

இறைவனிடம் இறைஞ்சி நிற்பதால் மனித மனம் அமைதி அடைகிறது. இதையே திருக்குர்ஆன், “அறிந்து கொள்ளுங்கள்! இறைவனை நினைவு கூர்வதில்தான் உள்ளங்கள் நிம்மதி அடைகின்றன” என்கிறது.
“அடியான் கையேந்தி இறைவனிடம் இறைஞ்சும்போது அவனை வெறுங்கையுடன் அனுப்புவதற்கு இறைவன் வெட்கப்படுகின்றான்!” என்று கூறும் நபிகளார், “பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வதில் சிறிது தாமதமானாலும் அடியான் அவசரப்படக் கூடாது. ஏனெனில், பிரார்த்திப்பவன் கேட்பதையே சில நேரங்களில் இறைவன் கொடுக்கின்றான். சில நேரங்களில், அதைவிடச் சிறந்ததையும் கொடுக்கிறான் அல்லது பிரார்த்தனையைக் கொண்டு அடியானுக்கு வரவிருக்கும் ஆபத்துக்களை நீக்குகிறான்!” என்றும் அறிவுறுத்துகிறார்.
திருக்குர்ஆனில் இப்படி உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. “நிச்சயமாக நான் அவர்களுக்கு அருகிலேயே இருக்கிறேன்; என்னை எவரேனும் அழைத்தால் அவ்வாறு அழைப்பவரின் அழைப்புக்கு மறுமொழி சொல்கிறேன்!”