

கடல் கடந்து போனாலும் தங்களின் பூர்வீக வழிபாட்டைத் தாங்கள் வாழும் இடங்களுக்கும் எடுத்துச் செல்வதே மனித இயல்பு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு புதுவை வந்த பிரான்ஸ் தேசத்தவர்களும் இதற்கு உதாரணமாய் இருக்கின்றனர். புதுவை கடற்கரையைநோக்கி கிரேக்க-ரோமன் கட்டடக் கலை நுட்பத்துடன் அமைந்துள்ளது புனித மேரி தேவாலயம் எனப்படும் கப்ஸ் கோவில்.
இந்தியாவிற்குள் வெளிநாட்டார் குடியேறியபோது பல்வேறு வழிபாட்டு முறைகளும் இங்கு வரத் தொடங்கின. புதுச்சேரியை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தோர் தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தவுடன் தங்களின் வழிபாட்டை இங்கேயும் தொடங்கினார்கள். 1674-ல் கபுசின்ஸ் சபை பிரெஞ்சு பாதிரியார்கள் புதுவை வந்து பிரார்த்தனைக் கூடம் கட்டினர். நீண்ட காலம் இக்கூடம் நிலைக்கவில்லை. 1739 முதல் 1758-ம் ஆண்டு வரை கபுசின்ஸ் தேவாலயம் பெரிய அளவில் எழுப்பப்பட்டது. ஆனால், 1761ல் புதுவைக்கு படை யெடுத்து வந்த ஆங்கிலேயப் படை நகருடன் தேவாலயத்தையும் சூறையாடியது.
மீண்டும் புதுச்சேரி பிரான்ஸ் தேசத்தவரின் ஆளுகைக்குள் வந்தது. இதையடுத்து 1765 முதல் 1770-ம் ஆண்டு வரை மூன்றாவது முறையாக தேவாலயம் கட்டும் பணியைத் துடிப்பாக முடித்தனர். அப்போது பிரான்சில் புரட்சி வெடித்ததால் பல ஆண்டுகள் பிரார்த்தனை நடத்த முடியாமல் போனது. இதனால் பிரார்த்தனைக்குத் தனியாக தேவாலயம் கட்ட பிரான்ஸ் தேசத்தவர்கள் முடிவெடுத்தனர். பழைய ஆலயத்தை ஆதரவற்றோர் இல்லமாக மாற்றிவிட்டு, புதிய ஆலயத்துக்கு 1851-ல் அடிக்கல் நாட்டினர்.
நான்கே ஆண்டுகளில் இந்த தேவாலயம் பிரம்மாண்டமாக கட்டியெழுப்பப்பட்டது. கடற் கரையைப் பார்த்தபடி புனித மேரி தேவாலயத்தை அமைக்க முடிவு எடுத்ததவுடன் கட்டடக் கலையை வித்தியாசமாக வடிவமைத்தனர். பிரெஞ்சு-கிரேக்க -ரோமன் கட்டடக் கலையை அடிப்படையாகக் கொண்டு தேவாலயம் உருவானது. கடல் காற்றைத் தாங்கி நீடித்திருக்க, கோழி முட்டையின் வெள்ளைக் கருவைச் சுண்ணாம்பில் சேர்த்துக் கலந்து இந்த தேவால யத்தின் சுவர்கள் பூசப்பட்டன.
தேவாலயத்தின் முன்பு இரு ஸ்தூபிகள் அமைந்துள்ளன. இந்த ஸ்தூபிகள், பிரான்ஸிலுள்ள புனித மேரி தேவாலயத்தின் முகப்பைப் போல் வடிவமைக்கப்பட்டது. ஒரு ஸ்தூபியில் பெரிய அளவிலான மணியும், மற்றொரு ஸ்தூபியில் இசையை வெளிப்படுத்தும் கடிகாரமும் இணைத்தனர்.
பின்பகுதியில் எட்டுத் தூண்களுடன் கொண்ட வளைந்த தோற்றம் கொண்ட உயர்ந்த உச்சி மாடம் அமைந்தது.
1855-ல் புதிய தேவாலயத்தில் வழிபாடு தொடங்கியது. தேவாலயத்தின் எதிரே கடற்கரையும், ஜோன் ஆஃப் ஆர்க் சிலையும் உள்ளது. கோயிலில் கடவுளை அமைதியாக வணங்கிவிட்டு வெளியே வரும்போது கடலையும், ஜோன் ஆஃப் ஆர்க்கையும் தரிசிக்கலாம்.
பிரான்ஸ் நாட்டவர் தங்களின் வழிபாட்டு தேவாலயத்தை உருவாக்க பல முறை பாடுபட்டு, தற்போது கடற்கரை சாலையிலிருந்து பார்க்கும் வகையில் சுர்கூப் வீதியிலுள்ள இந்த ஆலயம் நான்காவதாகக் கட்டப்பட்டது.
புனித மேரி தேவாலயமாக இருந்தாலும் தங்களின் ஆதிகால கபுசின்ஸ் சபையின் பெயரை நினைவுக்கூறும் வகையில் கபுசின்ஸ் கோயிலென்றும் அழைத்தனர். இந்த வார்த்தை நாளடைவில் கப்ஸ் கோயிலானது.
பல நூற்றாண்டுகளைத் தாண்டி அருள்பாலிக்கும் தேவாலயத்தின் அழகிலும் அமைதியிலும் மனம் உருகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஞாயிறு தோறும் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் பிரார்த்தனையைக் கேட்பது அருமையான அனுபவமாகும்.