

இடையில் ஆடை இல்லாமல், மூலவராக நிர்வாணக் கோலம் கொண்ட ஒரே தெய்வம் கால பைரவர். பக்தர்களின் சொத்தைக் காக்கும் சொர்ண பைரவர் என்ற சிறப்புப் பெயரைக் கொண்டவர். பிரதான கடவுளர் குடி கொண்டுள்ள கோயில்களில் உள்ள விலை உயர்ந்த பொருட்களைக் காப்பவர் கால பைரவர் என்பது நம்பிக்கை.
இதனால் அக்காலத்தில் சைவத் திருக்கோயில்களில் தனிச் சந்நிதி கொண்டுள்ள கால பைரவர் காலடியில் கோயிலின் பிற சந்நிதிகளைப் பூட்டி, அந்தச் சாவிகளை பைரவர் காலடியில் வைப்பார்கள். கால பைரவர் காலடியில் உள்ள கோயில் சாவிகளைத் தொட்டாலே அவர் தண்டித்துவிடுவார் என்ற பயம் திருடர்களுக்குக்கூட இருந்தது.
இந்த நம்பிக்கையை ஒட்டி, தற்காலத்தில் புதுப் பழக்கமாக, வீடு, பீரோ, வண்டி ஆகியவற்றின் சாவிகளைக் கொத்தாகக் கால பைரவர் காலடியில் வைத்து வணங்கிப் பெற்றுக்கொள்வது உண்டு. தேய் பிறை மற்றும் வளர்பிறை அஷ்டமிகளில் நடைபெறும் அபிஷேக ஆராதனைக்குப் பின் இவ்வாறு செய்யப்படுகிறது.
பக்தர்களுக்கு அருளும் கால பைரவர், பகைவர்களிடமிருந்தும் அவர்களைக் காக்கிறார் என்பது நம்பிக்கை. இந்தக் கால பைரவர் யார்? இவர் கொண்ட கோலம் என்ன?
ஆதியில் சிவனும், பிரம்மாவும் ஐந்து தலைகள் கொண்டிருந்தனர். ஆனாலும் ஐம்முகங்களும் தனக்கே அழகாய் உள்ளது என்று எண்ணிய பிரம்மா கர்வம் கொண்டார். விளைவு தேவையில்லாமல் சிவனை நிந்திக்கத் தொடங்கினார். இதனை முதலில் கண்டும், காணாமலும் இருந்த சிவன், பொறுக்க முடியாத அளவுக்குச் சென்ற பின்னர், பிரம்மனைத் தண்டிக்க முடிவு செய்தார்.
பிரம்மனின் தலை கொய்த பைரவர்
எரிகிற கொள்ளியை இழுத்தால், அடுப்பு அணையும் அல்லவா? ஐந்து தலைகளாக இருப்பது அழகு என்ற எண்ணம்தானே பிரம்மனை ஆட்டிப் படைக்கிறது. அதில் ஒன்றைக் கொய்தால் என்ன என்ற சிந்தனை வயப்பட்ட சிவன், இந்த வேலையைச் செய்ய தன்னுடைய அஷ்ட பைரவர் கோலங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். பிரம்மனின் ஒரு தலையைக் கிள்ளி எடுத்தார். ஒரு தலை போய் நான்கு தலையுடன் விளங்கிய பிரம்மனுக்கு, அன்று முதல் சதுர் முகன் என்ற பெயர் தோன்றியது.
ருத்ர பைரவராகத் தோன்றிய சிவன், காண்பதற்குச் சிவந்த நிறத்துடனும், ஜூவாலை வீசும் மேல் நோக்கிய தலைமுடியுடனும் காட்சி அளித்தார். இந்தத் தலைமுடியில் செருகினாற்போலச் சந்திர பிரபை காணப்பட்டது. தலைமுடியோ சுடும் ஜுவாலை. அதில் இருந்தது குளிர் நிலவு. என்னே ஒரு முரண்?
நான்கு திருக்கரங்கள் கொண்ட அவரது கைகளில் உடுக்கை, சூலம், பாசக்கயிறு ஆகியன இருக்க, இவரது நான்காம் கரத்தில், இவர் கொய்த பிரம்மாவின் ஐந்தாம் தலை. பூத, பிசாசக் கூட்டங்களை அடக்கி ஆளும், தலைவராக விளங்குகிறார் பைரவர். அதனால், பூத, பிசாச பயங்களில் இருந்து விடுபட விரும்புபவர்கள், இவரை வணங்குவது நன்மை தரும் என்பது நம்பிக்கை.
ஆணவம் கொண்ட பிரம்மனின் கபாலத்தைக் கொய்ததால் ஆணவத்தை அடக்குவதற்காகவே தோன்றியவர், இந்த ருத்ர பைரவர் எனலாம். பிரம்மனின் தலை கொய்த நிகழ்வு நடந்தேறிய இடம் தமிழகத்தில் உள்ள திருக்கண்டியூர் என்பார்கள்.
சிவன் கோயில்களில் ஒற்றை நாயை வாகனமாகக் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கும் கால பைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை அணிவித்தல் விசேஷம். சிறிய சிவப்புத் துணியில் சில மிளகுகளை இட்டுக் கட்டி, அதனை விளக்கில் வைத்து நல்லெண்ணெய் விட்டுத் தீபம் ஏற்றி வழிபடலாம். இதற்கு மிளகு தீபம் என்று பெயர். ஒன்று அல்லது எட்டு என்ற எண்ணிக்கையில் ஏற்ற வேண்டும்.
பைரவரின் நாமங்கள்
எட்டுத் திருநாமங்கள் கொண்டிருக்கிறார் பைரவர். அவை: கால பைரவர், அசிதாங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், க்ரோத பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர். இவர்களின் தேவியராக முறையே பிராம்மஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை ஆகியோர் விளங்குகின்றனர். காசியில் பைரவருக்கே முதல் ஆராதனை என்பதால் இது மிகப் பிரபலம். அதற்குப் பின்னரே காசி விஸ்வநாதருக்கு ஆராதனை நடைபெறும். காசி மாநகரைக் காக்கும் கடவுள் கால பைரவரே.
சொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த பைரவர், அமர்ந்த திருக்கோலத்தில் காணப்படுவார். சொர்ணாகர்ஷண பைரவர் என்ற பெயர் கொண்ட இவர், பைரவி என்ற திருநாமம் பெற்ற தனது மனைவியைத் தனது மடியில் இருத்திக்கொண்டு காட்சி அளிப்பார். இரு கரங்களுடன் காட்சி அளிக்கும் இவர் ஒரு கரத்தில் தங்கக் கலசத்தில் அமிர்தமும், மறு கரத்தில் சூலமும் வைத்திருப்பார். வைரக் கிரீடமும், பட்டு வஸ்திரமும் அணிந்திருப்பார். தம்பதி சமேதராகக் காட்சி அளிக்கும் இவரை அஷ்டமி திதி மற்றும் பவுர்ணமி நாளில், வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் வணங்கினால் பொன், பொருள் உட்பட சகல சம்பத்துகளும் பெறலாம் என்பது ஐதீகம்.