

இறைநேசச் செல்வியர் பலர் வாழ்ந்து ஆன்மிக வளம் சேர்த்த ஊர் கீழக்கரை. அவர்களில் ஒருவர், செய்யிது ஆசியா உம்மா. சூஃபி ஞான மாதரசியாகத் திகழ்ந்த அவர் பல ஆத்மஞான இலக்கியங்களைப் படைத்திருக்கிறார்.
ஹபீபு அரசர் என்று புகழப்பட்ட ஹபீபு மரைக்காயரின் இளைய சகோதரரின் பேத்தியே ஆசியா உம்மா. தந்தை பெயர் ஹபீபு முகம்மது மரைக்காயர். ஆசியா உம்மாவின் மூதாதையர்கள் எட்டையபுர மன்னர்களுடன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தனர். அதனால் அவர்களுக்கு பல அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. அவற்றில் ஒன்றான தங்கப் பெட்டகம் ஆசியா உம்மா வாழ்ந்த இல்லத்தில் பாதுகாக்கப்பட்டு இன்றும் வருகிறது.
இவருடைய குடும்ப முன்னோர்களில் ஒருவரான ஹபீபு அரசர் சவூதி அரேபியாவின் ஜித்தா நகருக்கும் புனித மக்காவுக்கும் இடையே கிணறு தோண்டியது சிறப்புக்குரியதாக நினைவுகூரப்படுகிறது. பல ஏக்கர் நிலப்பரப்பில் அவர்கள் அமைத்த பண்டகசாலைகள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இறைநேசமே பெருஞ்செல்வம்
சேதுபதி மன்னரின் அனுமதியுடன் கீழக்கரையில் 1754-ம் ஆண்டில் டச்சுக்காரர்களால் கட்டப்பட்ட வர்த்தகப் பண்டகசாலை ஆசியா உம்மாவின் முன்னோர்களுக்குச் சொந்தமானது. அவர்கள் பல கப்பல்களுக்கு உரிமையாளர்களாக இருந்து கடல் வணிகத்தில் முனைந்திருந்தனர்.
ஆசியா உம்மா கீழக்கரை தவச்செம்மல் என அழைக்கப்பட்ட இறைநேசர் கல்வத்து நாயகம் சையிது அப்துல் காதிர் அவர்களின் நல்லாசியைப் பெற்று முதன்மைச் சீடரானார். உலகப் பற்றில் ஆழ்ந்து விடாமல் தனித்திருந்து தியானம் புரிவதில் அந்தப் பெருமகன் ஈடுபட்டிருந்ததால் ஆசியா உம்மாவும் இளமையிலேயே தனித்திருந்து இறையின்பத்தில் லயித்து ஞானப் பாடல்களை இசைக்கத் தொடங்கினார். இறைவனின் அகமியங்களையும் மகத்துவங்களையும் பாடும் அருந்திறனைப் பெற்ற அவர், கோடைக் காலத்தில் தனக்குச் சொந்தமான கடற்கரையோர நடுப்பண்டக சாலையின் தென்னந்தோப்பில் பலமாதம் தங்கி தவயோகத்தில் ஈடுபட்டு வந்தார். அருட்பாடல்களையும் இயற்றத் தொடங்கினார்.
ஆசியா அம்மா, பிறரிடம் அதிகம் பேசாமல் வீட்டுமாடியில் தனிமையாகக் காலத்தைச் செலவிட்டார். அதனால் ‘மேல்வீட்டுப் பிள்ளை’ என்ற செல்லப்பெயர் சூட்டி ஊர் மக்கள் அழைத்தார்கள். புனித ஹஜ் கடமையையும் உரிய தருணத்தில் ஆசியா உம்மா நிறைவேற்றினார்.
மெய்ஞான தீப ரத்தினம்
ஆசியா உம்மா பாடிய மெய்ஞான தீப இரத்தினம், மாலிகா இரத்தினம் ஆகிய தொகுப்புகள் கீழக்கரையில் வெளியிடப்பட்ட இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நுால் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இறைவனையும், நபிகள் நாயகத்தையும், இறைநேசர்களையும் சிறப்பித்து அவர் இயற்றிய எல்லா பாடல்களும் மெய்ஞ்ஞானத் தீப இரத்தினம் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மாலிகா இரத்தினமும் அவர்களைப் போற்றி நெகிழும் கீதங்களின் தொகுப்பு.
கண்ணி, விருத்தம், துதி, இன்னிசை, ஆனந்தக்களிப்பு, கும்மி, வெண்பா, பதிகம், மாலை, தாலாட்டு ஆகிய மரபுப் பாடல்கள் அவை. மகான் ஆரிபு நாயகர், நாகூர் ஷாகுல் ஹமீது நாயகர், குணங்குடி மஸ்தான் சாகிபு, இமாம் கஸ்ஸாலி முதலானோரைச் சிறப்பிக்கும் கருப்பொருளைக் கொண்ட பாடல்கள் படிப்போர் மனதில் பதியக் கூடியவை. அல்லாஹ்வின் 99 பெயர்களைச் சிறப்பிக்கும் அஸ்மாவுல் ஹூஸ்னா முனாஜாத்தும், 99 நாமங்கள் எனும் மற்றொரு பாடல் தொகுப்பும் மறக்க முடியாதவை.
