

நடு இரவு. உடலை உறைய வைக்கும் குளிர் காற்று. அபூ யஜீத் தைபர் குளிரைப் பொருட்படுத்தாமல் தொழுது கொண்டிருந்தார். அப்போது, “மகனே!” என்று அழைக்கும் குரல் கேட்டது.
உடனே விரைந்து சென்று, “அம்மா..! அழைத்தீர்களா?” என்று விசாரித்தார்.
“ஆமாம். கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொண்டு வாயேன். தாகமாக இருக்கிறது”
“இதோ! கொண்டு வருகிறேன்”
குவளையில் தண்ணீர் இல்லை. அருகிலிருந்த குடமும் காலியாக இருந்தது.
“தண்ணீர் தீர்ந்துவிட்டது போலிருக்கிறது!” என்று முணுமுணுத்துக் கொண்டார்.
குடத்தை எடுத்துக் கொண்டார். அந்த நடு இரவில் ஆற்றை நோக்கி வேகவேகமாக நடந்தார்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த அபூ யஜீதை தனி ஆளாக நின்று வளர்த்தவர் அவருடைய தாயார். கூலி வேலை செய்து படிக்க வைத்தார். தனது மகனின் எதிர்காலம் நல்ல முறையில் அமைய வேண்டும் என்று தன்னை மெழுகுவர்த்தியாக எரித்துக் கொண்டவர் அவர்.
கும்மிருட்டு, கடும் குளிர் இவை எதையும் பொருட்படுத்தாமல் ஆற்றிலிருந்து நீரை மொண்டு வீடு திரும்பினார். அப்போதும் அவரது தாயார் விழிக்கவில்லை. தாயாரின் தூக்கத்தைக் கெடுக்க விரும்பாமல் அவர் எந்த நேரத்தில் விழித்தாலும் அருந்த நீர் கொடுக்க படுக்கையின் பக்கத்திலேயே நின்றார். இப்படியே நீண்ட நேரம் சென்றது.
திடீரென்று தூக்கம் கலைந்து எழுந்த அவரது தாயார், பக்கத்தில் அபூ யஜீத் நிற்பதைக் கண்டார். நடந்தவற்றைத் தெரிந்துகொண்டார்.
“எனது செல்லமே” என்று பாசத்துடன் அணைத்துக்கொண்டார். குவளையை வாங்கி நீர் அருந்தியவர் அவரைப் பக்கத்திலேயே இருத்திக்கொண்டார். ஆசிர்வதிக்கவும் செய்தார்.
அதன் பிறகு, “மகனே! இந்த அறை ரொம்பவும் புழுக்கமாக இருக்கிறதப்பா. கதவைச் சற்று திறந்து வைத்துவிட்டு நீ போய் படுத்துக்கொள்!” என்றார்.
அபூ யஜீத் தனது தாயார் சொன்னதை உடனே செய்தார். பலத்த காற்றில் கதவு மூடிவிடாமல் இருக்க அதிகாலைவரை கதவின் பக்கத்திலேயே அமர்ந்திருந்தார்.
இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆகின. தனது தாயாரின் இரண்டு விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றிய அந்த இரவை ஈரானைச் சேர்ந்த இறைஞானி, அபு யஜீத் தைபர் என்றுமே மறக்கவில்லை.
“வைகறை நேரத்தில் நான் தொழுதுகொண்டிருப்பேன். எந்தக் கதவை என் அம்மாவின் திருப்திக்காக திறந்து வைத்து விழித்திருந்தேனோ அதே கதவு வழியாக ஜில்லென்று இறைவனின் அருள் நுழைவதை நான் உணர்ந்திருக்கிறேன்!” என்பார்.
“அம்மாவை மகிழ்வித்ததால் நான் இத்தகைய உயர்ந்த நிலைக்கு வர முடிந்தது. இறையன்பையும், ஒழுக்கப் பண்புகளையும் பெற முடிந்தது. வாழ்வின் துன்பமான நேரங்களில் எனது தாயாருக்கு அதிகமதிகமாக பணி விடை செய்வேன். உடனே, எனது துன்பங்கள் விலகி இன்பமயமாகிவிடும்!” என்றும் அபூ யஜீத் தமது மாணவர்களிடம் சொல்லுவார்.
உண்மைதான்..! பெற்றோரின் மகிழ்ச்சி இறைவனின் மகிழ்ச்சி அல்லவா?