

அருள்மிகு வானமுட்டி பெருமாள் என்கிற ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் 7-ம் சம்வஸ்திரா அபிஷேக விழா புதன்கிழமை 25.06.14 அன்று நடைபெறவுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் சோழன்பேட்டை கிராமம் கோழிகுத்தியில் உள்ள இத்திருக்கோவிலில் காலை 7.30 மணி முதல் 10 மணி வரை பகவத் பிரார்த்தனை தொடங்கி மகா சங்கல்பம், புண்யாகம், அக்னி ஆராதனம், கெடஸ்தாபனம், விசேஷ ஹோமங்கள், பூர்ணாஹூதி, நவகலச திருமஞ்சனம், விசேஷ அலங்காரம் ஆகியன நடைபெறும். பின்னர் பகல் பன்னிரெண்டு மணி வரை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், திருவாராதனம், மகா தீபாராதனை, சாற்று முறை, ஆசிர்வாதம், பிரசாத விநியோகம், அன்னதானம் ஆகியன நடைபெறும்.
இங்கு வந்து தரிசனம் செய்தால், பிதுர் தோஷம், ஹத்தி தோஷம், சனி தோஷம் ஆகியன விலகுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். 1200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இத்திருக்கோவிலின் மூலவர் ஸ்ரீ வானமுட்டி பெருமாள் 14 அடி உயரத்தில் அத்திமரத்தால் ஆனவராகக் காட்சி அளிக்கிறார். இம்மூலவரது திருநாமம் ஸ்ரீ பக்தப்ரியன், வரதராஜன் என்பதாகும்.