம் மிகவும் சிறப்பு பெற்றதாகும். மாசி மகத் திருவிழாவில் நீத்தார் கடன் செய்வது மிகச் சிறப்பாக நடக்கிறது.

இரு அம்மன்கள்

காமாட்சி, மீனாட்சி இரு அம்மன்களைக் கொண்ட இந்தத் தலத்தில் மூலவர் மேற்கு நோக்கி அமைந்துள்ளார். தல விருட்சம் வில்வம்.

சங்கராபரணி ஆறு புதுச்சேரி அருகே கிழக்காகத் திரும்பிக் கடலை நோக்கிச் செல்லும்போது திருக்காஞ்சியில் வடக்கு நோக்கித் திரும்பி அதன் பிறகு கிழக்கே நோக்கி திரும்பி வங்கக்கடலில் சேருகிறது. இது மிகவும் அரிதானது.

தீர்த்தவாரி

மாசி மகத்தன்று சுற்றுப்பகுதியில் உள்ள 35 கோயில்களில் உள்ள சுவாமிகளுக்கு இங்கு தீர்த்தவாரி நடைபெறும். மாசி மாதம் முழுவதும் இத்தீர்த்தத்தில் புண்ணிய நீராடலாம். இது தவிர அமாவாசை, பவுர்ணமி, வெள்ளிக்கிழமை , மாதப்பிறப்பு, கார்த்திகை, சிவராத்திரி ஆகிய நாட்களிலும் புனித நதியில் புண்ணிய நீராடலாம். இறைவனின் அருளைப் பெறலாம். அகஸ்தியர், ராமபிரான் என்று பலரும் தர்ப்பணம் செய்து வழி பட்ட தலம் என்பது கூடுதல் சிறப்பு.



செல்லும் வழி

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வில்லியனூரில் இருந்து திருக்காஞ்சி செல்ல வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x