ஆசியா உம்மா தமது குடும்ப முன்னோர்களின் திருப்பணிகளைச் சிறப்பித்து இயற்றிய பாடல்கள் குறிப்பிடத் தக்கவை, ஹபீபு அரசர் மாலை, கல்வத்து நாயகம் முனாஜாத்து, கல்வத்து நாயகம் துதி, கல்வத்து நாயகம் இன்னிசை, பல்லாக்கு தம்பி முனாஜாத்து, பல்லாக்கு ஒலி துதி ஆகியவை அந்தப் பட்டியலில் அடங்கும்.
ஞான ரத்தினக் கும்மி
ஆசியா உம்மா இயற்றிய ஞான ரத்தினக் கும்மி 110 கண்ணிகளைக் கொண்டது. ஞானத்தை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி தனது முன்னால் நிறுத்தி, ‘ஞானப் பெண்ணே’ என அழைத்துப் பாடும் கும்மிப் பாடல்கள் இவை. ஞான வினாக்களைத் தொடுத்து விடைகூறும் மரபுமுறையை இவற்றில் காணலாம். பாவங்களிலிருந்து விலகி, தவத்தின் அருமையினால் இறைவனைப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
உடலும் உலக வாழ்க்கையும் நிலையற்றவை. இவையெல்லாம் வெறுங் கனவு, இவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு இறைவனோடு கலந்திருக்கும் கருத்தும் செயலுமே பொருத்தமானது என்கிறார்.
கருத்தை உன்னிலே தான் அடைத்து
இறைக் காதலே மிக ஆசை கொண்டால்
பொருந்தும் பூலோக வானலோகம் எல்லாம் புகழாம் இரத்தின ஞானப் பெண்ணே!
அரபுத் தமிழின் பயன்பாடு
அரபுத் தமிழில் இலக்கியம் படைத்த ஒரு முன்னோடி என்று ஆசியா உம்மாவைக் குறிப்பிடலாம். அரபு மொழி வரிவடிவத்தில் தமிழ்ச் சொற்களை எழுதுவதுதான் அரபுத் தமிழ், அந்த மரபை தமிழ் முஸ்லிம்கள் கடந்த பல நுாற்றாண்டுகளில் பின்பற்றி வந்துள்ளனர். பள்ளிகளுக்குச் சென்று தமிழும் மற்ற மொழிகளும் பயிலாத அன்றைய முஸ்லிம் மக்கள், மதரசாக்களில் அரபு மொழியில் ஓதிப் படித்தார்கள்.
அதனால் தமிழ் இலக்கியங்களை அரபு எழுத்து வடிவில் எழுதி தங்குதடையின்றி படிக்கும் பழக்க வழக்கம் பரவியது. நூற்றுக்கணக்கான பாடல்களையும் நூல்களையும் அரபுத் தமிழில் அச்சிட்டுப் பரப்பினார்கள். ஆசியா உம்மாவின் மெய்ஞ்ஞான தீப இரத்தினமும் அரபுத் தமிழில் வெளியிடப்பட்டது. அவர் இயற்றிய பல பாடல்கள் கிடைக்கப் பெறவில்லை.
ஞான மாதாக்கள்
ஞானத் திருச்செல்வி ஆசியா உம்மா எண்பது வயதில் 1948-ஆம் ஆண்டில் கீழக்கரையில் காலமானார், குடும்ப முன்னோர் ஹபீப் அரசரின் நினைவு வளாகத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார், உம்மாவின் பேத்தி அகமது மரியத்தின் முயற்சியினால் மெய்ஞ்ஞானத் தீப இரத்தினம் நூல் அச்சிடப்பட்டது, கீழக்கரையில் ஞான மாதாக்களாகத் திகழ்ந்தவர்கள் பலர், ஆயிஷா உம்மா, ஆமினா உம்மா, சாரா உம்மா, குணங்குடி உம்மா எனும் முகம்மது பாத்திமா உம்மா, மரியம் ஆயிஷா உம்மா, மூச்சாச்சி நாச்சியார், சையிது மீரா உம்மா, மரியம் பீவி ஹாஜியா முதலானோர் ஞானத் திருப்பணிகளில் ஈடுபட்டனர். இவர்களில் பல அற்புதங்களை நிகழ்த்திய ஆயிஷா உம்மா ‘சுவர்க்கத்துப் பெண்’ என்று போற்றப்பட்டார்.
இறைநேசச் செல்வி ஆமினா உம்மா, தன் மறைவுக்கு மூன்று நாட்களுக்கு முன் ஒரு கனவு கண்டார். சுவர்க்கத்துக் கனி ஒன்றை அவர் சுவைத்து மகிழ்வதாக அந்தக் கனவு அமைந்தது. பிறகு கண்விழித்துப் பார்த்தபோது கனவில் சுவைத்த பழத்தின் பகுதிகள் வாய் ஓரங்களில் ஒட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தார், அதற்குப் பிறகு எந்த உணவையும் தொடாமல் அவர் காலமானார்,