

ஒரு நாள் நான் மறை ஞானி சூஷியா பற்றி படித்துக் கொண்டிருந்தேன்.
அவர் ஒரு நாள் மலைப்பகுதிக்குச் சென்றார். அங்கே ஒரு மனிதன் அழகிய பறவைகளைப் பிடித்து கூண்டுக்குள் அடைப்பதைப் பார்த்தார். சூஷியா, அந்தக் கூண்டைத் திறந்து அனைத்துப் பறவைகளையும் பறக்கவிட்டார். ஏனெனில் பறவைகள் பறப்பதற்கானவை. எல்லாப் பறவைகளும் பறந்து விட்டன.
பறவைகளைக் கூண்டில் அடைத்த மனிதன் திரும்பி வந்தான்.
“என்ன காரியம் செய்துவிட்டாய்” என்று மறைஞானி சூஷியாவிடம் கேட்டான். “பறவைகள் பறப்பதற்கானவை. அவற்றின் சிறகுகள் எத்தனை அழகானவை” என்று பதிலளித்தார்.
ஆனால் அந்த மனிதனோ, சூஷியா மேல் கோபம் கொண்டான். அன்றைய நாள் முழுவதும் அவன் அளித்த உழைப்பெல்லாம் வீணாகிவிட்டதே என்ற வெறியில் சூஷியாவை அடிக்கத் தொடங்கினான். பறவைகளைச் சந்தையில் விற்றுத் தன் தேவைகளை நிறைவேற்ற அவன் திட்டமிட்டிருந்தான்.
சூஷியாவை எவ்வளவு அடித்தும் அவர் சிரித்துக்கொண்டே இருந்தார். அவருக்கு அந்த அடிகள் மேலும் ஆனந்தத்தைத் தந்தன. அடித்தவனோ நொந்துபோனான். இந்த மனிதர் பைத்தியம்தான் என்ற முடிவுக்கு வந்து தனது தாக்குதலை நிறுத்தி தன் வீட்டுக்குத் திரும்ப முடிவுசெய்தான்.
“உன் வேலை முடிந்ததா? இன்னும் ஏதாவது மிச்சமுண்டா? நானும் வீட்டுக்குப் போக வேண்டும்” என்றார் சூஷி.
அடித்த மனிதனால் பதிலளிக்கவே இயலவில்லை. எப்படி பதிலளிப்பது. சூஷியா ஒரு பாடலைப் பாடத் தொடங்கினார். அவர் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தார். பறவைகள் வானத்தில் பறந்துகொண்டிருந்தன. அவருக்குக் கிடைத்த அடியோ ஆனந்தமாக இருந்தது. வலிக்கவேயில்லை. அவருக்கு அது ஒரு சிறந்த பரிசாகத் தோன்றியது. இத்தனைக்கும் பிறகு கடவுளுக்கு நன்றி சொல்ல முடிகிறதே என்று மேலும் ஆனந்தப்பட்டார். அவருக்குப் புகாரே இல்லை.
ஒரு சூழ்நிலையின் தரமே மாற்றப்பட்டுவிட்டதாக அவர் நினைத்தார்.
இதுதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. படிப்படியாக மனிதனின் மனம் விரிவடையும் போது, எல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகிறது. ஆம், மரணம்கூட. அப்போதுதான் நம்மிடமிருந்து பாடல் பிறக்கும். ஆம், இருட்டிலும் அப்போதுதான் ஒளி வரும். இரவை நாம் ஒட்டுமொத்தமாக எப்போது ஏற்றுக்கொள்கிறோமோ, எப்போது காலை குறித்து ஏங்காமல் அலைக்கழியாமல் இருக்கிறோமோ அப்போது காலை வருகிறது. அப்படித்தான் அது வருகிறது. அந்த வழியில்தான் அது வருகிறது.