

‘ஸுமநஸ்' என்றால் நேர் அர்த்தம் ‘நல்ல மனம்'. நல்ல மன விசேஷம்தான் தேவ சக்தி. துஷ்ட மனம்தான் அசுர சக்தி. புஷ்பத்துக்கும் ஸுமநஸ் என்று பேர் உண்டு. ஒரு செடி அல்லது கொடியின் நல்ல மனம் மாதிரி இருப்பது அதன் புஷ்பம்.
நல்ல மனசுக்கு அடையாளம், அதில் அன்பு ஊறிக் கொண்டிருப்பதுதான். இம்மாதிரி ஒரு செடியிலோ கொடியிலோ மாதுர்யத்தின் சாரமான தேன் ஊறிக்கொண்டிருப்பது அதன் புஷ்பத்தில்தானே? அதன் பழத்தை விடவும் தித்திப்பு தேன்தான்.
கசப்பாகக் கசக்கும் காய், பழம் கொண்ட தாவரவகைகள் எத்தனையோ உண்டு. ஆனால் அவற்றிலும் புஷ்பத்திலே ஊறுகிற தேன் கசப்பாக இருப்பதாக எங்குமே கிடையாது.
ஒரு செடி அல்லது கொடியில் பார்க்கவும் ரொம்ப அழகானது, ஸ்பர்சத்துக்கும் ரொம்ப மென்மை யானது, வாசனையும் அதிகம் கொண்டது, எல்லாவற்றுக்கும் மேலாக அதனுடைய பரம மாதுர்ய சாரத்தைத் தருவது அதன் புஷ்பந்தான்.
இப்படிச் சொன்னதால் ஐம்புலன்களில் கண், சருமம், மூக்கு, நாக்கு ஆகிய நான்குக்கும் ஒரு புஷ்பம் இன்பம் ஊட்டுவதாகத் தெரிகிறது. கண்ணுக்கு ரொம்பவும் அழகான ரூபம் பூவுக்கு இருக்கிறது. சருமத்துக்குச் சுகமாக அதன் மிருதுத்தன்மை. மூக்குக்கு நல்ல சுகந்தம். நாக்குக்கு ருசியான தேன். பாக்கி இருப்பது காது. அந்தக் காதுக்கு இன்பமான வண்டுகளின் ரீங்காரத்தையும் ஒரு புஷ்பம் தன் தேனைக் கொண்டு வரவழைத்துவிடுகிறது.
சுமநஸ் என்றால் அழகானது என்று அர்த்தம். இப்படி நல்ல மனம், அழகு, தேவர்கள், புஷ்பம் ஆகிய நாலுக்கும் ‘ஸுமனஸ்' என்று பெயரிருப்பதை வைத்துச் சிலேடை செய்து பல சுலோகங்கள் உண்டு. அனந்தராம தீட்சிதர் பிரபலப்படுத்திவரும் மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்தரத்தில்கூட இப்படி ‘ஸுமநஸ்-ஸுமநஸ்' என்று மூன்று நாலுதரம் அடுக்கிக்கொண்டு போயிருக்கிறது.
‘நல்ல மனம் கொண்ட தேவர்கள் அர்ச்சனை பண்ணுகிற அழகான புஷ்பங்களின் நிரம்பவும் மனோகரமான காந்தியுடன் கூடியவளே!' என்று ஸ்தோத்தரிக்கும்போது, ‘நல்ல மனம்', ‘தேவர்கள்', ‘அழகு', ‘புஷ்பம்', ‘நிரம்பவும் மநோஹரமான' என்கிற ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘ஸுமந'வைப் போட்டு அழகாக சுலோகம் அமைக்கப்பட்டிருக்கிறது.
தேவர்களாலும் பூஜிக்கப்படுபவர் பிள்ளையார் என்று சொல்லும்போதே நல்ல மனம் கொண்ட எவரானாலும் அவரைப் பூஜை பண்ணித்தான்விடுகிறார்கள் என்று தெரிவித்துவிடுகிற மாதிரி “வாகீசாத்யா:ஸுமநஸ:” என்று, தேவர்களை, குறிப்பாக இந்த ஸுமனஸ் என்ற பெயரால் சொல்லியிருக்கிறது.
நல்ல மனமுள்ளவரெல்லாம் ஒருத்தரைப் பூஜை பண்ணுகிறார்களென்றால், அப்படிப் பூஜிக்கப்படுபவரும் ரொம்ப நல்ல மனசு படைத்தவராகத்தானே இருக்க வேண்டும்?
தெய்வத்தின் குரல் (நான்கு மற்றும் ஐந்தாம் பகுதிகள்)
ஜனவரி 6: காஞ்சி மகாபெரியவர் ஆராதனை
விடுமுறை நாட்கள்
குழந்தைகளை எப்போது பார்த்தாலும் படிப்பு என்று கெடுபிடி பண்ணாமல் ரெஸ்ட் கொடுக்கும் அருள் உள்ளம் நம் பூர்விகர்களுக்கு இல்லாமலில்லை. அத்யயனமில்லாத இந்த லீவு நாட்களுக்கு அநத்யயன தினங்களென்று பெயர். ஒவ்வொரு மாசமும் அமாவாஸ்யை, பௌர்ணமி, இரண்டு பட்ச அஷ்டமி - சதுர்தசிகள் என்று ஆறு நாள் அநத்யயனம். இது தவிர ஒவ்வொரு கோர்சும் முடிந்த பின் மூன்று மூன்று நாட்கள் அநத்யயனம். இதோடு ‘சாதுர்மாஸீ’ என்றும் வருஷத்தில் நாலு நாள் லீவு.
இதெல்லாம் பஞ்சாங்கக் கணக்குப்படி வருஷம் தவறாமல் வரும் லீவு நாட்கள். அதனால் இவற்றுக்கு “நித்ய” அநத்யயனம் என்று பெயர். இது தவிர நாம் கணிக்க முடியாமல் எப்போது வேண்டுமானாலும் ஒரு “நிமித்த”மாக லீவு விட வேண்டிய “நைமித்திக” அநத்யயனங்களும் உண்டு.
மழை அடிக்கிறது, புயல் அடிக்கிறது என்றால், காட்டிலே நெருப்புப் பிடித்துக் கொண்டுவிட்டது என்றால், நாட்டுக்குத் தலைமறைவாக ஒளிந்துகொண்ட கொள்ளைக் கூட்டத்துக்காரர்கள் இங்கே காட்டிலேயும் குருகுலங்களை இம்சிக்க வருகிறார்கள் என்றால், அப்போதெல்லாம் லீவு விட்டுவிடுவார்கள். இச்சமயங்களில் பாடத்தை நிறுத்திவிட வேண்டுமென்று மநுதர்ம சாஸ்த்ரத்தில் மநுஷ்ய மனசை அநுதாபத்தோடு அறிந்துகொண்டு சொல்லியிருக்கிறது.